BREAKING NEWS
Search

ஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்! – டோனி

ஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்! – டோனி


செயின்ட் லூசியா: நீண்ட பயணம், ஐபிஎல் நள்ளிரவு விருந்து – கேளிக்கைகளால் 20 ஓவர் உலகக் கோப்பாப் போட்டியில் படுதோல்வி கண்டோம் என இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து வரும் மூன்றாவது டுவென்டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் படு ஜோராக ஆடிய இந்திய அணி, பின்னர் ஹாட்ரிக் தோல்விகளைத் தழுவ, போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டு விட்டது.

சூப்பர் 8 பிரிவில் மேற்கிந்தியத் தீவு, ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியுற்ற இந்திய அணி, வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கையுடன் மோதியது.

ஆனால் படுகேவலமாகத் தோற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இலங்கையுடனான ஆட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம், தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிட்டார் கேப்டன் டோனி. அவர் கூறுகையில், “ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் மட்டுமல்ல… அதைத் தாண்டி பல விஷயங்கள் உள்ளன.

ஐபிஎல் போட்டிகளின்போது நீண்ட தூரம் பயணம் செய்தது, இரவு நேரங்களில் கிரிக்கெட் விளையாடியது, நள்ளிரவு நேரங்களில் விருந்துகளிலும் அதைத் தொடர்ந்து நடந்த கேளிக்கைளிலும் கலந்துகொண்டது வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டிகளின் 45 முதல் 50 ஆட்டங்களில் விளையாடுகிறோம். ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடுவதால் உடலை தகுதியுடன் வைத்திருப்பது அவசியம். அதற்கு இந்த கேளிக்கைகள் தடையாக உள்ளன என்பது உண்மை.

இந்திய வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருந்தனர் என்பது உண்மைதான் என்றாலும், ஆனாலும் எதிர்பார்த்த ஆட்டத்தை எங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. 20-20 உலகக் கோப்பையில் இந்தியா சரியாக விளையாடவில்லை. இலங்கையுடனான முக்கியமான ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.

மேற்கிந்தியத் தீவிலுள்ள மைதானங்கள் வேகப்பந்துக்கு சாதகமானவை. ஆனால் இந்தியாவிலுள்ள ஆடுகளங்களின் தன்மையே வேறு. பவுன்சர் பந்துகளைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணற வேண்டியிருந்தது. ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளால் வீரர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் நம்மிடம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் நம்மிடம் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளையும், டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது…”, என்றார் அவர்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் கோபம்!

டோனியின் இந்தப் பேட்டி பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில்.

அநேகமாக அது டோனியின் பதவியைப் பறிக்கும் முடிவு வரை கூட போகலாம் என்கிறது பிசிசிஐ வட்டாரம். உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் ஆட்டத்திறன் பற்றிய அறிக்கைக்காக காத்திருக்கிறது வாரியம்.

டோனியின் இந்தக் கருத்து குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் ராஜீவ் சுக்லா, “நள்ளிரவுப் பார்ட்டிகளில் பங்கேற்றே தீர வேண்டும் என்று எந்த ஆட்டக்காரரையும் கிரிக்கெட் வாரியம் அல்லது ஐபிஎல் வற்புறுத்த வில்லை. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வீரர்களின் விருப்பம்.

இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் வரும் என்று தெரிந்ததால்தான் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரவு விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் உலகக் கோப்பையை கோட்டை விட்டு வந்ததற்கு இதை மட்டும் காரணமாக சொல்லக் கூடாது.

ஒரு ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளுடன் சர்வதேச போட்டிகளில் ஆடவேண்டும். அவற்றில் ஆடத் தயாராகத இருக்க வேண்டும் வீரர்கள். இப்படி ஓயாமல் போட்டிகளில் பங்கேற்பதால், கிரிக்கெட் வீரர்களின் வங்கி இருப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.. அதை மறந்துவிடக் கூடாது” என்றார்.

முன்னால் கிரிக்கெட் வீரர்கள் பலரும், டோனியின் இந்த பதிலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறுகையில், “ஒரு கிரிக்கெட் வீரருக்கு இரவுப் பார்ட்டிகளை விட, கிரிக்கெட்டே முக்கியம். இவர்களை யார் இரவு முழுக்க கண்விழித்து பார்ட்டியில் ஆட்டம் போடச் சொன்னது. எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போவதுதானே…” என்றார்.

தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சையத் கிர்மானி கூறுகையில், “ஒழுங்காக இவர்கள் ஆடாமல் கோட்டை விட்டு, சப்பைக் கட்டு கட்டப் பார்க்கிறார் டோனி. இது ஏற்கத்தக்கதல்ல,” என்றார்.

முன்னாள் வீரர் மதன்லாலும் டோனியின் விளக்கத்தை விமர்சித்துள்ளார்.

அதே நேரம் டோனி சொல்வதிலும் பல உண்மை இருப்பதை பெயர் வெளியிட விரும்பாத சில வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த இரவு நேர விருந்துகள், கேளிக்கை நிகழ்வுகள் நடப்பதே, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களால்தான். இதற்குப் பின்னணியில் பெரும் வர்த்தக கணக்கீடுகள் உள்ளன. இந்த பார்ட்டிகளையே கூட சேனல்களுக்கு விற்கிறார்கள். நேரடியாய் ஒளிபரப்பு செய்து பெரும்பணம் சம்பாதிக்கிறார்கள். இத்தனை வர்த்தக முக்கியத்துவம் கொண்ட நிகழ்வை புறக்கணிக்க ஐபிஎல் உரிமையாளர்கள் எப்படி அனுமதிப்பார்கள்’ என்கிறார்கள்.

ஆக, இன்னும் சில தினங்களில் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியில் படு சூடான மாற்றங்கள் அரங்கேறக் கூடும்!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *