BREAKING NEWS
Search

ஒரு நதியின் மரணத்தைத் தடுக்க போராட்டம்!

ஒரு நதியின் மரணத்தைத் தடுக்க போராட்டம்!

வதார் படத்தில், பண்டோரா கிரகத்தின் இயற்கைச் சூழலை அரிய கனிமத்துக்காக அமெரிக்கப் படைகள் அழிக்க முற்படுவதையும், அதை அந்த கிரகத்து நவி பழங்குடிகள் எதிர்த்துப் போராடி ஜெயிப்பதாகவும் சித்தரித்திருந்தார் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

இப்போது நிஜத்திலும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு ஆபத்தும் போராட்டமும் நடக்கவிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பழங்குடிகள் ஜெயிப்பார்களா அல்லது தங்கள் பாரம்பரிய வாழிடங்களை இழந்து நிற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரேஸில் நாட்டில் ஓடும் ஆறும் அமேசான். வற்றாத பேராறு. உலகின் மிகப் பெரிய ஆறு இதுவே. அமேசான் தவிர்த்து, உலகின் வற்றாத பத்து ஆறுகளில் ஓடும் மொத்தத் தண்ணீரின் அளவு, அமேசானில் ஓடும் நீருக்குச் சமம்!

ஜிங்சூ நதி... உள்படம்: அமேசான் மற்றும் கிளை நதிகள்

அமேசானின் துணை நதிகளில் முக்கியமானது ஜிங்சூ நதி. இதன் குறுக்கே கட்டப்படவிருக்கும் ஒரு அணையால் அமேசான் பகுதியின் இயற்கைக் கொடையான மழைக் காடுகள் முற்றாக அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் இயற்கை இயங்கு நிலையே மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்தத் திட்டத்துக்கு எதிராகத்தான் பெரும் போராட்டத்தை நடத்தவிருக்கிறார் கேமரூன்.

வற்றாத ஜீவநதியாக பெரும் நீர்ப்பெருக்கோடு அமேசான் காடுகளைத் தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது ஜிங்சூ நதி.

ஆண்டு முழுவதும் வெள்ளம்...

இந்த நதியின் குறுக்கேதான் உலகின் மூன்றாவது பெரிய அணை என்று சொல்லத்தக்க அளவில் பிரமாண்ட பெலோ மாண்டி டேமைக் கட்டுகிறது பிரேசில் அரசு.

இந்த அணை மட்டும் கட்டப்பட்டால், ஜிங்சூ நதி வருடத்தின் சில மாதங்களுக்கு வறண்டு போகும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்ல, மழைக் காடுகள் அழிக்கப்பட்டு, மழை வளம் பாதிக்கப்படும்; அமேசான் காடுகளின் தொன்மைக் குடி மக்கள் முற்றாக அழியும் அபாயமும் உள்ளது.

ஜிங்சூ நதியின் தோற்றம்... கோடையில்!

இந்த அணைக்காக, 500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள மழைக் காடுகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும். 40000-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

நதியை நம்பியே வாழ்க்கை

ஏற்கெனவே பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களால் அமேசான் காடுகளின் இயற்கை வளம் சூறையாடப்பட்டு வருகிறது. பெரு நாட்டில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதாகக் கூறி அமேசான் காடுகளை அழித்துவிட்டன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டபாடில்லை.

இப்போது பிரேசிலின் மிக முக்கிய, பெரும் நிலப் பரப்பையும் அழிக்கப் பார்ப்பதாகக் கூறி, அமேசான் பகுதியில் வசிக்கும் 13 முக்கிய பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இனங்களின் தலைவர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களில் பங்கேற்று, அதன் தீவிரத்தன்மையை உலகுக்குப் புரிய வைப்பதே கேமரூனின் நோக்கம்.

ஏற்கெனவே அழிக்கப்பட்ட மழைக் காடுகள்...

இதுகுறித்து கேமரூன் சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், “அவதார் படத்தில் இயற்கைக்கு எதிராக என்னவெல்லாம் நடந்ததோ அதுதான் பிரேசிலில் நடக்கிறது. ஏன்… இந்தியா, சீனாவிலும் கூட அதுதான் நடந்து வருகிறது. பாரம்பரியமும், மக்களின் வாழ்வாதாரங்களும் நிறைந்த தொன்மை கிராமங்கள் அழிக்கப்படுகின்றன, உள்கட்டமைப்புகள் எனும் பெயரில். மனிதனின் பிரச்சினைகள் ஆரம்பிப்பதே அதிலிருந்துதான்.

பிரேசில் அரசு பிடிவாதமாக இந்த அணையைக் கட்டுமானால் அங்கு பேராபத்து விளைவது நிச்சயம்…

நிஜ பண்டோராவைக் காக்க ஒரு படைப்பாளியின் குரல்...

நான் விளம்பரத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவே இந்தப் போராட்டத்தில் குதிக்கவில்லை. எனக்கு இந்த பூமியின் மீது மாறாத காதல் உள்ளது. பூமியைக் காப்பதில் ஒரு தனிமனிதனாக என் பங்களிப்பு இது. ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பைத் தரவேண்டும்…” என்றார்.

கடந்த வாரம் பிரேசில் சென்ற கேமரூன் மற்றும் அவதார் படக் குழுவின் சில முக்கிய கலைஞர்கள், ஜிங்சூ நதியின் கரையில் அமைந்துள்ள ம்ரோடிட்ஜாம் (Mrotidjam) என்ற கிராமத்தில் தங்கினர். அமேசான் காட்டுப் பகுதியில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் பிரநிதிகளும் பல நாட்கள் பயணித்து அந்தக் கிராமத்துக்கு வந்தனர். கேமரூனைச் சந்தித்து தங்கள் பிரச்சினைகளைக் கூறினர்.

எங்கள் பிள்ளைகளுக்கும் இந்த இயற்கை வேண்டும்...

“நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். இந்த நதி, காடுகளுக்கு அப்பால் உள்ள எதுவும் எங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமலே கூட போகட்டும். ஆனால் அவர்கள் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ, ஜிங்சூ நதியை மட்டும் விட்டு வைக்கச் சொல்லுங்கள். இப்போது அரசாங்கம் செய்யும் காரியம், எங்கள் குழந்தைகளைக் கொல்வதற்குச் சமம்” என்று கண்ணீருடன் அவர்கள் கேமரூனிடம் முறையிட்டனர்.

அவர்களுக்கு பதிலளித்த கேமரூன், “இயற்கையை அழிக்கும் இந்த விஷயத்தை நிச்சயம் தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கையோடு இயைந்த அமேசான் பழங்குடிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக எந்த போராட்டத்திலும் பங்கெடுக்கிறேன். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்” என்றார்.

பெலோ மாண்டி அணை கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது பிரேசில். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக இத்தனை காலமும் தடைபட்டு வந்தது. இப்போது 12 பில்லியன் டாலர் செலவில் இந்த அணையைக் கட்ட தீவிரமாக உள்ளது பிரேசில். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, இந்த அணைக்கான கட்டுமான ஏலத்துக்கு இரண்டாம் முறையாக தடை விதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். இந்த இடைக்காலத் தடையை நிரந்தரமாக்கும் வரை ஓயப்போவதில்லை என குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இயற்கையை அதன் போக்கில் விட்டு வைக்காத எந்த நாடும், அதன் சாபக்கேடுகளிலிருந்து தப்பியதே இல்லை… இதை மனிதர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!

-என்வழி
3 thoughts on “ஒரு நதியின் மரணத்தைத் தடுக்க போராட்டம்!

  1. sakthivel

    //இயற்கையை அதன் போக்கில் விட்டு வைக்காத எந்த நாடும், அதன் சாபக்கேடுகளிலிருந்து தப்பியதே இல்லை// –

    ஈன அரசியல்வாதிகளுக்கு புரியுமா????

  2. r.v.saravanan

    இயற்கை யை சீண்டுவது மனிதர்களுக்கு பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *