BREAKING NEWS
Search

ஐஃபா விழா… போகாமல் ‘புறக்கணித்த’ ராஜபக்சே!!

ஐஃபா விழா… போகாமல் ‘புறக்கணித்த’ ராஜபக்சே!!

கொழும்பு: பெரும் அமர்க்களமாக நடக்கும் என இலங்கை அரசால் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்ட ஐஃபா விழாவின் இறுதி நாள் நிகழ்வில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூட பங்கேற்கவில்லை!

தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தென்னிந்திய திரையுலகினரின் கடும் எதிர்ப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கலையிழந்து மாபெரும் தோல்வியைத் தழுவிய ஐஃபா விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடந்தன. இதில்தான் மதிப்புக்குரிய ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராஜபக்சே விருதுகள் வழங்கவிருப்பதாக ஐஃபா அறிவித்திருந்தது. இலங்கை அரசு தரப்பும் விழாவுக்கு ஒருநாள் முன்பு வரை கூறிவந்தது. முதல் நாள் துவக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராஜபக்சே, விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை. தனக்கு பதில் தனது மனைவி ஷிராந்தியையும் மகன் நாமல் ராஜபக்சேயையும் மட்டும் அனுப்பி வைத்திருந்தார். விழாவுக்கு மிகத் தாமதமாக வந்த ஷிராந்தி சிறிது நேரமே இருந்துவிட்டுக் கிளம்பினார். அவர் மகன் நாமல் ராஜபக்சேவும் சிறிது நேரத்தில் புறப்பட்டுவிட்டார்.

இந்த விழாவுக்கு கடைசி நேரத்திலும் அமிதாப், ஷாரூக்கை மட்டுமாவது வரவழைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தார் ராஜபக்சே. இதற்கு இந்திய மத்திய அரசின் துணையையும் அவர் நாடத் தயங்கவில்லை. ஆனால் இந்த அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழர்களின் உணர்வையும் கோபத்தையும் புரிந்து கொண்டு அமைதியாகப் பின்வாங்கிவிட்டனர் முன்னணி இந்தி நட்சத்திரங்கள். விருது பெற வேண்டிய நட்சத்திரங்களில் 90 சதவிகிதத்தினர் விழாவைப் புறக்கணித்து கடைசி வரை வராமலே இருந்துவிட்டனர். ஏகப்பட்ட விருதுகளைக் குவித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் அமீர்கான் கூட வரவில்லை.

இதையெல்லாம் விட முக்கியமானது, காதலருடன் கொழும்பு சென்ற தமிழ் நடிகை ஜெனிலியா, பிரச்சினையின் தீவிரம் கருதி அடித்துப் பிடித்துக் கொண்டு மும்பை திரும்பிவிட்டார். பின்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு விஷயத்தையும் கூறியுள்ளார். அவரை காய்ச்சி எடுத்த திரையுலக அமைப்புகள், அதன் பிறகே தடையை அறிவித்தனர். ஜெனிலியாவின் இந்த ஓட்டத்தையும் ஆட்டத்தையும் பார்த்து ஐஃபா அமைப்பாளர்களும், இந்த விழாவின் இலங்கை ஏற்பாட்டாளர்களும் திகைத்துப் போனார்களாம்.

இன்னொரு பக்கம், இறுதி நாள் நிகழ்வுக்கு முன் ராஜபக்சே அளித்த விருந்தில், விழாவுக்கு வந்த நடிகர் நடிகைகளில் பெரும்பாலானோர் போகாமல் தவிர்த்துள்ளனர்.

இதனால் கோபத்துக்குள்ளான ராஜபக்சே, ஐஃபா இறுதி நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்துவிட்டதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என இப்போது காரணம் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்களின் புறக்கணிப்பை விட, ராஜபக்சேயின் இந்த கடைசி நேர புறக்கணிப்புதான் பெரும் விமர்சனத்தையும் நையாண்டியையும் கிளப்பிவிட்டுள்ளது.

கிண்டலுக்குள்ளான நாமல் கிரிக்கெட்!

இந்த விழாவின் இன்னொரு பகுதியாக இந்தி நடிகர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக நாமல் ராஜபக்சே களமிறங்க, மைதானத்திலிருந்த ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்து சிரித்தார்களாம்!

கடும் விமர்சனம்…

ஐஃபா விழாவுக்காக அரசு பணம் செலவழித்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளன. நட்சத்திரங்கள் இல்லாமல் உபரி நடிகர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஐஃபா விழாவுக்கு 1 பில்லியன் ரூபா மக்கள் பணத்தைச் செலவழித்தது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டமொன்றை அதிபர் முன்வைப்பது அவசியம் என்றும் அதன் பிறகு இந்த கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ளலாம் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
2 thoughts on “ஐஃபா விழா… போகாமல் ‘புறக்கணித்த’ ராஜபக்சே!!

  1. sakthivel

    சிங்கள ஓநாய்கள் தனக்கே வைத்துக்கொண்ட ஆப்பு.

    இரத்த வெறிபிடித்த மிருகங்களின் கூத்தாட்டம் தோல்வியில்…
    தமிழர்களின் ஒற்றுமை தொடர வாழ்த்துக்கள்.

  2. Gokul

    Aamir khan never attends awards function including IIFA,Filmfare,Screen etc..Dont false propagand that he has not attended the function because of Srilankan issue.Shah rukh has not attended the IIFA function for the past 2 years

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *