BREAKING NEWS
Search

என் வாரிசுகள் நடிப்பதை குறை சொல்வதா? – கருணாநிதி கோபம்

என் வாரிசுகள் நடிப்பதை குறை சொல்வதா? – கருணாநிதி கோபம்

சென்னை: எல்லோரது வாரிசுகளும்தான் சினிமாவில் நடிக்கிறார்கள். ஆனால் என் வாரிசுகள் நடிக்க வந்தால் மட்டும் கிண்டலடிப்பது ஏன்?, என்றார் கருணாநிதி.

சென்னையை அடுத்த பையனூரில் 96 ஏக்கரில் ‘கலைஞர் நகரம்’ என்ற பெயரில் பிரமாண்டமான திரைப்பட நகரம் உருவாகிறது.

அங்கு சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்காக 15 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீடு கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

திரைப்படத் துறையில் இன்று நேற்றல்ல; ஏறத்தாழ 60 ஆண்டு காலத்திற்கு மேலாக கலைத் துறையிலே ஈடுபாடு கொண்டவன் நான். “கருணாநிதிக்கு கலைத் துறையினால் பெயரா? அரசியல் துறையால் பெயரா?” என்றெல்லாம்கூட பட்டிமன்றம் நடத்துவார்கள்.

நான் அந்த பட்டிமன்றத் தலைவரைப் பார்த்து சொல்லும் போது, “நீங்கள் தீர்ப்புக்கு ஒன்றும் திண்டாடத் தேவையில்லை. கலையும், அரசியலும் கலந்ததால் ஏற்பட்டதுதான் கருணாநிதிக்கு இந்தப் பெயர் என்று சொல்லி பட்டிமன்றத் தீர்ப்பை வழங்கி விடலாமே” என்று நான் சொல்வது உண்டு.

அரசியலிலிருந்து கலைத்துறைக்கு வந்தவனா அல்லது கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவனா என்ற கேள்விக்கு இன்னும் பல பேருக்குப் பதில் தெரியவில்லை. பதில் கிடைக்கவில்லை என்று சொல்லமாட்டேன். கிடைத்தாலும் சொல்லத் தெரியவில்லை பல பேருக்கு. அந்த வகையில், கலை, அரசியல் இரண்டையும் நாம் வெவ்வேறாகப் பார்க்காமல், கலையை எந்த அளவுக்கு அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அந்தளவிற்குப் பயன்படுத்தி, அதன் காரணமாக அரசியலில் பல வெற்றிகளைப் பெறுவதற்கு நானும், என்னுடைய இயக்கமும் காரணமாக இருந்திருக்கிறோம்.

ஆனால், இதிலே எங்களுடைய வளர்ச்சியை மாத்திரம் பார்க்காமல், இந்தத் துறையிலே இருந்து வியர்வை வடிக்கின்ற தொழிலாளர்கள், பாடுபடுகின்ற பாட்டாளிகள் அவர்கள் வாழ வேண்டும். அவர்கள் வாழ்வதற்குத் தேவையான ஒரு குடியிருப்பைக்கூட அவர்களுக்கு நம்மால் செய்து தரமுடியவில்லை என்றால், வேறு எப்படித்தான் அவர்களை நாம் வாழவைக்க முடியும் என்று எனக்கு ஏற்பட்ட கவலை; ஒன்றல்ல, இரண்டல்ல; பல ஆண்டுகாலமாக என்னுடைய மனதை வருத்திக் கொண்டே இருந்தது.

பெரிய ஆடம்பரமான வீடுகளைக் கட்டுகிறார்கள், எங்கே? ஸ்டூடியோக்களில். ஆடம்பரமான மாளிகைகள் அமைக்கிறார்கள், எங்கே? ஸ்டூடியோக்களில். ஆடம்பரமான பாலங்களைக் கட்டுகிறார்கள், அணைகளைக் கட்டுகிறார்கள், எங்கே? யார் கட்டுவது? படத் துறையிலே இருக்கிற தொழிலாளர்கள்.

அவைகளெல்லாம் படக் காட்சிகளுக்கு கட்டப்படுகின்றவை. ஆனால், அந்த இடங்களில் அவர்களால் வாழமுடிகின்றதா? வாழக்கூடிய தகுதியோ, வாய்ப்போ அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால், அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படி கிடைக்காத காரணத்தினால்தான், நம்முடைய திரைப்படத் தொழிலாளர்கள், தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அந்தத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கையை வைத்து இந்த அரசு இதை நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டார்கள்.

இந்த அரசிடத்தில் திரைப்படத் துறையின் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒன்று, இரண்டல்ல; வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் முடிந்த வரையில் நிறைவேற்றி வைத்துள்ள அரசுதான் தி.மு.க. அரசு.

படப்பிடிப்பு கட்டணம் குறைப்பு

நம்முடைய படத் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கின்றது, நாங்கள் வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் சென்றால், மிக அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது, ஆகவே படத் தயாரிப்புக்கான செலவு அதிகமாகிறது, அதை நீங்கள் குறைத்துத் தர வேண்டுமென்று கேட்டபோது, நான் எவ்வளவு என்று அதை ஆராய்ந்தபோது, தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள கலைச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓர் இடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்று இருந்தது. அதை ரூ.1,000 என்று குறைத்து ஆணை பிறப்பித்தேன். ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை 1996ம் ஆண்டு ரூ.500 என்று குறைத்து உத்தரவிடப்பட்டது.

இப்போது கட்டப்பட்டு முடிவடைகின்ற தருவாயில் இருக்கின்ற புதிய தலைமைச் செயலக, சட்டமன்ற வளாகம் இருக்கிறதே, அதற்குப் பக்கத்திலே இருக்கின்ற ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு என்றால், தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. ஆனால் 2003-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலே இல்லை. வேறு எந்த ஆட்சி இருந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அரசியலாகிவிடும்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ராஜாஜி மண்டபத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்றிருந்த படப்பிடிப்புக் கட்டணம் – 2003ல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று உயர்த்தப்பட்டது. கேட்டால் இரண்டு பூஜ்யங்கள்தானே அதிகம் என்று சொல்வார்கள். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்ட பிறகு, அந்த ஒரு லட்சம் ரூபாய் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தார்கள். ஆனால், 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு அந்தக் கட்டணம் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

கேளிக்கை வரி ரத்து

படப்பிடிப்பு நடத்தப்படும் அவுட்டோர் இடங்களில், வகை – 1 என்ற பிரிவில் இடம்பெறும் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை, 5 ஆயிரம் ரூபாய் என்றும் – ஐயாயிரம் ரூபாய் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை, 3 ஆயிரம் ரூபாய் என்றும் தி.மு.க. ஆட்சிக் காலத்திலே குறைத்தோம்.

இவ்வளவிற்குப் பிறகும் நம்முடைய படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட அரங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் என்னைச் சந்தித்து கேளிக்கை வரியிலே தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டபோது – நான் அவர்களிடம், கேளிக்கை வரியிலே நான் உதவி செய்கிறேன் – நீங்கள் எனக்காக என்னுடைய தமிழ் மொழியிலே உதவி செய்ய வேண்டுமென்று கேட்டேன். என்ன என்று கேட்டார்கள். நீங்கள் எடுக்கின்ற படங்களுக்குப் பெயரிடும்போது – தமிழிலே பெயரிட வேண்டும் என்று கூறினேன். அப்படி தமிழிலே திரைப்படங்களுக்கு பெயரிட்டால், கேளிக்கை வரியே இல்லாமல் இந்த அரசு உத்தரவிடும் என்று சொன்னேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அதன் காரணமாக இப்போது அவர்கள் எடுக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் தமிழ் மொழியிலே தான் பெயரிடப்படுகின்றன. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கேளிக்கை வரியே இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

‘அடடே..’ விகடத் துணுக்கு

இவைகளையெல்லாம் சொல்லுகின்ற காரணத்தால் ஏதோ சினிமாவுக்கு கருணாநிதி அறுபதாண்டு காலமாக அதிலே இருக்கின்ற காரணத்தால், இவைகளையெல்லாம் செய்கிறான் என்று யாரும் கருதக் கூடாது. ஏனென்றால் அரசியலில்; “ஒரு அரசு செய்தாலும் குற்றம் – செய்யாவிட்டாலும் குற்றம்! இதுதான் அரசியல்.” நான் அந்த அரசியல் பற்றிய வியாக்ஞானங்களுக்கு அதிகம் செல்ல விரும்பவில்லை. காரணம் இந்த விழா முழுக்கமுழுக்க கலைத்துறை நண்பர்களுக்காக, கலைத் துறையிலே தங்களுடைய வியர்வையை வடித்துப் பாடுபட்ட தொழிலாளத் தோழர்களுக்காக நடத்தப்படுகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு விழா.

இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்னவென்றால் – “கலைஞர் வரலாற்றிலேயே முதன்முறையாக – கலைஞர் கதை வசனத்தில் – கலைஞர் பேரன் தயாரிப்பில் – கலைஞர் பேரன் இயக்கத்தில் – கலைஞர் பேரன் நடித்த – புத்தம் புதிய திரைக்காவியம் – கலைஞர் டி.வி.யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்” என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக்கூடும். ‘அடடே!’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது இது.

ரஜினி வாரிசுகள்….

என்ன… கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத் துறையிலே ஈடுபடக் கூடாதா? என் மனைவி மலடியாக இருந்திருக்க வேண்டுமா என்ன? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?

நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள ரஜினிகாந்தின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும்தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. இந்தியாவிலே பிரிதிவிராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆரும், அவருடைய சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியும் மைசூரில் ‘நாம்’ திரைப்படத்திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது – மைசூரில் பிரிதிவிராஜ் கபூரின் நாடகம் ‘பதான்’ என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம்.

பிரிதிவிராஜ் கபூர் பல படங்களில் நடித்தார். ‘அக்பர்’ அவர் நடித்த படம் தான். நாங்கள் பார்த்த ‘பதான்’ நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது – வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு – சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக்கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள்.

குறுக்கே நூல் போட்டவர்கள்…

அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு – அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவிராஜ் கபூர் – அவருடைய மகன் ராஜ்கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா? ராஜ்கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீர் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?

கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு கேலிச்சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிவாஜிக்கு பிரபு இல்லையா…

பிரிதிவிராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத்துறையிலே – மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் – என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக்கூடாது.

ஏனென்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவிராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நம்முடைய ரஜினியின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ரஜினி மீது பொறாமையல்ல…

நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை. ரஜினிகாந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டுவிடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத்துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடுதான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத்துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்? கலைத்துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்?

கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான் பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல – ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு – நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது.

அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான் பையனூரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்படவுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பணி இதே முறையில் என்றென்றும் தொடரும் – கலை உலகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரண பெருமகனுக்கு மாத்திரமல்ல அவர்கள் ஒரு நடிகராக இருந்தாலும் சரி, நடிகராக இல்லாமல் இருந்தாலும் சரி, அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை நான் என்றென்றும் செய்து கொண்டேயிருப்பேன். அதைத்தான் சரத்குமார் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்.

காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக எவ்வளவு பேர் இன்றைக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள், அதிலே ஒரு இளைஞரை மருத்துவமனையிலேதான் கண்ட காட்சியை இங்கே அவர் எடுத்துச் சொன்னார். அதைப் போலவே கலைத்துறையிலே மம்மூட்டி ஒரு நாள் சென்னைக்கு தொடர்பு கொண்டு தொலைபேசியிலே என்னிடம் பேசினார்.

பிரபல நடிகர் ஹனீபா – கேரளத்தில், கர்நாடகத்தில், ஆந்திராவில், தமிழகத்தில் பல படங்களில் நடித்துப் பெருமை பெற்றவர். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது, இறந்து விடவும் கூடும், அப்படி ஏதாவது ஆகிவிட்டால் எங்கள் ஊர், திருவனந்தபுரத்திற்கு அவருடைய உடலை அனுப்பி வைக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மம்மூட்டி என்னிடம் கேட்டார். சரி, அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு, ஏதோ, எவரையோ அனுப்பச் சொல்லி யாரிடமோ சொல்லி விட்டு அப்படியே விட்டுவிடவில்லை. அனுப்பி ஆயிற்றா என்று கேட்டும், அதற்குப் பிறகும் வந்து சேர்ந்ததா என்று மம்மூட்டிக்கு போன் செய்து கேட்டும் – அந்த அளவிற்கு ஒரு கலைத்துறையிலே உள்ள நண்பரின் கஷ்டங்களைப் பற்றி, உணர்ந்தவன், அதிலே என்னை இணைத்துக் கொண்டவன், என்றைக்கும் மனித சமுதாயத்திலே யாருக்கு என்ன ஊறு நேருகிறதோ, யாருக்கு எந்தக் கேடுபாடு வரினும் அவற்றில் என்னையும் இணைத்துக் கொண்டு – அவைகளை நீக்குவதிலே முதல் ஆளாக நான் இருப்பேன். தமிழகத்திற்கு மாத்திரம் முதல்வர் அல்ல – இந்தத் தயவு தாட்சண்யங்களிலும் நான் முதல் ஆளாக இருப்பேன்…,” என்றார்.




One thought on “என் வாரிசுகள் நடிப்பதை குறை சொல்வதா? – கருணாநிதி கோபம்

  1. Mahesh

    வாரிசுகள் நடிப்பதையோ , படம் தயாரிப்பதியோ யாரும் குறை கூறவில்லை.ரஜினி மற்றும் கலைஞர் குறிப்புட்டுள்ள அனைவருமே உழைப்பால் தங்கள் திறமையால் முன்னேறியதை நாடறியும். கலைஞரின் வாரிசுகள் அனைவருமே ( அத்தனை மகனகளுக்கும், அத்தனை பேரன்களுக்கும் ) எவ்வளவு முதலேடு செய்தும் படம் தயாரிக்க ஏது இவ்வளவு பணம் ? நினைத்தவுடன் (6-10) channels கொண்ட கலைஞர் டிவி துவங்க ஏது பணம்? கலைஞர் ஒருவர் திரைப்படத்துக்கும் , நாடகத்துக்கும் வசனம் எழுதி சம்பாரித்து இதல்லாம் என்றால் , உலகியலே இதுவரை அதிகம் சம்பாரித்த வசனகர்த்த இவர் ஒருவரே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *