BREAKING NEWS
Search

கண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!

தமிழர்களின் அனைத்து அடையாளங்களையும் அழித்தொழிக்கும் இலங்கை!

தரைமட்டமாக்கப்பட்ட பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு

நான்காவது ஈழப்போரில் விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்த வரும் மே 18-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபன் நினைவிடம், பல ஆயிரம் மாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் என அனைத்தையும் புல்டோசர் வைத்து இடித்து தள்ளிவிட்டது ராணுவம்.

கடந்த மாதம் கிளிநொச்சி, யானை இறவில் உள்ள நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

தற்போது முல்லைத் தீவில் உள்ள முள்ளியவளை நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. வன்னி பகுதி தமிழர்கள் இந்த நினைவிடத்தை புனித இடமாக கருதி வழிபட்டு வந்தனர். அந்த வழியாகச் சென்றால் கூட வணங்கி விட்டுத்தான் செல்வார்கள்.

தற்போது அது அழிக்கப்பட்டு சிங்கள ராணுவ வீரர்களின் சமாதி இடமாக மாற்றப்பட்டுள்ளது. முள்ளிய வளையில் இருந்த பெண் விடுதலைப்புலி மாலதியின் நினைவுத்தூணும் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டது.

இலங்கை வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தமயமாக மாற்றப்படுவதை உலகமே மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. ஒரு இனம் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவதை வல்லரசு நாடுகளும் வேடிக்கைப் பார்க்கும் சோகம் தொடர்கிறது.

போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும், அமைதியாக வாழ எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று இலங்கையும், அதற்கு ஒத்தூதும் நாடுகளும் மாற்றி மாற்றிக் கூறின. ஆனால் புலிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதும், இலங்கை பழையபடி தனது இனவெறியைத் தொடர்கிறது. அதன் நட்பு நாடுகளோ இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கியவண்ணம் உள்ளனர்.

உள்நாட்டில் உள்ள சில தமிழர் குழுக்களோ, ராஜபக்சேயுடன் கைகுலுக்கி மகிழ்ந்து வருகிறார்கள். இதைவிடக் கொடுமை, வன்னியில் தமிழர் படுகொலை நினைவு நாளை, சிங்களத்தின் வெற்றி விழாவாகக் கொண்டாட தமிழ் அமைப்பு ஒன்றின் தலைவரே உதவி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஈழ ஆதரவு இணைய தளங்களில்.

என்ன செய்வது…? யாரிடம் சொல்வது? யார் நம்பிக்கையானவர்கள்? மீண்டும் தங்களின் உரிமையையும் சுய மரியாதையையும் காக்க யார் வருவார்கள்? என்று தெரியாமல் தத்தளிக்கிறது ஈழத் தமிழினம்.




One thought on “கண்முன்னே அழியும் அடையாளங்கள்… கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!

  1. Muthu

    நெஞ்சு பொறுக்குதிலையே எந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்….

    எல்லா வகை அநீதிகளுக்கும் ஒரு நாள் முடிவு காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *