இறுதிக்கட்ட தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம்!
சென்னை: கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் நடந்த அனல், பணம் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இந்த ஆண்டு 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 457 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 86 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் இதில் அடங்கும்.
இவை தவிர, உத்தரபிரதேச மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 11 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், இமாசலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதியிலும் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஓய்ந்தது பிரச்சாரம்!
மேற்கண்ட 86 தொகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக அனல் பறக்க நடைபெற்ற பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுபோல், முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நேற்றுமுன்தினமே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர்.
நாளை தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம் (சிவகங்கை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), மணிசங்கர் அய்யர் (மயிலாடுதுறை), ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (ஈரோடு) மற்றும் வைகோ (விருதுநகர்), திருமாவளவன் (சிதம்பரம்), மம்தா பானர்ஜி (தெற்கு கொல்கத்தா), மு.க.அழகிரி (மதுரை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), வருண் காந்தி (பிலிபிட்), நடிகை ஜெயபிரதா (ராம்பூர்), மேனகா காந்தி (ஆன்லா), அசாருதின் (மொரதாபாத்), நடிகர் வினோத் கன்னா (குர்தாஸ்பூர்), சித்து (அமிர்தசரஸ்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தேர்தல் கமிஷனர் ஆர்.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 86 தொகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 432 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 93 பேர் பெண்கள் ஆவர். 10 கோடியே 78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடையும்.
3 லட்சம் பேர் மீது நடவடிக்கை
1 லட்சத்து 21 ஆயிரத்து 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 86 ஆயிரத்து 782 கிராமங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 957 பேர், வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பார்வையாளர்கள்
5 லட்சம் தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதவிர, 254 தேர்தல் பார்வையாளர்களும், 10 சிறப்பு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 8 சிறப்பு பார்வையாளர்கள் மேற்கு வங்காளத்திலும், தலா ஒரு சிறப்பு பார்வையாளர் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் பணியாற்றுவார்கள். மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான நுண்பார்வையாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள், என்றார்.
தமிழகத்தில்…
தமிழகத்தில் 824 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 28 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில், அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 44 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 7 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 4,13,80,143 பேர் தகுதியுள்ள வாக்காளர்கள் ஆவர். இவர்களில் 2,07,65,129 பேர் ஆண்கள், 2,06,15,014 பேர் பெண்கள் ஆவர்.
ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.