BREAKING NEWS
Search

கமல் விழா: முதல்வர் – ‘அம்மா’ மோதல்!

முதல்வர் – ‘அம்மா’ மோதல்!

திருவனந்தபுரம்: நடிகர் கமல்ஹாஸனுக்கு எதிரானவர்களாக எங்களைச் சித்தரித்துள்ளார் முதல்வர் அச்சுதானந்தன் என்று குற்றம்சாட்டியுள்ளது மலையாள நடிகர் சங்கமான அம்மா.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கேரள அரசு இந்த விழாவை நடத்தியது. ஆனால் இந்த விழாவில் மலையாள நடிகர் சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. புறக்கணித்து விட்டனர். மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளைத் தாண்டிய பல நடிகர்கள் இருக்கும்போது கமல்ஹாசனை கூட்டி வந்து விழா எடுப்பதா என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் மலையாள நடிகர் சங்கத்தினரையும், நடிகர்களையும் கடுமையாக விமர்சித்தார். உண்மையான கலையை மதிக்கத் தெரியாதவர்கள் மலையாள நடிகர்கள் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.

இதற்கு ‘அம்மா’ கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் அச்சுதானந்தன் பேச்சு தற்போது கமலஹாசன் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல் ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல்வர் தனது பேச்சை கடுமையாக்கி கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகர்கள் கமலஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமலஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணித்தோம்..” என்று கூறியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *