BREAKING NEWS
Search

கடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன்!

கடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன்

மது நண்பரும், பத்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராகியிருப்பவருமான புகழேந்தி தங்கராஜ் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரை இது.

பிரபாகரன் மரணம் குறித்து புதினம் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில இணையங்கள் வெளியிட்ட கட்டுரை ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாகவும், பிரபாகரன் குறித்த பல விஷயங்களுக்கு தெளிவான பதில் சொல்லும் முகமாகவும் எவுதப்பட்டுள்ளது.

அதை இங்கே மீள் பிரசுரமாகத் தருகிறோம்…leader_200906100021

து நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள்ள விஷம் அல்லது விஷயம் தொடர்பாக மட்டுமே நாம் பேசவேண்டியிருக்கிறது.

இலங்கை அரசு காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகிறோம் என்ற வாக்கிய அமைப்பு, எழுதியவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. அந்த உடல் அவருடையதுதான் என்றே எம்மில் பலரும் நம்புகிறோம் என்று நேரடியாக எழுதாமல், எதிர்மறையாய் எழுதி ‘சேம்சைடு கோல்’ போடுகிற வேலை இது.

ஊருக்கும் உலகுக்கும் இலங்கை அரசு காட்டிய அந்த உடல்தான், பிரபாகரன் சாகவில்லை என்பதற்கு சந்தேகத்துக்கு இடமில்லாத சான்றாக இன்றுவரை திகழ்கிறது. உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால், அவரது உண்மையான உடலைக் காட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர் இதயங்களைச் சம்மட்டியால் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் கோத்தபாய-பாசில்-மகிந்த கும்பல் வேறுவேலை பார்த்திருக்கும். அதை விட்டுவிட்டு, பிரபாகரனைப் போன்ற இன்னொரு உருவத்தைக் காட்டவேண்டிய அவசியமென்ன?

54 வயது பிரபாகரனுக்கு பதில் ஒரு 35, 36 வயது பிரபாகரன் உருவம் காட்டப்பட்டதால்தான் உலகே சந்தேகப்பட்டது. பிரபாகரனா இது, 54 வயது பிரபாகரனா இது என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு டி.வி.யைப் பார்த்தது. கட்டுரையாளருக்கு இப்படியொரு சந்தேகம் எழவேயில்லையா? அல்லது, பிரபாகரன் மீது மற்றெல்லோரையும் காட்டிலும் 420 மடங்கு மரியாதை வைத்திருக்கும் அவர், இப்படியொரு நிலையில் அவரது உடலைப் பார்க்கவேமாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டாரா?thalaivar-2

‘உண்மையிலேயே கொல்லப்பட்டிருந்தால் அந்த உருவத்தைத்தானே நீ காட்டியிருக்கவேண்டும், வயது குறைந்த ஓர் உருவத்தை ஏன் காட்டினாய்?’ என்று கேட்டு கோத்தபாயவுக்கு குறைந்தபட்சம் ஒரு மெயிலாவது அனுப்பியிருக்கலாம் கட்டுரையாளர்.

உயிரிழந்ததும் இளமை திரும்பிவிட பிரபாகரன் என்ன கடவுள் அவதாரமா? கடவுளுக்கு நிகராகவே அவரைக் கருதியதாக உருக்கத்துடன் குறிப்பிடும் கட்டுரையாளரின் உணர்வை மதித்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

இவர் இப்படி உருகுவதால், அவர் அப்படி ஆகிவிடப் போகிறாரா? ஐயா, பிரபாகரன் ஒரு மனிதன், மாமனிதன். ரத்தமும் சதையுமாய் நம்மிடையே வாழும் 54 வயது மனிதன். தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விஷயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ளமுடியாத விருப்புவெறுப்பியல் தாக்கத்தில் தவிக்காதீர்கள்.

ஆம்புலன்ஸில் தப்ப முயன்றபோது சுட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 600 மீட்டர் பரப்புக்குள்ளிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயல்வதென்பது ஒரு கேலிக்கூத்து. இப்படியெல்லாம் காமெடி செய்ய முள்ளிவாய்க்காலில் என்ன கிரேஸி மோகன் நாடகமா நடந்துகொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்ததும், பிரபாகரனின் உருவம் என்று ஒரு உருவத்தைக் காட்டிப்பார்த்தார்கள். அது 54 வயது பிரபாகரனும் இல்லை, நெற்றிக்குமேல் தலையும் இல்லை. இந்த நாடகமும் தோல்வியடைந்த பின், யார்யாரையோ தேடிப்பிடித்து, மெய்யாலுமே செத்துட்டார் என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்ய வைக்கிறார்கள்.thalaivar-4

அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்கம்பிகளுக்கு உள்ளே வரிசையில் நின்று சோற்றுக்காக எம் இனம் தட்டேந்தும் நிலையில், வெளியே, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல் கோத்தபாயவுக்காக சாட்சி சொல்லவும் கியூவில் நிற்கின்றன எம் சொந்தங்களில் சில.

நாம் நம்ப மறுத்தாலும் அவர் இனி திரும்பிவரப் போவதில்லை என்று மூக்கைச் சீந்துகின்றன. இவர் நம்புவதிலும் நம்ப மறுப்பதிலுமா அந்த மனிதனின் உயிர் இருக்கிறது! அவர் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற தன்னுடைய ஆசையை அல்லது நம்பிக்கையை ஆண்மையோடு அறிவித்துத் தொலைக்க வேண்டியதுதானே!

போர்த் திறனுக்காக மட்டுமின்றி நிர்வாகத் திறனுக்காகவும் பாராட்டப்பட்டது பிரபாகரனின் உன்னதத் தலைமை. நெற்றிக்குமேல் தலையே இல்லாமல் காட்டப்பட்ட ஒரு உருவத்தில், தலைமயிருக்குக் கருப்புமை பூசப்பட்டிருந்ததாகப் புழுதி கிளப்பும் கட்டுரையாளர், அந்தத் தலைமைபற்றி ஒரு புகார்ப்பட்டியலையும் சமர்ப்பிக்கிறார். அதுகூட அவரது குற்றச்சாட்டுகள் இல்லையாம், பிரபாகரன் தன்னைத் தானே நொந்து கொள்கிறாராம். அப்படிப் போகிறது கதை.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்று தனக்குத்தானே கேள்வியெழுப்பிக் கொண்டு, தனது ‘கடவுளின்’ கடைசிக் காலத்தைக் கடைவிரிக்கிறார் கட்டுரையாளர். அதில் கூறப்பட்டிருக்கும் சில குற்றச்சாட்டுகள், “தமிழினத்தைத் தவிர வேறெதைக் குறித்தும் கவலைப்படாத” ஆனந்த சங்கரி வகையறாக்களால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டவைதான் என்றாலும், இரண்டில் மட்டும் கூடுதல் விஷமம் தொனிக்கிறது.

ஒன்று, அன்டன் சொன்னதை பிரபா கேட்கவில்லை என்கிறது. இன்னொன்று, பிரபாவை தமிழ்ச்செல்வன் ஏமாற்றிவிட்டார் என்கிறது.

‘வல்லரசு சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து இயங்க வேண்டும் என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளை கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று (பிரபாகரன்) நினைத்திருப்பாரோ?’ என்று கூடுவிட்டு கூடு பாய்கிறார் கட்டுரையாளர்.

அன்டன் மீண்டும் மீண்டும் சொல்லியும் பிரபா கேட்கவில்லை என்று பழிசுமத்துவதுடன் நின்றுவிடுவதா? ஒரே கல்லில் இரண்டு கருத்த கொளும்பன் அடிக்கவேண்டாமா? அதனால்தான், இந்த நிலைக்கு வந்துவிட்டோமே என்று பிரபா நொந்துபோனதாக நூல் விடுகிறார். தலையில் பூசியிருந்ததாகச் சொன்ன கருப்பு மையை அந்த மாவீரனின் முகத்திலும் பூசி திருப்தியடைகிறார்.thalaivar-5-640x425

பாலாவும் பிரபாவும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர்கள். காசி ஆனந்தன் சொன்னதைப் போல், பாலா பிரபாகரனுக்குத் தாயாகவும் இருந்தார், மகனாகவும் இருந்தார். அவர் சொன்னதை இவர் கேட்கவில்லை என்று, பாலா இல்லையென்ற தைரியத்தில் யாரும் பேசக்கூடாது. பாலா இல்லைதான். ஆனால், அடேல் இருக்கிறார்!

தமிழ்ச்செல்வன் மீதான குற்றச்சாட்டு, இறந்தும் வாழும் அந்த மாவீரனின் புகழுடம்பைப் பேனாக் கத்தியால் கிழிக்கும் முயற்சி. வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட தமிழ்ச்செல்வன், மாறிவரும் உலகின் போக்குபற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னை தவறாக வழி நடத்திவிட்டதாக பிரபாகரன் நினைத்திருப்பாரோ என்கிறார் கட்டுரையாளர். பிரபாகரனை தமிழ்ச்செல்வன் ஏமாற்றியிருக்கிறார் என்பதுடன் நின்றுவிடாது, பிரபாகரன் ஏமாந்துவிட்டார் என்றும் அறிவுப்பூர்வமாக அறிவிப்பதுதான் எழுதியவரின் நோக்கம்.

போர்க்களத்தில் வேரூன்றி, சமாதான தளத்தில் காலூன்றியவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். அதனாலேயே அமைப்பு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது கட்டுரையாளருக்குப் பிடிக்கவில்லை, தமிழ்ச்செல்வனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

புலத்திலிருக்கும் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிற, பேசுகிற, செயல்படுகிற நபர்களை தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது எஸ்.பி. நேரிலேயே கண்டித்திருப்பது பழைய செய்தி. கட்டுரையாளரின் இப்போதைய வார்த்தைகளைப் பார்க்கும்போது, இதேமாதிரி குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் ஏற்கெனவே இவர் எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

தனது தவறுகள் பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்திருப்பதாக இறக்கும் தருவாயில் பிரபாகரன் நம்பியிருப்பாரோ என்ற வார்த்தைகள் பிரபாகரன் மீது கட்டுரையாளர் வைத்துள்ள உண்மையான மதிப்பீடு என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது. இதை மறைக்கவே, மானாவாரியாக சகதிவாரிப் பூசிவிட்டு, எங்களாலும் முடியும் என்று அவர்தான் எங்களை நம்பவைத்தார் என்றெல்லாம் சந்தனம் பூசுகிறார்.

பிரபாகரனின் உன்னதத் தலைமையில் ராணுவ அளவிலும் நிர்வாக அளவிலும் மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட வலுவான அரசமைப்பாக தலைநிமிர்ந்த தமிழ் ஈழம், ஒன்று இரண்டல்ல… நான்கைந்து வல்லரசுகளின் துணையோடுதான் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக நாம் வருந்துகிறோம்.

கட்டுரையாளரோ 30 வருடமாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று ஈவிரக்கமில்லாமல் வருணிக்கிறார். லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கும், அவரது அடிமனத்தில் அடர்ந்துகிடக்கும் அழுக்குக்கும் தொடர்பில்லாததை இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.

பிரபாகரன் திரும்ப வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டுவது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெழும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் என்று கோபத்தோடு புழுதிவாரித் தூற்றும் கட்டுரையாளரைக் கேட்கிறேன்…. அன்புள்ள ஐயாவே… பிரபாகரனைக் கடவுளாகவே மதிக்கும் ஐயாவே… இரண்டகம் செய்வது யார்?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஜோடிக்கப் பார்க்கும் இலங்கையின் கூற்றை வழிமொழிவதும், இருக்கிறார் என்ற நம்பிக்கையை நிராகரிப்பதும் உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. பிரபாகரனின் தலைமைத்துவம் பற்றியும் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கூட நீங்கள் விமர்சிக்கலாம். உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ, உரிமை இருக்கிறது.

ஆனால், அவரது இழப்பைத் தாங்கும் மனோதிடம் எமக்கு இல்லை என்று அழுது புலம்பியபடியே அவர்மீது சேறு பூசக்கூடாது. அதைஇ அந்த மனிதனை உண்மையாகவே நேசிக்கும் நாங்கள் வேடிக்கை பார்க்கமுடியாது.

அந்த மாமனிதன் இறந்துவிட்டான் என்று ஒரு போலி உடலைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்தது இலங்கை. அதனால்தான், பிரபாகரன் இறக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறோம்.

அவன் திரும்பிவரும் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறோம்.

உங்களுக்கோ, இலங்கை அரசு உண்மையைத் தவிர வேறெதையும் பேசாது என்ற நம்பிக்கை. அதனால், அந்த மாதலைவனுக்கு இறுதி வணக்க மரியாதையைச் செய்யவிடாமல் தடுப்பது நியாயப்படுத்த முடியாத தவறு என்கிறீர்கள்.

உயிரோடு இருக்கிற ஒரு மகத்தான மனிதனுக்கு இறுதி வணக்கம் செய்யச் சொல்லி வற்புறுத்துவது மட்டும், நியாயப்படுத்திவிடக் கூடிய தவறா?

– புகழேந்தி தங்கராஜ்
இயக்குநர், காற்றுக்கென்ன வேலி
3 thoughts on “கடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன்!

 1. சிவராம்

  ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம் சார்… இனி விமர்சனங்கள், புலியெதிர்ப்பு கோஷங்களை புறந்தள்ளப் பழக வேண்டும்…

 2. naren

  Praba family escape before the attack.But praba parents under arrest by SL military. How?

 3. Ganapathi

  Rajapakshe Perelapai eathirkolum nal vegu veraivel
  Valga Tamil ! Velga Tamil Elam !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *