BREAKING NEWS
Search

என்ன நடக்குது நேபாளத்தில்?

என்ன நடக்குது நேபாளத்தில்?

ன்னராட்சியின் கொடுமைகளைத் தாண்டி மக்களாட்சி மலர்ந்த பின்னும் நேபாள மக்களுக்கு நிலையான ஆட்சி கிடைத்தபாடில்லை. அங்கே தொடர்ந்து குழப்பமான நிலை நீடிக்கிறது.prasantha

இப்போது நேபாள பிரதமர் பிரசந்தா பதவி விலகிவிட்டார். அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசு ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கூட்டணி அரசு ராணுவ தளபதி ஜெனரல் ருக்மாங்கா கடாவலிடம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு விளக்கம் கேட்டது.

அரசின் உத்தரவை மீறி, ராணுவத்துக்கு ஆள் தேர்வு நடத்தியது, ஓய்வு பெற்ற 8 ராணுவ ஜெனரல்களை மீண்டும் பணியில் அமர்த்தியது, தேசிய விளையாட்டுகளில் ராணுவம் பங்கேற்க மறுத்தது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கச் சொன்னது. ராணுவ தளபதியும் விளக்கம் அளித்தார். ஆனால் அவரது பதில் அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை.

பதவி நீக்கம்

இதையடுத்து, பிரதமர் பிரசாந்தா தலைமையில் மந்திரிசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், ராணுவ தளபதி பதவியில் இருந்து ஜெனரல் ருக்மாங்கா கடாவலை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் குல் பகதூரை தற்காலிக ராணுவ தளபதியாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆளும் கூட்டணியில் இடம் பெற்று இருந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மாதேசி மக்கள் கட்சி, சத்பாவனா கட்சி, ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இதை எதிர்த்தன.

நேபாள அதிபர் எதிர்ப்பு

பிரதமரின் இந்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், நேபாள அதிபர் ராம் பரண் யாதவும் இந்த முடிவை ஏற்க மறுத்து விட்டார்.

நேபாள அதிபர், முப்படைகளின் தலைவர் என்பதால், அவர்தான் ராணுவ தளபதியை நீக்க முடியும். அவரே எதிர்ப்பு தெரிவிப்பதால், பிரதமருக்கு சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், நேபாள கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நேபாள மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. மந்திரிசபையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது. இதனால் பிரசந்தா ஆட்சி பெரும்பான்மை இழந்தது.

பெரும்பான்மை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி கோரியது.

இதற்கிடையில் ஜனாதிபதி ராம் பரண் யாதவ், தளபதியை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டர். நாட்டின் தலைவர் என்ற முறையிலும், ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற முறையிலும் தளபதியை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரசந்தா ராஜினாமா!

ராணுவத் தளபதி விவகாரத்தில் ஜனாதிபதியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நான் பதவி விலகுகிறேன், என அறிவித்தார் பிரசந்தா. இதனை அவர் தொலைக்காட்சி உரை மூலம் மக்களுக்கு அறிவித்தார்.

“ராணுவத் தளபதியை பதவியில் நீடிக்கும்படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டு இருப்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய அடி. அமைதியை ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த நடவடிக்கை தோல்வியை தான் தரும். மக்களின் எதிர்பார்ப்பு முழுவதையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவற்றை நிறைவேற்ற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். எங்களை செயல்படவிடாமல் எதிர்கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் தடையாக இருந்தனர். நேபாளத்தின், உள்நாட்டு விவகாரத்தில் அன்னிய சக்திகள் அடிக்கடி குறுக்கிட்டன” என்று பிரசந்தா தனது உரையில் குறிப்பிட்டார்.

ராணுவ தளபதி ருக்மாங்கட்டை டிஸ்மிஸ் செய்யக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தியதாகவும், இந்தியாவின் ஆலோசனைப்படி நேபாள ஜனாதிபதி செயல்படுவதாகவும் சில மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.

தேசிய அரசு

இன்றைய சூழலில் புதிய ஆட்சி அமைக்க நேபாளத்தின் அனைத்துக் கட்சிகளும் முயற்சி மேற்கொண்டு உள்ளன. ஆட்சி அமைப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் காத்மாண்டுவில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ளும்படி மாவோயிஸ்டுகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அனைத்துக்கட்சிகளும் பங்கு பெறும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேபாள கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மாதவ் குமார் நேபாள், இப்போதைய தலைவர் ஜலா நாத் கனால் ஆகியோரில் ஒருவர் பிரதமராகலாம் என்று கூறப்படுகிறது.

தேசிய அரசாங்கத்தில் மாவோயிஸ்டு கட்சி பங்கு பெறாது என்று அந்த கட்சியின் தலைவர் சுனில் பாடல் கூறினார்.

இதற்கிடையில், ராணுவத்தளபதி பதவியில் ருக்மாங்கட் பதவியில் நீடிக்க ஜனாதிபதி அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர் நேபாள மாவோயிஸ்டுகள்.

இன்னொரு பக்கம், நேபாள விவகாரத்தில் தேவையின்றி இந்தியா தலையிடுகிறது என்ற பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.
2 thoughts on “என்ன நடக்குது நேபாளத்தில்?

  1. ரோஜாமகள்

    நல்ல தெளிவான செய்தி… நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *