BREAKING NEWS
Search

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்! – தமிழருவி மணியன்

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்! – தமிழருவி மணியன்

தமிழ் ஈழப் பிரச்சினையில் சரியான பாதை எது என்று தெரிந்தும், மிச்சமிருக்கும் பதவிக் காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், சேர்த்து வைத்த செல்வங்களைக் காத்துக் கொள்ளவும் கருணாநிதி காங்கிரஸின் கையை விடாமல் பற்றிக் கொண்டார்”

– இப்படித்தான் ஈழப் பிரச்சினையில் அவரது குழப்பங்கள் குறித்து பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முழுமையான ஈடுபாடு, தெளிவான எண்ணம் இல்லாத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. இந்தத் தள்ளாத வயதில், தன் உடல் ஒத்துழைக்காத நிலையிலும், கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதம், மிக கேவலமாக சித்தரிக்கப்படக் காரணம் முழுமையான ஈடுபாடு, தெளிவான எண்ணம் இல்லாததுதான்.

தமிழினத் தலைவர் என்ற மிகப்பெரிய அந்தஸ்திலிருந்து, ஒரு சாதாரண அரசியல்வாதி என்ற நிலைக்கு அவர் இன்று தள்ளப்பட்டது இதனால்தான்.

இதுகுறித்து விகடனில் சமீபத்தில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரை இது.

“ஈழத்தமிழர் விவகாரத்தில்,  ‘ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்’ என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!”

-என்ற தமிழருவி மணியனின் வரிகள், கலைஞரின் இன்றைய நிலையை எடுத்திச் சொல்லப் பொருத்தமானவையாகவே உள்ளன.

ண்ணாவிரதம் கலைஞரின் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு, அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர்வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்ற செயல்.p12b

உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது. அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்…’ – என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ்.

அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.

‘தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்’ என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம் நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான்.

தமிழகத்தின் ஆட்சி நாற் காலியை அலங்கரிக்கும்கலைஞர், அண்ணா சமாதியில்யாரை எதிர்த்து அரை நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்? ‘இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய இந்த உண்ணாநோன்பை மேற் கொண்டிருக்கிறேன்’ என்று அவர் அறிவித்ததற்கு என்ன அர்த் தம்? பல்லாயிரம் தமிழர்களை பலிவாங்கிய ராஜபக்ஷே அரசைக் கடுமையான மொழியில் கண்டிக்காமல், புழுக்கத்தோடு புலம்புவதா தமிழகத்தின் உரிமைக்குரல் கொடுக்கும் தனிப்பெரும் தலைவரின் போர்ப் பரணி?

பதினெட்டு முறை உண்ணா நோன்பிருந்து, ஒவ்வொரு முறையும் கோரிக்கை நிறைவேறிய பின்பே அந்த அகிம்சைப் போரை நிறுத்தியவர் அண்ணல் காந்தி. அவரேகூட, ‘என்னை நேசித்தவர்களைச் சீர்திருத்தவே நான் உண்ணாநோன்பை மேற்கொண்டேன்.

என்னை நேசிக்காத, என்னுடைய எதிரியாகக் கருதிய தளபதி ஜெனரல் டயரைச் சீர்திருத்துவதற்கு நான் உண்ணாநோன்பிருக்க மாட் டேன்!’ என்றார்.

ஒருவேளை, கலை ஞரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்காமல்… தான் மிக அதிகமாக நேசிக்கும் ‘சொக்கத் தங்கம்’ சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் சீர்திருத்தும் நோக்கோடுதான் காந்திய வழியில் அரை நாள் தியாகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தாரோ?p12a

இந்த உண்ணாவிரதத்துக்கு பலன் இருக்கும் என்று கலைஞர் முழுமன தாக நம்பியிருப்பாரேயானால்… அதுவும்கூட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால்… எத்தனை குழந்தைகள் பிழைத்திருக்கும்… எத்தனை குடும்பங்கள் தழைத் திருக்கும்… எவ்வளவு ஆண்களும் பெண்களும் சாவுப் பள்ளத்தில் சரிந்துவிழாமல் ஈழ நிலத்தில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்! பாழாய்ப் போன நாடாளுமன்றத் தேர்தல், மூன்று மாதங்களுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா?

இதற்கும்தான் எவ்வளவு விளம்பரம்; எத்தனை ஆர்ப்பாட்டம்! புலர்காலைப் பொழுதில் அண்ணா சமாதியில் கலைஞர் தன் உயிரை பலியிடும் முடிவோடு(!) உண்ணாநோன்பில் உட்கார்ந்தார்.

தொண்டர்கள் கூடினர். தலைவர்கள் திரண்டனர். உண்ணாநோன்பைக் கைவிடும்படி அவர்கள் உயிர் உருகக் கதறியபோதும் கலைஞர் அசைந்து கொடுக்கவில்லையாம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் அறிவுறுத்தியபடி கலைஞர் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார். உண்ணாநோன்பு உக்கிரமான சூழலை நெருங்கியதாம்! ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டாராம்.

ஆறு மணி நேர உண்ணாநோன்பில் ராஜபக்ஷே அச்சத்தின் மடியில் விழுந்துவிட்டதாகவும், அலறியடித்துப் போரை நிறுத்திவிட்டதாகவும் செய்தி சொன்னாராம். தன் ஆற்றல் முதல்வருக்கு அப்போது உடனே புரிந்துவிட…

படுக்கையிலிருந்து கலைஞர் எழுந்தார். ‘இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது’ என்று பிரகடனம் செய்தார். ஈழத் தமிழினம் ஒரு வழியாக உயிர் பிழைத்ததறிந்து அவரைச் சுற்றி வாழ்த்தொலிகள், ஜெய கோஷம்! ‘சர்வதேச நாடுகள் சாதிக்க முடியாததை ஒரு தனி மனிதர் சாதித்தார்’ என்று ‘வீரமணி’களின் புகழாரம்; திருமாக்களின் தேவாரம்! உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த உண்ணாநோன்பும் வெற்றி பெற்றதில்லை.

புன்னகையுடன் கலைஞர் கோபாலபுரம் நோக்கி காரில் பறந்தார். உண்ணாநோன்பு ‘வெற்றி’க்குப் பின்பு இருபது நிமிடங்களில், முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தின் முப்படைத் தாக்குதல்களில் 272 அப்பாவித் தமிழர் அழிந்துபோயினர்.

‘தீவிரவாதி களை ஒழிக்கும் செயலில் ராணுவத்துக்கு வெற்றி நெருங்கி வந்திருக்கும் நிலையில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளில் இருந்து ஓயப்போவதில்லை’ என்ற ராஜபக்ஷேவின் ஆணவக் குரல் உலகின் காதுகளில் விழுந்தது.

கலைஞரும், ‘மழை நின்றுவிட்டது; தூவானம் தொடர்கிறது’ என்று கவித்துவத்தோடு பேட்டி கொடுக்கிறார். கொத்துக் குண்டுகளை நம் சொந்த சகோதரர்களின் குடும்பங்கள் மீது தொடர்ந்து வீசுவதை முல்லைத்தீவுப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து ஐ.நா. சபை வெளியிட்டது.

அது கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் குளிர் மழையாகத் தெரிகிறதா? ‘ஒருவர் செத்தால் ஊர் சுமக்கும். ஊரே செத்தால் யார் சுமப்பார்…’ என்ற அதீத அவலம்!

‘கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்’ என்று ஒருவர் சொன்னதும், ‘கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?’ என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.

‘மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கை இறையாண் மைக்கு உட்பட்ட அரசியல் தீர்வு அமையவேண்டும் என்கிறார்கள். என் கருத்தும் அதுதான்’ என்கிறார், நேற்று தமிழீழம் கேட்டுக் கலிங்கத்துப்பரணி பாடிய கலைஞர்! ‘வள்ளித் திருமண’ நாடகத்தில் வேலனாக நடிப்பவரே, அடுத்து வேடத்தை மாற்றி விருத்தனாக நடிப்பது போல்… இந்த ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தில் கலைஞர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பார்.

சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரச மதம், சிங்களர் மட்டுமே ஆளப் பிறந்தவர் என்று பேசும் காடையர்களோடு தமிழர் கலந்து வாழ்வது சாத்தியமா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிறுத்தி… ஓர் இன அழிப்புப் போரை ‘பயங்கரவாத அழிப்பு’ என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தும் சிங்கள மனநோயாளிகளுடன் இனியும் தமிழர், இறையாண்மைக்கு உட்பட்டு இணைந்து வாழக் கூடுமா?! தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசா வாவுக்கும், இந்தோனேஷியாவிலிருந்து விடுபட்ட கிழக்கு தைமூருக்கும் ஒரு நீதி; ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?!

கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு முப்பது லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளிகள் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். ஒரு முகாமில் மட்டும் முப்பதாயிரம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர்.

மனித உரிமைகள் காற்றில் பறந்தன. இந்திய ராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திரா காந்தியின் தயவால் புதிய வங்க தேசம் தனி நாடாகப் பிறந்தது. பாகிஸ்தான் இரண்டாகப் பிரிவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருந்தது.

சோனியாவின் வழிகாட்டுதலில் இயங்கும் மன்மோகன் அரசு இந்திய நலனுக்காகவே இலங்கைத் தீவு ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த’ ப.சிதம்பரம் போன்றவர்கள், ‘யார் முத்துக்குமார்?’ என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!p12

அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. ‘ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!’ என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன்.

இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.

ரோமாபுரியின் செனட்டராக இருந்த டேசிடஸ், ‘A bad peace is even worse than war’ என்றதுதான் ப.சிதம்பரத்தின் பேச்சையும், என்றும் மணக்காத கலைஞரின் காகிதப் பூ நாடகக் காட்சிகளையும் காணும்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

வின்ஸ்டன் சர்ச்சில் எதற்கும் நேரடியாக பதிலளித்ததில்லை. ஒருவர் அவரிடம், ‘இப்போது மணி என்ன?’ என்றார். உடனே சர்ச்சில், ‘உங்கள் கடிகாரத்தில் மணி என்ன?’ என்று கேட்டார்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர், சர்ச்சிலைப் போல் சாமர்த்தியம் காட்டுகிறார். ‘ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்’ என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!

-விகடன்
One thought on “கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்! – தமிழருவி மணியன்

  1. ஜெ

    “தமிழின தலைவர் என்ற பட்டம் நிலைக்கவேண்டுமனால் முதல்வர் தன்னை முடுக்கிவிட்டுக்கொள்ள வேண்டும் ” – என்று மணியன் அவர்கள் எழுதியதால் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீட்டை காலி பண்ணினார் கலைஞர்.

    அடுத்து என்ன செய்வார் கலைஞர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *