BREAKING NEWS
Search

எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. சீக்கிரம் வருவேன்.. நல்லதே நடக்கும்! – ரஜினி

சீக்கிரம் சந்திக்க வருவேன்… நல்லதே நடக்கும்! – ரசிகரிடம் ரஜினி தந்த உறுதி

ஜினியை தனியே சந்திக்கிற வாய்ப்பு கிடைக்குமா? – இது ரசிகன் மட்டுமல்ல, ரசிகர் அல்லாதவர்களுக்கும் கூட மில்லியன் டாலர் கேள்விதான்.

ஆனால் அப்படியொரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது பழனி பாட்ஷா என்ற ரசிகருக்கு. சமீபத்தில் மதுரையில் விபத்தில் இறந்து கார்த்திக் என்ற ரசிகரின் குடும்பத்தை ரஜினியிடம் அழைத்துவரும் பொறுப்பை ரஜினி இவரிடம்தான் சுதாகர் மூலம் தந்திருந்தார்.

ரஜினியிடம் கார்த்திக்கின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்திய பிறகு, தனக்குக் கிடைத்த சில நிமிட நேரத்தில், ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டு, பாஸிடிவான பதில்களையும் பெற்றுள்ளார் பழனி பாட்ஷா. ஒரு ரசிகனாக அவருக்கு இது பெரிய சாதனை மட்டுமல்ல, பல லட்சம் ரசிகர்களின் மனதிலிருந்த நிரந்தர கேள்விகளுக்கு உற்சாக பதிலாகவும் அமைந்துள்ளது.

ரஜினியைச் சந்தித்தது, விபத்தில் இறந்த கார்த்திக்கின் குடும்பத்தின் மேல் ரஜினி காட்டிய பரிவு, ஒரு ரசிகனின் கேள்விதானே என்ற அலட்சியமின்றி, மிகப் பொறுப்பாகவும், பொறுமையாகவும் பதிலளித்த விதம், அனைத்துக்கும் மேலாய், அரசியல் குறித்த ரஜினி மனம் திறந்து பேசியது… போன்றவை குறித்து சமீபத்தில் ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு பழனி பாட்ஷா சிறப்புப் பேட்டியே அளித்துள்ளார் (ரஜினியை ஒரு முறை சந்தித்ததன் பலன், கவர் ஸ்டோரியில் வரும் அளவு உயர்த்தியிருக்கிறது பழனி பாட்ஷாவை!!).

அந்தப் பேட்டியில் பழனி பாட்ஷா கூறியிருப்பது:

”கார்த்திகேயனின் குடும்பத்தினரைப் பார்த்ததுமே தலைவருக்குக் கண்கள் கலங்கிவிட்டன. கார்த்தி கேயனின் இளைய சகோதரியைப் பார்த்து, ‘நீ என்னம்மா படிக்கிற?’ன்னு கேட்டார்.

‘பி.எஸ்ஸி-யோட நான் படிப்பை நிறுத்திட்டேன் சார். இப்போ வீட்ல வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க’ன்னு அந்தப் பொண்ணு சொல்ல, ‘வெரிகுட்… வெரிகுட்… நல்ல வரனாப் பாருங்க. சொந்தத்துலயா… இல்லை, வெளியிலேயா?’ன்னு விசாரிச்சு, சட்டுனு உற்சாகமாகிட்டார்.

அந்தப் பொண்ணுக்கு வயது 28-ன்னு தெரிஞ்சுக்கிட்டதும், ‘சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடுங்க… வரன் பார்த்த உடனே சொல்லுங்க… என்ன உதவின்னாலும் நான் செய்றேன்’னு தைரியம் கொடுத்தார்.

கார்த்திக்கின் படத்துடன் ரஜினி

கார்த்திகேயன் குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுத்துக்கிட்டவர், நாலு லட்ச ரூபாய் பணத்தை அவங்ககிட்ட கொடுத்தார். கார்த்திகேயனோட அம்மா கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க.

தலைவர் அந்தம்மாவைத் தேத்தினப்ப, ‘உங்ககூட சேர்ந்து படம் எடுத்துக்கணும்கிறதுதான் என் பையனோட ஆசை. அதுகூட நிறைவேறாமப் போச்சு. இன்னிக்கு நாங்க எல்லோரும் உங்ககூட படம் எடுத்துக்கிறோம். அதைப் பார்க்கக்கூட அவன் இல்லாமப் போயிட்டானே’ன்னு அழுதாங்க.

உடனே, கார்த்திகேயனோட போட்டோவை வாங்கின தலைவர், அதைக் கையில் வெச்சுக்கிட்டு போஸ் கொடுத்தார். ‘கவலைப்படாதீங்கம்மா… கார்த்தியும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படமா நினைச்சு, இதை வெச்சுக்கங்க’ன்னு சொன்னார். அந்த வார்த்தையில சுத்தி நின்ன எல்லோருமே கலங்கிட்டோம் சார்!” என விவரித்த பழனி பாட்ஷா, ஒரு ரசிகனாக ரஜினியோடு உரையாடிய நிமிடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

”தலைவர் தன்னோட ரசிகர்களைப் பார்க்கிறது இல்லை… பேசுறது இல்லைன்னு பெரிய குமுறலே இருக்கு. ஆனா, தலைவர்கிட்ட அதை யாரும் சொல்றது இல்லை. கார்த்திகேயனின் குடும்ப சந்திப்பு முடிந்ததுமே, தலைவர்கிட்ட சில நிமிஷங்கள் பேச எனக்கு நேரம் கிடைச்சது. அஞ்சு நிமிஷம் பேசினாலும், அத்தனை ரசிகர்களோட உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கிட்ட கொட்டிடணும்னு நினைச்சுதான் நான் சென்னைக்கே கிளம்பினேன். அதனால், ரசிகர்கள் தலைவருக்காக ரெடி பண்ணிய விளம்பர நகல்களையும், பத்திரிகை செய்திகளையும் புகைப்படங்களாக்கி, கூடவே எடுத்துட்டுப் போய்இருந்தேன்.

‘சார், உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும்’னு நான் கேட்டதும், ‘அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் இந்த நேரத்துல மன்றம் குறித்துப் பேசணுமா?’ன்னு கேட்டார்.

‘அவசியம் பேசணும் தலைவா!’னு நான் சொன்னதும் சிரிச்சுட்டார்.

‘நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு நம்பி, நாங்க அடிச்ச ஃப்ளெக்ஸ், பேனர், போஸ்டர்களை எல்லாம் பாருங்க தலைவரே’ன்னு சொல்லி, அத்தனை புகைப்படங்களையும் காட்டினேன்.

ஒவ்வொண்ணாப் பார்த்தவர், ‘இந்த மாதிரில்லாம் செலவு பண்ணாதீங்க. முதல்ல குடும்பத்தைப் பாருங்க’ன்னு சொன்னார்!”

மேற்கொண்டு ரஜினிக்கும் அவருக்குமிடையே நடந்த உரையாடல் இது:

”சமீப காலமா நீங்க ரசிகர்களைச் சந்திக்கிறது இல்லை. ரசிகர் மன்ற மாநாடும் போடுறது இல்லை?”

ரஜினியுடன் ரசிகர் பழனி பாட்ஷா

”சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். உங்க எல்லோரையும் பார்க்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா கண்ணா? நேரம் கை கூடட்டும். நிச்சயம் சந்திக்கிறேன். அதுவரைக்கும் நீங்க உங்க நேரத்தை குடும்பத்துக்காகச் செலவிடுங்க!”

” ‘சட்டமன்ற நாயகனே’, ‘நாளைய ஆட்சியே’ன்னு நாங்க அடிக்கிற போஸ்டர்களைப் பார்க்கிறப்ப, என்ன நினைப் பீங்க தலைவரே?”

”நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ரசிகர்கள் எனக்காக ஏன் இப்படிச் செலவு பண்றாங்கன்னு தெரியலை. சீக்கிரமே இது சம்பந்தமாப் பேசிடலாம்! நான் மதுரைக்கு வந்தப்ப, யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சேன். ஆனா, அங்கேகூட அவ்வளவு ரசிகர்கள் திரண்டு வந்துட்டாங்க. அதுல துரதிஷ்டவசமா ஒரு விபத்தும் நடந்துடுச்சு. அதனாலதான் எல்லாத்துக்குமே தயங்க வேண்டி இருக்கு!”

”தலைவரே… ரஜினிங்கிற வார்த்தையோட சக்தி உங்களுக்குத் தெரியலை. நீங்க வருவீங்களான்னு தெரியாதப்பவே இத்தனை ரசிகர்கள் வந்தாங்க. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, ஏர்போர்ட்லயே ஆயிரக்கணக்கில் குவிஞ்சு இருப்பாங்க தலைவரே!”

”வேணாம் கண்ணா… அப்படி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டாம்!”

”நீங்க அரசியலுக்கு வரணும்கிறதுதான் எங்க எல்லோருடைய ஆசையும். ஆனா, நீங்க அரசியல் சம்பந்தமா எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க. நீங்க அரசியலுக்கு வருவீங்களா… மாட்டீங்களா?”

(ரஜினியிடம் ஹா… ஹா… சிரிப்பு)

”இந்தக் கேள்விக்கு நீங்க நிச்சயமா சிரிப்பீங்கன்னு தெரியும் தலைவா… தயவுபண்ணி வெளிப்படையா சொல்லுங்க?”

”எல்லோருடைய நம்பிக்கையையும் மதிக்கிறவன் நான். எந்த முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு எடுத்துட முடியாது கண்ணா. நமக்கு மேல இருக்கிறவன் சரியான நேரத்தில், சரியா நம்மளை வழி நடத்துவான். இத்தனை வருஷம், எல்லா விஷயங்களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசியலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான்!”

”இந்த சந்திப்பில் நீங்க என்ன சொன்னதா ரசிகர்கள்கிட்ட நான் சொல்றது?”

”எல்லாம் நல்லபடி நடக்கும்னு சொல்லுங்க. சீக்கிரமே சந்திக்க வருவேன். உட்கார்ந்து பேசுவோம். அப்புறம், நல்ல முடிவை எடுப்போம்!”

-என்வழி
24 thoughts on “எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. சீக்கிரம் வருவேன்.. நல்லதே நடக்கும்! – ரஜினி

  1. mariappan

    அண்ணன் ரசிகன்னு சொல்றப்போ பெருமையா இருக்கு vaalga பல்லாண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *