BREAKING NEWS
Search

கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை! – கருணாநிதி

கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை! – கருணாநிதி

சென்னை: சினிமாவில் சம்பளமாக கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப் பேச அருகதையில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்- அவர்களோடு கூட்டணி கிடையாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவருடைய அந்த அறிவிப்பை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. நானும் படித்துப் பார்த்தேன். ஒரேயொரு ஒப்பீட்டு உதாரணத்தை மாத்திரம் இதுபற்றிச் சொன்னால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப் போல பொதுமக்களுக்கு உண்மை விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.

தி.மு. கழகத் தலைவனாக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கிவிடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், 2004-2005-ம் ஆண்டில் “மண்ணின் மைந்தன்” திரைப்படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் – “கண்ணம்மா” படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமே, தம்பி மு.க. ஸ்டாலினை நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.

அது போலவே 9-7-2008 அன்று “உளியின் ஓசை” படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூபாய் 25 லட்சத்தில் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்தக் கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.

கருணாநிதி அறக்கட்டளை…

அஃதன்னியில் 2005 நவம்பர் முதல் 2010 ஆகஸ்ட் மாதம் வரை மாதந்தோறும் ஏழையெளியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்றும் ஐயாயிரம் ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் என் பெயரால் உள்ள “கலைஞர் கருணாநிதி அறக் கட்டளை” நிதியிலிருந்து வழங்கி வருவதன் மூலமாக இதுவரை 2049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழியாக வழங்கிட, ஒரு கோடி ரூபாயை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினேன்.

இந்த நிதியைக் கொண்டு, “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை” என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கச் செய்திருக்கிறேன்.

மாணவர்களுக்கு உதவி

மேலும் ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் அறக் கட்டளை ஒன்றை உருவாக்கி கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.

அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “பின்லாந்து” நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு முதன் முறையாக பத்து லட்சம் ரூபாய்க்கான இந்த விருது வழங்கப்பட்டது.

இஃதன்னியில் “பெண் சிங்கம்” திரைப்படத்திற்காக எனக்குக் கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்த்திருக்கிறேன். அந்தத் தொகையினை அருந்ததியர் நல வாரியத்தின் மூலமாக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க வழங்கப்படும் என்று அறிவித்து, அப்படி வழங்க முற்பட்ட போது, அந்த 50 லட்சம் ரூபாய் போதாமல், மேலும் பதினோறு லட்ச ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்த போது, அந்தத் தொகையையும் வங்கியில் இருந்த என்னுடைய நிதியிலிருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்து, மாணவர்களுக்கு அதை வழங்கச் செய்தேன்.

இளைஞனுக்கு வசனமெழுத ரூ 50 லட்சம்!

அது போலவே “இளைஞன்” திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில், வருமான வரித் தொகை போக எஞ்சிய 45 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்து, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக அந்தத் தொகையை வழங்கச் செய்தேன்.

என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும், பொற்காசுகளையும் கூட அப்படியே முதல்வர் பொது நிவாரண நிதியிலே சேர்த்தேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 14-4-2010 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் எனக்கு அளித்த “அம்பேத்கர் சுடர்” விருதுடன் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினையும் முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன.

கறுப்புப் பணம்….

அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்- மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே,

அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது-உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது! பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

-இவ்வாறு அதில் கூறியுள்ளார் கருணாநிதி.
2 thoughts on “கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை! – கருணாநிதி

 1. Elayaraja

  அது போலவே “இளைஞன்” திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில், வருமான வரித் தொகை போக எஞ்சிய 45 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்து, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக அந்தத் தொகையை வழங்கச் செய்தேன்
  ——-
  அது எப்படிங்க 50 லட்சத்துக்கு 5 லட்சம் மட்டும் வருமான வரி

 2. Mahesh

  அடடா ! இவரு சம்ப்பாரிக்கற அத்தனை பணத்தையும் பொது மக்களுக்கே குடுத்துட்டு buvakku என்ன பன்றாரோ பாவம் !! இவரது குடும்பம் கொஞ்சம் பெரிசு வேற. இவங்க பசங்க,பேரன்க எல்லாம் பாவம் யாரு கைய காலை பிடுச்சு படம் எடுக்குரங்கல்லோ தெரியலை ! அவ்வளவு பணத்தையும் குடுத்துட்டு கலைஞர் டிவியெ
  எப்படித்தான் நடதுரன்களோ தெரியாது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *