BREAKING NEWS
Search

ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்! – ஒபாமா உறுதி

ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்! – ஒபாமா உறுதி

டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க அமெரிக்கா ஆதரவு தரும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த அதிபர் பாரக் ஒபாமா, மும்பையில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, திங்கள் கிழமை டெல்லி வந்தார். அவருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்புக்குப் பின்னர் இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் ஒபாமா. 20 நிமிடங்கள் வரை மட்டுமே ஒபாமா பேசுவார் என முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால் 45 நிமிடங்கள் பேசினார் ஒபாமா. தனது பேச்சு முழுவதிலும் இந்தியாவையும், இந்திய மக்களையும், மகாத்மா காந்தியையும், இந்தியாவின் சிறப்புகளையும் வெகுவாகப் பாராட்டினார் ஒபாமா.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வந்த ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோல்டன் புக் எனப்படும் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார் ஒபாமா.

இதையடுத்து மைய மண்டபத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், பிரதமர் மன்மோகன் சிங், எம்.பிக்கள், அமைச்சர் கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஒபாமா பேச்சு:

உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டின் நட்பை, இந்த நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். கூடவே அமெரிக்காவில் வாழும் 3 மில்லியன் இந்தியர்களின் அன்பையும் சுமந்து வந்திருக்கிறேன்.

நூறு கோடிக்கும் மேலான மக்களையும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தையும் கொண்டுள்ள நாட்டின் பிரதிநிதிகளின் அவையில் பேசுவதை மிகப் பெரிய கெளரவமாக கருதி நன்றி கூறுகிறேன்.

நானும், எனது மனைவி மிஷலும் இந்தியாவன் விருந்தோம்பலால் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்தியாவின் பன்முகத்தையும், அழகையும் கண்டு வியந்து போயுள்ளோம். பஹூத் தன்யவாத் (மிகுந்த நன்றி).

என் மனைவி மிஷேலுடன் இந்த மூன்று நாள் பயணத்தில் மகத்தான அனுபவம் கிடைத்தது. ஹுமாயுன் சமாதியின் பாரம்பரியம் முதல் அதிவெக தொழில்நுட்பங்கள் வரையும், நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளையும் கண்டேன்.

நான் இந்தியப் பயணம் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபரும் இல்லை; கடைசி அதிபரும் அல்ல. ஆனால், எனது பதவி காலத்தின் முற்பகுதியிலேயே இந்தியாவுக்கு வருகை புரிந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

“எனது ஆசியப் பயணத்தில் இந்தியா முதலாவதாக இடம்பெற்றது தற்செயல் அல்ல. அத்துடன், நான் பதவியேற்று அதிக நாட்கள் பயணம் மேற்கொண்டதும் இங்குதான்.

ஆசியாவில் மட்டுமின்றி, உலக அளவில் இந்தியா முன்னேறும் நாடு மட்டுமல்ல; ஏற்கெனவே முன்னேறியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா இடையிலான உறுதியான உறவு, 21 ஆம் நூற்றாண்டில் பிரிக்க முடியாத மகத்தான நல்லுறவாக திகழ்கிறது என்பதை உறுதிபட நம்புகிறேன். இந்த உறவை மேலும் வலுப்படுத்தவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

இந்தியா மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகின் நாகரிக வளர்ச்சிக்கு இந்தியா பெரும் பங்காற்றியதை அறிவேன். உலக்குக்கு இந்தியா அளித்துள்ள புத்தாக்கங்களுக்கு ‘பூஜ்ஜியம்’ (0) கண்டுபிடிப்பே சான்று.

மகாத்மா காந்தி என் ஆசான்

ராஜ்காட்டிலுள்ள மணி பவனில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியபோது நெகிழ்வடைந்தோம். நான் அமெரிக்க அதிபராக உயர்ந்ததற்கு மகாத்மா காந்தியின் சிந்தனைகளும், அவரது தத்துவங்களுமே காரணம். இதை நான் மனதில் கொண்டுள்ளேன். அவர் எனது ஆசான். உலகத்திற்கு அவர் போதித்தவை அனைத்தையும் நான் மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

அறிவியலிலும், கண்டுபிடிப்பிலும் மிகவும் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு இந்தியா. மனித வளத்தில் அடிப்படை நம்பிக்கைக் கொண்ட நாடு இந்தியா. அங்கு தொடங்கிய அடிப்படையில்தான் நள்ளிரவில் சுதந்திரம் பெறும் வரை இந்தியா வலுவானதாக உயர்ந்து நின்றது. சுதந்திர இந்தியாவாக மலர்ந்தது.

இது ஏழை நாடு, இங்கு மக்கள் கூட்டம் அதிகம், இது வளர்ச்சி பெறுவது கடினம் என்று ஏளனங்கள் செய்யப்பட்டபோதிலும், அதைத் தாண்டி இந்தியா வெற்றி பெற்றிருப்பதற்கு இந்தியாவின் ஜனநாயகமே காரணம். ஜனநாயகத்தால்தான் இன்று இந்தியா வெற்றிகரமான நாடாக திகழ்கிறது.

உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது இந்தியா. பட்டினியில் மூழ்கிப் போய் விடாமல் பசுமைப் புரட்சியை நிகழ்த்திய நாடு இந்தியா. கோடானு கோடி மக்களுக்கு உணவைக் கொடுத்தது இந்தியா.

இந்தியா மாறியிருப்பதைப் போல இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளும் மாறியுள்ளன. சுதந்திரம் பெற்ற பின்னர் சில ஆண்டுகளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் எதிரெதிர் அணிகளில் இருக்க நேரிட்டது. அந்த நாட்கள் முடிந்து விட்டன.

கடந்த இரண்டு இந்திய அரசாங்கங்களும் அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த உறவு இயற்கையானது, தேவையானது என்பதை அவை உணர்த்தியுள்ளன. அதேபோல அமெரிக்காவிலும் எனக்கு முன்பு இருந்தவர்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக அரங்கில் இந்தியா வளர்ந்துள்ளதைப் போல ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், ஐ.நா. சபையிலும் மறுமலர்ச்சி ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகிறது. மறு சீரமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவும் இடம் பெறுவதை வரவேற்கிறது.

இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளிலும் செயல்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன்கள் கிடைக்கும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு முக்கியத் துறை பாதுகாப்பு. மும்பையில், காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். இன்று நான் நிற்கும் நாடாளுமன்றமும் கூட தாக்குலுக்குள்ளானதை நான் நினைவு கூர்கிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் மரணத்தை நாம் கெளரவிக்க வேண்டும்.

தீவிரவாதிகளின் சொர்க்கம் பாகிஸ்தான்!

மும்பை சம்பவத்தில் இந்தியர்களைப் போல அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் அந்த சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இது வெளிக்காட்டுகிறது.

மும்பை சம்பவத்திற்குக் காரணமான அத்தனை குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நான் பாகிஸ்தான் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தப் போகிறேன். பயங்கரவாதத்தின் சொர்க்கமாகத் திகழ்கிறது பாகிஸ்தான். அந்நாட்டு எல்லைக்குள் தீவிரவாதிகள் முகாமிடுவதை ஏற்க முடியாது. மும்பை தாக்குதலுக்குக் காரணமான யாரும் தப்பக் கூடாது.

அதேபோல ஆப்கானிஸ்தானிலும், நிலையான பாகிஸ்தானை உருவாக்குவதிலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பேசுவது பிராந்திய பாதுகாப்புக்கு நல்லது. எனவே இதை நாங்கள் எப்போதும் வரவேற்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை நீங்கள் இருவருமே இணைந்து தீர்க்க முயல வேண்டும்.

உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற முறையில், நாம் பெற்ற சுதந்திரத்தை கட்டிக் காப்பதில் இரு நாடுகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இரு நாடுகளுமே மறந்து விடக் கூடாது.

இந்தியர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தரும் போராட்டத்தைத் தொடங்கும் முன், தென் ஆப்பிரிக்க மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியவர் காந்தியடிகள். அதேபோல ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை சுதந்திரக் காற்று வீசுவதற்காக போராடியவர் காந்தியடிகள்.

இந்திய மக்கள் பல்வேறு தடைகளைத் தகர்த்து வளர்ந்தவர்கள். குறைந்த வாய்ப்புகளே இருந்தபோதிலும் அதைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது இந்தியா. சில பல வருடங்களலேயே இந்த சாதனையை செய்ய முடிந்துள்ளது பாராட்டுக்குரியது.

உலகின் சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா வளர்ந்து நிற்கிறது. இது உங்களது பாட்டன்மார்களின் கனவு. அதை நீங்கள் இன்று நிறைவேற்றியுள்ளீர்கள். இதை நாளை உங்களது பேரப்பிள்ளைகள் நினைத்துப் பார்ப்பார்கள். ஆனால் இன்றைய இந்தியர்கள் இந்த பலத்தை மேலும் வலுவாக்க தொடர்ந்து முயல வேண்டும். உழைக்க வேண்டும். தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய, அமெரிக்க கூட்டுறவு நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்,” என்று கூறி முடித்தார் ஒபாமா.




4 thoughts on “ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்! – ஒபாமா உறுதி

  1. Mohd. Allah

    வினோ, எல்லா செய்தியையும் போடுற…. ஆனா பாதிரியாரின் லீலைகளை தவிர….

    “அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் ப்ளாரன்ஸ்மேரி (வயது 31). கன்னியாஸ்திரியான இவர் திருச்சியில் உள்ள புனிதவளனார் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக, திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியது. இதற்கிடையில் ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    ராஜரத்தினத்தின் ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட் கிளைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜசூர்யா, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அடுத்த நாள் திருச்சி ஜெ.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய்க்கான ஜாமீன் தொகை கட்டிய பின்னர் இரண்டு வார காலத்திற்கு, கோர்ட்டின் மகளிர் காவல் நிலையத்தில் காலையும், மாலையும் இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய ராஜரத்தினம், பத்திரிகையாளர்களுக்கு பயந்து அதிகாலை 6 மணிக்கே கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராஜானர். அப்போது கோட்டை காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் வளர்மதி, ராஜரத்தினத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றார் “

  2. Manoharan

    இந்தியாவுக்கு எதற்கு ஐநாவில் நிரந்திர இடம் ? இலங்கையை காப்பாற்றுவதற்கா ? இவர்கள் ஐநாவில் நிரந்திர இடம் வாங்கி எதையும் கிழிக்கப் போவதில்லை. அதேபோல் ஒபாமாவும் அமெரிக்கா போனதும் இதை மறந்துவிடுவார் .

  3. Mariappan

    ஐ நா வில் வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் இவன் வந்தது அவன் பப்ளிசிட்டி மற்றும் அணு ஒப்பந்தம் பற்றி ரகசியமாக பேசத்தான். நாங்க கொடுக்கிற ஹை கிளாஸ் உரேனியத்த வச்சு சின்ன புள்ள மாதிரி அனுகுண்டல்லாம் எனக்கு தெரியாம செய்ய கூடாது ன்னு வடிவேலே பானியில சொல்ல வந்திருப்பானோ?

  4. Kumar

    வினோ ellathayam போடுவார் ஆன pathriyar நியூஸ் மட்டும் போட மாட்டரு.அனா nithyanandava பத்தி மட்டும் நியூஸ் லைவ் பண்ணுவாரு.Europela அவன் அவன் பத்ரியார் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணி கிட்டு இருக்கான் ஆன வினோ அதை பத்தியெல்லாம் நியூஸ் புப்ளிஷ் பண்ண மாட்டரு.Good work Vino.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *