BREAKING NEWS
Search

என்ன அவசரம்… என்ன அவசரம்!

டெல்லியின் தாளத்துக்கு ஆடாமல், காவல்துறை சொந்தமாக யோசிக்கட்டும்!

நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் பேரணி – சித்தணி கிராமங்களுக்கு இடையில் தண்டவாளத்தை நாசகார கும்பல் வெடி வைத்துத் தகர்த்துள்ளது.

அதிகாலை நடந்த இந்த குண்டுவெடிப்பை சட்டென்று உணர்ந்த எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு ராஜசேகரன், உடனடியாக அருகில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தந்து உஷார்ப்படுத்தினார்.

அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய நிலைய அதிகாரி, தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது, மெதுவாகச் செல்லுங்கள் டிரைவர்களை எச்சரிக்க, அவர்களும் மெதுவாக ரயிலை இயக்கினர். குறித்த இடத்தை நெருங்கிய போது, தண்டவாளம் தகர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டனர். வண்டியை அவசரமாக நிறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்களைக் காத்துள்ளனர்.

காப்பாற்றிய 'கார்டு'!

சேலம் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களை குறி வைத்து இந்த சதி வேலை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு ரயில்களுமே அதிலிருந்து தப்பித்தது பெரிய நிம்மதி.

இந்த விபத்தைத் தவிர்த்ததன் முழுப் பெருமையும் சேலம் – எழும்பூர் கார்டு டி ராஜசேகரன், முண்டியம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி ஏ துக்காராம், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர் கோபிநாத் ராவ், துணை டிரைவர் டி ராஜ்குமார் ஆகிய நான்கு ரயில்வே அதிகாரிகளுக்கே சேரும்.

அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிகாலை என்றெல்லாம் பாராமல், தங்களை நம்பி பயணிக்கும் மக்களின் உயிரை மதித்து கடமையாற்றுவது, அதுவும் இன்றைய லஞ்ச-ஊழல் சூழலில் சாதாரண விஷயமல்ல!

தே நேரம் இந்த விபத்துக்கான காரணம், நாசவேலை சதியைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்குவது மிகவும் அவசியம். அப்பாவிகளின் உயிருடன் விளையாட முற்படும் யாரையும் விட்டுவைக்கக் கூடாது.

ஆயிரம் குறைகள், ஆட்சியாளர்கள் மீதான அதிருப்திகள் இருந்தாலும், இந்தியாவிலேயே இன்றைய தேதிக்கு அமைதியான மாநிலம் தமிழகம்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது. இது ஒன்றும் ஆட்சியாளர்களின் சாதனை அல்ல.. மக்களின் தெளிந்த மனநிலைதான் காரணம் (இந்த தெளிவு சமயத்தில் அளவுக்கு அதிகமாகப் போய்விடுவதாலேயே, களத்தில் இறங்கி உணர்வைக் காட்ட வேண்டிய நேரங்களிலும் டிவிக்கும் டாஸ்மாக்குக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதும் உண்மை!).

இந்த அமைதியைக் குலைக்கக் காரணமாக நிற்கும் எந்த சதியையும் முறியடிப்பது அவசியம். இதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் ‘பிரபாகரனின் தம்பிகள்’ என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, என்றாலும்.. வெறும் துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு குறிப்பிட்ட யாரையும் குற்றவாளியாக்கிவிட முடியாதல்லவா?

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள், எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமலேயே, மாநிலக் காவல் துறைத் தலைவர் லத்திகா சரண், “இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை” என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், “இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான்” என்று பேசி வைத்த மாதிரி அறிக்கை கொடுக்கிறார்!

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், துண்டுப் பிரசுரம் அடித்து வைத்துவிட்டா குண்டு வைப்பார்கள்? விட்டால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு தலைவர்கள் அனைவரும் தங்களின் பெயர் உள்ளிட்ட பயோடேட்டாவை அடித்து வைத்துவிட்டுதான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்பார்கள் போல…

தமிழகத்தில் ஈழத் தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவான சூழல் நிலவுவதும், அதற்கு உறுதுணையாக எதிர்க்கட்சித் தலைவர்களும் உள்ள நிலையில், இந்த துண்டுப் பிரசுரம், புலிகள் மீது போலீசாரின் அவசர குற்றம்சாட்டு போன்றவற்றை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது.

ஐஃபா விழாவை படுதோல்வியடையச் செய்தது, ராஜபக்சே வருகைக்கு மிகப்பெரிய எதிர்ப்பைத் தெரிவித்து மத்திய மாநில அரசுகளை திகைப்புக்குள்ளாக்கியது போன்றவற்றை புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளே முன்னின்று செய்தன.

அந்த இயக்கங்கள் மீது அப்பட்டமாக பழிபோடும் அவசர முயற்சியாகவே, இந்த குண்டுவெடிப்புக்கு புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என தமிழக காவல்துறை கூறுகிறதோ!

இந்த சதிச் செயலை வேறு யாரேனும் செய்துவிட்டு, பழியை புலிகளின் ஆதரவாளர்கள் மீது போடும் சாத்தியக் கூறை வசதியாக காவல்துறை மறைத்துவிட்டது ஏன்? அல்லது, ‘இலங்கையில் முற்றாக தமிழர் போராட்டம் அடக்கப்பட்டு விட்டது. இப்போது தமிழகத்தில்தான் மிச்சமிருக்கிறது. அதையும் அடியோடு ஒழிக்க வாய்த்துள்ள சந்தர்ப்பம் இது’ என்ற ‘சிங்களவனின் நண்பர்களது’ குறுக்கு சிந்தனைக்கு போலீசார் தரும் ஆதரவா?

தங்கள் தவறுகளை மறைக்க பெரும் சதிகளை அரங்கேற்றி அதை எதிராளி மீது திருப்பிவிடும் சம்பவங்களை சமகால வரலாற்றிலேயே நிறைய பார்த்திருக்கிறோம்.

இந்த சதியை தமிழகத்தில் அரங்கேற்றும் அவசியமோ, அப்படி நிறைவேற்றினால் அதன் பின் விளைகள் என்னவாக இருக்கும் என்றோ புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அறியாதவர்கள் அல்ல.

எனவே, நடந்துள்ள கொடூரமான சதிச் செயலின் உண்மைப் பின்னணி என்னவென்று விரைந்து கண்டறிவது அவசியம்.

அதை விட்டுவிட்டு, ‘இவன்தான் குற்றவாளி’ என மனதுக்குள் கற்பனை செய்துகொண்டு, நிஜ குற்றவாளிகளைத் தப்பவிடுவது தமிழக காவல் துறைக்கு அழகல்ல!

இந்த விஷயத்தில் தமிழகக் காவல்துறை தங்களது ‘சென்னை மூளையை’ மட்டுமே பயன்படுத்தி துப்பறியட்டும்… விஷயத்தை திசை திருப்ப டெல்லியிலிருந்து திணிக்கப்படும் யோசனைகளை சற்று தள்ளி வைத்து செயல்பட்டால், சதிகாரர்கள் யாரென்பது தெரிந்துவிடும்!

-வினோ

என்வழி
8 thoughts on “என்ன அவசரம்… என்ன அவசரம்!

 1. கிரி

  1000 கணக்கான மக்களை காப்பாற்றிய கார்டு ராஜசேகரன் போன்ற ஊழியர்களுக்கு 5000 ருபாய் என்ற அடுத்த தலைமுறை வரை காப்பாற்றக்கூடிய பணத்தை பரிசு தொகையாக கொடுத்து இருக்கிறார்களாமே! இதை கின்னஸ் புத்தகத்தில் ஏன் போடவில்லை என்று மக்கள் எல்லாம் அரசை எதிர்த்து!!! கேட்கப் போகிறார்களாம். இவ்வளவு தன்னடக்கம் அரசுக்கு கூடாது என்று பொறுமிக்கொண்டு இருக்கிறார்களாம்.

  இதனால் தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கிறதாம்!

 2. Chozhan

  காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகளே தமிழர் போராட்டங்களின் வீரியத்தை பார்த்து, பயந்து சினிமா படத்தில் வருவது போல் அவர்களே (வில்லன்)இந்தமாதிரி சதி செய்து ஒரு சில நல்லவர்கள்(ஹீரோ ) மேல் பலி போடும் நாடகமா என்றும் ஒரு சிலர் யோசிப்பார்கள்.

 3. Manoharan

  ///காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகளே தமிழர் போராட்டங்களின் வீரியத்தை பார்த்து, பயந்து சினிமா படத்தில் வருவது போல் அவர்களே (வில்லன்)இந்தமாதிரி சதி செய்து ஒரு சில நல்லவர்கள்(ஹீரோ ) மேல் பலி போடும் நாடகமா என்றும் ஒரு சிலர் யோசிப்பார்கள்///

  @ சோழன். சிலர் என்ன, நடந்ததை பார்க்கும்போது எல்லோருமே அப்படித்தான் நினைக்கவேண்டி உள்ளது .

 4. palPalani

  முக அல்லது கக்கா பாமிளியில இருந்து யாராவது வந்த்ருந்தா நிறைகிடைக்கும்!
  கடமையை சரியாக செய்த அந்த ஊழியர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

 5. Chozhan

  இந்த நாடகத்தை பார்க்கும்போது அந்த ”கடமையை சரியாக செய்த அந்த ஊழியர்”களும் இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமக்கபட்டர்களோ என்னவோ …..என்று தோன்றுகிறது.

 6. palPalani

  போகிற போக்க பாத்தா @Chozhan சொல்றதும் உண்மையாயிடும் போல!!!!

 7. r.v.saravanan

  சேலம் – எழும்பூர் கார்டு டி ராஜசேகரன், முண்டியம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி ஏ துக்காராம், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர் கோபிநாத் ராவ், துணை டிரைவர் டி ராஜ்குமார் ஆகிய நான்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தங்களை நம்பி பயணிக்கும் மக்களின் உயிரை மதித்து கடமையாற்றிய
  அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி

 8. r.v.saravanan

  எனவே, நடந்துள்ள கொடூரமான சதிச் செயலின் உண்மைப் பின்னணி என்னவென்று விரைந்து கண்டறிவது அவசியம்

  yes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *