BREAKING NEWS
Search

கச்சத் தீவு… வேண்டாம் ‘தந்தி நாடகம்’: ஜெயலலிதா அறிக்கை

கச்சத் தீவு… வேண்டாம் ‘தந்தி நாடகம்’: ஜெயலலிதா அறிக்கை

சென்னை: கச்சத்தீவு மீட்பு விஷயத்தில், வழக்கம் போல தந்தி Jaya20அடிக்கிறேன் என்று கூறி நாடகங்கள் நடத்தாமல் முதல்வர் கருணாநிதி விரைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கச்சத்தீவை திரும்பப் பெற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயார் என்று கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கப்போகிறது என்பது கருணாநிதிக்கு முன் கூட்டியே நன்றாகத் தெரிந்திருந்தும், தாரை வார்ப்பதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கருணாநிதி ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை? அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இது குறித்து பெரிய அளவில் ஏதாவது போராட்டம் நடத்தினாரா?

மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்றபோது அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த முறையை பின்பற்றியாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாரா கருணாநிதி?

அன்றே தடுத்திருக்க வேண்டும்!

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலைமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்தது. அதன் விளைவாக பெருபாரி இன்றுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவை தாரை வார்க்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தினாரா கருணாநிதி? எதையுமே செய்யவில்லையே!

18.6.2009 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசும்போது, நல்ல வகை மீன் கிடைக்கும் என்று எண்ணுகின்ற சில பேராசை கொண்ட மீனவ மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது என்ற உண்மை வெளிப்படுவதை நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

தங்களுடைய ஜீவனத்திற்காகவும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ஏழை மீனவ மக்களை பேராசை கொண்டவர்கள் என்று கூறிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

காலம் காலமாக கச்சத்தீவுப் பகுதியிலே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தமிழக மீனவர்கள். கச்சத்தீவு இலங்கைக்கு காவு கொடுக்கப்பட்டதன் விளைவாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்குத் தேவையான நல்ல ரக மீன்கள் கச்சத்தீவு அருகில் உள்ள கடல் பகுதியில்தான் கிடைக்கின்றன. தங்களுடைய வாழ்வாதாரத்தை மனதில் வைத்துக்கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, சில சமயங்களில் தெரியாமல் எல்லையை தாண்டிச் சென்று விடுவது இயற்கை.

இதற்காக இலங்கை கடற்படையினர், அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அவர்கள் பிடித்த மீன்களை கைப்பற்றியும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், படகுகளை பறிமுதல் செய்தும், அவர்களை சிறையில் அடைத்தும், பல வழிகளில் மீனவர்களை துன்புறுத்துகின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட பிறகும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 2 வாரங்களில் தமிழக மீனவர்கள் 3 முறை தாக்கப்பட்டுள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம்? இந்தச் சூழ்நிலையில் தமிழக மீனவ மக்கள் பேராசை கொண்டவர்கள் என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.

மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசியதை முதல்- அமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கச்சத்தீவை மீட்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பதைதான் நான் அன்றைக்கு சட்டமன்றப் பேரவையில் சுட்டிக்காட்டினேன். கச்சத்தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்க கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல்- அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால், அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான், கச்சத்தீவை மீட்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

மாநில அரசையும் கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக் கொண்டு கச்சத்தீவை மீட்க கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்?

கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சீன கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதன் விளைவாக தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டிற்கே பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தந்தி நாடகம் வேண்டாம்!

எனவே, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை போல் கச்சத்தீவு பிரச்சினையிலும் கடிதம் எழுதுகிறேன். “தந்தி அடிக்கிறேன்” என்று மீண்டும் நாடகங்களை அரங்கேற்றாமல் கட்சத்தீவை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெ.
2 thoughts on “கச்சத் தீவு… வேண்டாம் ‘தந்தி நாடகம்’: ஜெயலலிதா அறிக்கை

  1. m

    இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல முறை மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியுமே, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் எம் கண்முன்னே கொல்லப்பட்டனர். கச்சத்தீவு சிறிய பிரச்சினை இதற்கு கடிதம், தீர்மானம் என எதனை கொண்டு வந்தாலும் பிராந்திய நட்பு என்ற காரணத்தை கூறி, இந்திய மத்திய அரசாங்கம் மலுப்பிவிடும். ஈழத் தமிழர்களை நிர்க்கதி நிலைக்கு ஆளாகிய இந்தியா மத்திய ஆளும் ஆட்சியாளர்களும் சரி அதிகாரிகளுக்கு சரி தமிழர், தமிழகம் என்பவற்றையெல்லாம் பொருட்படுத்;;;துவதில்லை. 500 தமிழக மீனவர்களுக்கு பதிலாக மராத்தி,குஜராத்தி மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்டோ, தாக்கப்பட்டீடோ இருந்தால், மத்திய அரசாங்கம் சும்மா இருக்குமா? அட போங்கய்யா … நீங்களும் உங்கள் கடிதமும்.

  2. வடக்குப்பட்டி ராமசாமி

    இந்த பரதேசிகள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள், நேற்று வணங்கா மண் கப்பலை திருப்பி அனுப்பிவிட்டார்கள்!

    கண்டிப்பாக இவர்களுக்கு நல்ல சாவே வராது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *