BREAKING NEWS
Search

ஏர் இந்தியா ரூட்டில் பிஎஸ்என்எலும்!

ஏர் இந்தியா ரூட்டில் பிஎஸ்என்எலும்!

டெல்லி: அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்போது சிக்கலுக்குள்ளாகி தடுமாறத் துவங்கியுள்ளது. jegttdidggj

உடனடியாக அவசர, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும், இல்லையேல் பிஎஸ்என்எலும் ஏர் இந்தியா வழியில் நஷ்டக் கணக்கு, வேலைக் குறைப்பு, சம்பள நிறுத்தம் என போக வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தியாவில் செயல்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலேயே மிகவும் வசதிமிக்கது, அதிக ஊழியர்களைக் கொண்டது, நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு புதிய சேவையையும் தரவல்லது பிஸ்என்எல் மட்டுமே. தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு அதற்கான வசதிகளைத் தரக்கூடிய சக்தி வாய்ந்த இடத்தில் அமர்ந்திருப்பது பிஎஸ்என்எலே.

இந்தியாவின் ராணுவம் மற்றும் ரெயில்வே துறைகளுக்கு அடுத்த மிகப்பெரிய துறை பிஎஸ்என்எல்தான். நியாயமாக, ஆண்டுக்கு ஆண்டு லாபம் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும். இன்றும் பிஎஸ்என்எல் சேவைதான் மக்களின் முதல் தேர்வு. அது சரியில்லை என்ற அதிருப்தியில்தான் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள்.

ஆனால் கொடுமை பாருங்கள்… கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும். அதன் விளைவு 97 சதவிகித லாபம் குறைந்து, இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் நஷ்டக் கணக்கு காட்ட தயாராகி வருகிறது பிஎஸ்என்எல். இந்தப் பேருண்மையை இத்தனை நாட்களும் கமுக்கமாக வைத்திருந்து இப்போது வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல்.

2007-2008-ல் பிஎஸ்என்எல் பெற்ற நிகர லாபம் (வரி போக) ரூ.3006 கோடி. ஆனால் இந்த ஆண்டு இதன் லாபம் ரூ.104 கோடி மட்டுமே!

இன்னொரு கொடுமையைப் பாருங்கள்… இந்திய அளவில் அனைத்து மொபைல் ஆபரேட்டர்களின் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது இந்த இரண்டு ஆண்டுகளில். குறிப்பாக ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ்… இந்த நிறுவனங்கள்தான் லேண்ட்லைன் இணைப்புகளும் தருகின்றன. பெரும்பாலான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைத்தான் இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் வசம் இழுத்துள்ளன.

மோசமான சேவை, வாடிக்கையரை அவமதித்தல், தாறுமாறான பில்லிங் என எவ்வளவு முடியுமோ அந்த அளவு வாடிக்கையாளர்களை வெறுப்பேற்றி, தனியார் நிறுவனங்கள் பக்கம் ஓட ஓட விரட்டியடித்த பெருமை பிஎஸ்என்எலுக்கே சேரும்.

ஒரு உதாரணம் பாருங்கள்…

பிராண்ட் பேண்ட் வசதியை எங்கும் கொண்டு செல்லும் சிறிய மோடம்களை பிஎஸ்என்எல்தான் முதலில் அறிமுகம் செய்தது. ஆனால் அப்படியொரு வசதி இருப்பதை மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டது பிஎஸ்என்எல். ஆனால் இவர்களுக்குப் பின் அந்த வசதியைக் கொண்டு வந்த டாடா, ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மூன்று நிறுவனங்களுமே அந்த சாதனைத்தை படுபிரபலமாக்கிவிட்டன.

இந்த உபகரணம் குறித்து வாடிக்கையாளர் அலுவலகத்தில் விசாரிக்கப் போனால், அதற்கு அவர்கள் பதில் சொல்லும் முறையைக் கேட்டு வெறுத்துப் போய், ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்துக்கே போகலாம் என்ற எண்ணம்தான் மிஞ்சும்.

கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட புதிய லேண்ட்லைன் இணைப்புகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி, நிம்மதியாக அலுவலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.

2004-2005-ல் இந்த லேண்ட் லைன் இணைப்புகள் மூலம் பிஎஸ்என்எலுக்கு கிடைத்த வருவாய் மட்டும் ரூ.22,814 கோடி. ஆனால் அதுவே இந்த ஆண்டு ரூ.11,505 கோடியாக குறைந்துவிட்டது.

மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் இணைப்புகள் சிறப்பாக இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்போ, தேடி வருகிற வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விளக்கி இணைப்பைத் தரும் முயற்சியோ சுத்தமாக இல்லை, பிஎஸ்என்எல் பணியாளர்களிடம்.

இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாவிடம் விசாரித்தால், “இந்தக் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக வருவாய் குறைவு, லாபத்தில் முழுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது நிஜம்தான். இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளோம். மீண்டும் இந்த நிறுவனத்தை நம்பர் ஒன் இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவோம். வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுமையான விளம்பர உத்திகள் மற்றும் இணக்கமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்…,” என்கிறார்.

வெறும் வாய்வார்த்தைகளால் எந்த பயனும் இல்லை. காரணம், பிஎஸ்என்எல்லை தனியார் துறைக்கு படிப்படியாக தாரை வார்க்கும் முயற்சிக்கு மத்திய அரசின் பூரண ஆசி இருப்பதாக பிஎஸ்என்எல் மேல்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

எனவே உள்ளுக்குள் அப்படி ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு, ஒப்புக்கு சில ஜிகினா வேலைகள் செய்து மக்களை ஏமாற்றுவதை விட, அரசின் நிஜமான நோக்கம் என்னவென்பதை தெளிவாக அறிவித்துவிட்டு, சீக்கிரம் மூடுவிழாவாவது நடத்தித் தொலைக்கலாம். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை நேரு உருவாக்கிய கோயிலாக இன்னமும் மதிக்கும் இந்தியர்களின் மன அழுத்தமாவது மிஞ்சும்!
2 thoughts on “ஏர் இந்தியா ரூட்டில் பிஎஸ்என்எலும்!

  1. சூர்யா

    கேள்வி கேட்க யாருமில்லை. எல்லா கூத்தும் நடக்கட்டும். நாடு நாசமாய் போகட்டும்.

  2. கிரி

    //மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் இணைப்புகள் சிறப்பாக இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்போ, தேடி வருகிற வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விளக்கி இணைப்பைத் தரும் முயற்சியோ சுத்தமாக இல்லை, பிஎஸ்என்எல் பணியாளர்களிடம்//

    தலைமை சரி இல்லாதவரை.. எதுவும் உருப்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *