BREAKING NEWS
Search

என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்! – கருணாநிதி

என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண அல்லது தமிழீழத்துக்காக உயிரையும் தர விரும்புகிறேன்! – கருணாநிதி


திருவாரூர்: தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்,” என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

எனக்கு 88 வயது நிறைந்து 89 வயது தொடங்குகிறது என்பதை என் மனைவியையும் எதிரே வைத்துக் கொண்டு சொல்லும்போது வெட்கமாக தான் இருக்கிறது. அவருக்கே கூட தெரியாமல் இருக்கக்கூடிய ஒன்று. எனக்கு 89 வயது ஆகிவிட்டது என்பது.

இவருக்கா 89 வயது என்று வியப்போடு என்னை பார்க்கின்ற என்னுடைய துணைவியாருக்கும், எனது வீட்டு பிள்ளைகளுக்கும், தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் சொல்வது 89 என்பது ஒரு எண்தான்.

அது ஏதோ ஆண்டுக்கு ஆண்டு, வயதை குறைக்கின்ற ஒரு சக்தி அல்ல என்பது தான். வயதாகிவிட்டது பாவம் என்று சொல்வார்கள். வயதானது என்னை பொருத்தவரையிலேயே பரிதாபத்திற்குரிய ஒன்றாக நான் கருதவில்லை. பெருமைக்குரிய ஒன்றாக நான் கருதுகின்றேன்.

இது தோல்வி அடைந்த கட்சியா…

இளைஞர்கள் இருக்கின்ற காரணத்தினால் திராவிட முன்னேற்ற கழகத்தை யாராலும் அழிக்க முடியாது. கொஞ்சம் எண்ணி பாருங்கள் நீங்கள் மாத்திரமல்ல, நம்மை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்ட மாற்றுக்கட்சியினர் கூட எண்ணி பாருங்கள். இது தோற்றுப்போன கட்சியா, திருவாரூர் தெற்குவீதியில் கூடியிருக்கின்ற கூட்டத்தை பார்த்து இது தோல்வி அடைந்த கட்சியா. இல்லை. இது தோல்வி அடையாத கட்சி. என்றைக்கும் யாராலும் தோற்கடிக்க முடியாத கட்சி.

காரணம் இடி விழுந்தாலும், பூகம்பமே ஏற்பட்டாலும் கட்டிடத்தின் எந்த பகுதியை இழந்தாலும் அடித்தளத்தை யாராலும் அசைக்க முடியாது. அந்த அடித்தளம் தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால், புரட்சி கவிஞர் பாரதிதாசனால், தளபதி அழகிரிசாமியால் அழுத்தம் திருத்தமாக கட்டப்பட்ட கட்டிடம். ஆகவே யாரும் வீழ்த்திவிடுவார்கள் என்று எண்ணத்தேவையில்லை.

தேர்தல் ஒரு காற்றுபோல வரும். தேர்தல் பருவகாலத்தில் வீசுகின்ற சூறாவளியாக கூட வரும். அதிலே நாம் தோல்வி அடைந்தாலும், இந்த இயக்கம் தோற்றுபோனதாக அர்த்தம் அல்ல.

சகிப்புத்தன்மை

இன்றைக்கு மாபெரும் பொதுக்கூட்டத்தில் திருவாரூர் தெற்குவீதியில் மாபெரும் மாநாடாக நடத்தி காட்டுகின்ற பூண்டி கலைவாணன் ஆட்சியாளரால் சிறையில் பூட்டப்பட்டாலும் பிணையில் வந்தாலும் மாறி, மாறி கைது செய்தாலும் புத்தெழுச்சி பெற்று வந்தாரே தவிர மாய்ந்துவிடவில்லை. அதனால் இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன். என்ன இருந்தாலும் ஒரு காலத்திலேயே நாம் எல்லாம் ஒன்றாக இருந்து கட்சி நடத்தினோம். இன்றைக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்து, எங்களை எல்லாம் எவ்வளவு பந்தாடினாலும் அதை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம். சகிப்பு தன்மை தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் பலம். பொறுமை தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் வலிமை. அதற்கு எந்த சேதாரம் இல்லாமல் கட்டி காக்கின்ற தலைவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை இன்றைக்கு தாங்கி நிற்கின்றார்கள்.

‘குண்டாக இருந்தால் போதும்.. குண்டர் சட்டம் பாய்ந்து விடும்’

எத்தனை சட்டங்கள், எத்தனை தண்டனைகள், எத்தனை அடக்குமுறைகள். திராவிட முன்னேற்ற கழகத்துகாரனா அவனை எப்படியாவது பிடித்து சிறையில் போடு. என்ன காரணம், எந்த சட்டத்தில் என்று கேட்காதே. ஜெயிலுக்கு போனபின்பு கோர்ட்டுக்கு போய் ஜாமீன் வாங்கி வந்துவிட்டானா? அவன் மீது கடுமையான சட்டத்தை போடு. எல்லா சட்டமும் வந்துவிட்டது. குண்டாக இருந்தால் போதும் அவன் மீது குண்டர் சட்டம். குண்டாக இருப்பவர்கள் மீதெல்லாம் குண்டர் சட்டம் என்றால் எதிர்காலத்தில் எத்தனை பேர் மீது அந்த சட்டம் பாயும் என்பதை தயவு செய்து எண்ணி பார்க்க வேண்டும். ஆகவே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள்.

நாங்கள் தோற்றுவிட்டோம். அந்த தோல்வியை தாங்கி கொண்டு மக்களுக்காக பணியாற்றி வருகின்றோம். பணியாற்றும்போது கூட உங்கள் அரசு மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்தால், அந்த நன்மைகளை பகிர்ந்து கொள்ள, அவர்களுக்கு இருக்கின்ற இடையூறுகளை எல்லாம் களைந்து, அந்த மக்களுக்காக உங்களோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம் என்று சூளுரைத்து பாடுபட்டு வருகிறோம்.

சக்கர வண்டிக்கு சட்டமன்றத்தில் இடமில்லை

ஜனநாயகத்தில் எல்லோரையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் உரிமைகள் பாதுகாக்க வழிவகை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு தமிழகத்திலே அந்த நிலைமை இல்லை. சொல்லப்போனால் சட்டமன்றத்திற்கு நான் செல்ல முடியாத நிலை. நடக்க முடியாமல் சக்கர வண்டியில் செல்ல வேண்டிய காரணத்தினால், சக்கர வண்டிக்கு சட்டமன்றத்தில் இடம் இல்லை என்ற சூழ்நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட காரணத்தினால் நான் வெளியில் இருக்கின்றேன்.

அரசியல் நாகரீகம்

ஜனநாயகத்தில் எதிரும், புதிரும் இருந்தவர்கள் முன்பெல்லாம் எப்படி நடந்துகொண்டோம் என்பதை தயவு செய்து படித்து பாருங்கள். பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக சட்டமன்றத்திலேயே அமர்ந்து இருக்கிறார்.

அதற்கு பிறகு பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி தலைவர். அப்போது நானும், அவரும் இரண்டு கட்சிக்காரர்கள் என்றாலும் கூட நட்பு நிலையிலே தான் பழகி இருக்கிறோம். அண்ணாவும், காமராஜரும் மேடையிலே கருத்துகளில் வேறுபடுவார்களே தவிர நேரடியாக எந்த நேரத்திலும் காழ்ப்புணர்ச்சியை காட்டிக் கொண்டவர்கள் அல்ல.

டெசோ மாநாடு

இங்கே நண்பர்கள் பேசும்போது, இலங்கையிலே நடத்தப்பட்ட சிங்களவர்கள் நடத்திய கொடுமைகள் பற்றியும், அந்த கொடுமைகளை தாங்கி கொண்டு உயிர்விட்ட, சிங்கள வெறியர்களால் துரத்தப்பட்டு இன்னமும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்கு உரிமை கிடைக்க இந்திய அரசை வலியுறுத்துவோம். இந்திய அரசை நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம் என்பது மாத்திரம் அல்ல. உலகத்தினுடைய கவனத்தை திருப்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகத்தான் விழுப்புரத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அடைந்துள்ள டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க, அவர்களுடைய நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க டேசோ மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

உயிர் விடுவேன்

ஐக்கியநாடு சபையால் வாக்கெடுப்பு நடத்த சொல்லி தமிழர்களுடைய உரிமைகளை காக்கக்கூடிய, அந்த ஈழத்தை உருவாக்கக்கூடிய அந்த பணியை நாம் நடத்தி இருக்கிறோம். இலங்கையில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்க தொடங்கி உள்ளனர்.

அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

நமது நீண்ட நாள் கனவு. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற கனவு நாம் கண்ட கனவு. பலியான தமிழர்கள் கண்ட கனவு நிறைவேற தமிழீழம் உருவாக வேண்டும். அந்த தமிழீழத்தை நாம் விரைவில் காணவேண்டும். நீண்டநாள் வாழ வேண்டும் என்று சொன்னீர்கள். அதை கண்டுவிட்டு உயிரை விடக்கூட நான் தயார். அதை கண்டுவிட்டு உயிர்மாண்டால் எனக்கு நிம்மதி. அதை காண்பதற்கே உயிர் விட வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

-என்வழி செய்திகள்
9 thoughts on “என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்! – கருணாநிதி

 1. Krishna

  ஆட்சி இழந்ததிலிருந்து அறிக்கை என்ற பெயரில் வரும் இவரது புலம்பல்கள் சகிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது காமெடி பண்ணுகிறார். பெட்ரோல் விலையை ஏற்றிய மத்திய அரசிலிருந்து விலக தயங்க மாட்டோம் என்று சூளுரைத்து அறுபதே நிமிடங்களில் அந்தர் பல்டி அடித்தார். அடுத்த ஆண்டு உயிருடன் இருந்தால் திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறிய அடுத்த தினமே திமுகவுக்கு பதவி என்பது ஒரு பொருட்டே அல்ல என்று யு-டர்ன் அடித்தார். உயிர் துறக்க தயாராக இருக்கிறேன் என்று இவர் சொல்லும்போதெல்லாம் இவரை கைது செய்ய வந்த போது “ஐயோ கொல்றாங்களே” வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

 2. பாவலன்

  ///ஆட்சி இழந்ததிலிருந்து அறிக்கை என்ற பெயரில் வரும் இவரது புலம்பல்கள் சகிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது காமெடி பண்ணுகிறார். /// (கிருஷ்ணா)

  குமரன் இது பற்றி ஒரு நல்ல study கொடுத்திருக்கிறார். நன்றி.

  -பாவலன்

 3. Red Ragu

  அந்த பிரம்மன் எழுதிவிட்டான்.. “தமிழின துரோகி” உயிர் விட்டதும் ..உண்மையான தமிழ் ஈழம் மலரும்…விரைவில் அந்த செய்திகிடைக்க ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்..”ஈழம் வெல்லும்.. அதை காலம் சொல்லும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *