BREAKING NEWS
Search

என்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்! – கருணாநிதி

என்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்! – கருணாநிதி

சென்னை: என்னை முதல்வர் பதவியில் உட்காரவைத்தே தீருவேன் என்று உறுதியுடன் நின்று, அதை நிறைவேற்றியவர் எம்ஜிஆர்தான், என்றார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க. அரசு பதவியேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, சட்டப்பேரவையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டுரை வழங்கினர்.

அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசியது:

வடநாட்டில் – டெல்லி பட்டணத்தில் சோனியா காந்தியும், அத்வானியும் ஒரு திருமண விழாவிலே இருவரும் கலந்து கொண்டு, அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டு, அன்போடு பழகுவதைக் காணுகிறோம். காணும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை விட, – என்னைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமானால் பொறாமைதான் ஏற்படுகிறது. ‘அத்வானியோடு சோனியா காந்தி பேசுகிறாரே என்று பொறாமை அல்ல; இந்த நிலை தமிழ்நாட்டிலே இல்லையே’ என்ற காரணத்தால் எழுகின்ற பொறாமை.

ஒரு காலத்திலே இதைவிட வேகமாக மோதிக் கொண்ட கட்சிகள் என்று சொன்னால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் -பெருந்தலைவர் காமராஜரை நான் சாடாத கூட்டங்கள் இல்லை. எழுதாத கட்டுரைகள் இல்லை.

ஆனால், அவர் பெருந்தலைவர் என்பதற்கேற்ப, எப்படி நடந்து கொண்டார் என்பதை அவருடைய வரலாறு விளக்கும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே அதைக் காணலாம்.

அண்ணாவால் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தப்பட்டபோது, அந்த மாநாட்டினுடைய முதல் விழாவைத் தொடங்கி வைக்க வந்தவரே – பெருந்தலைவர் காமராஜர்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆனால், அடுத்து தமிழகத்தில் நடந்த தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அது என் குற்றமா? அல்லது மாநாடு நடத்தியவர்களின் குற்றமா என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் சென்று, அதை நான் விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை.

என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்தபோது, அவருக்கும், எனக்கும் எத்தனையோ பூசல்கள்; எத்தனையோ கடுமையான வாக்குவாதங்கள் இந்த அவையிலேயே நடந்ததுண்டு. நான் சாட்டிய குற்றச்சாட்டுகள் -அடுக்கடுக்காக எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் இவற்றுக்கெல்லாம் அவர் வேகமாக அளித்த பதில்கள் எல்லாம் இன்றைக்கும் எனக்கு நினைவிலே இருக்கின்றன.

அதற்கெல்லாம் முன்பு, அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து -என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதலமைச்சராக ஆக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, “இவர்தான் முதலமைச்சராக ஆகவேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக் கூடாது” என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக, முரசொலி மாறன் – ‘நீ வரவேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து, மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர்’ என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், ‘உங்களை கொண்டுபோய் முதலமைச்சர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன்’ என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பையேற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக் கூடாது.

எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச்சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது -ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் -உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்த போது -ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான் -அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் -அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் – ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில் -சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. “மொழிப் பிரச்சினையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சினையில் – நானும் கருணாநிதியும் -நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” – என்று எம்.ஜி.ஆர். அவையிலே சொன்னது இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கின்றது.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், ஏதோ அரசியல் விகற்பங்கள் – அரசியலிலே ஒருவருக்கொருவரிடையே ஏற்பட்ட காழ்ப்புகள் – இவைகள் எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் – அதைக்கெடுத்து விடக்கூடிய அளவிற்கு -தோழமைக்கு விரோதமாக ஆகிவிடக்கூடாது…,” என்றார் முதல்வர்.
5 thoughts on “என்னை முதல்வர் ஆக்கியவர் எம்ஜிஆர்தான்! – கருணாநிதி

 1. Chozhan

  நல்லது, அண்ணா அவர்கள் உடல்நலமின்றி இருக்கும் போதே எம் எல் எ களை வேலூரில் கடத்தி வைத்து முதல்வர் ஆன கதையையும் கவித்துவமாக கூறினால் நன்றாக இருக்கும்.

 2. குமரன்

  மக்கள் எல்லாம் கருணாநிதி எல்லாம் என் முதல்வர் ஆனார் என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டதால் பழியைத் தூக்கி எம்.ஜி.ஆர் தலையில் போட ஒரு வாய்ப்பு என்று கருணாநிதி இந்த உண்மையை இப்போது சொல்கிறார்.

  அதாவது கருணாநிதியால் மக்களும் உலகத் தமிழினமும் படுகின்ற சொல்லொண்ணாத் துயருக்கு எம்.ஜி.ஆரைப் பொறுப்பாக்கும் மறைமுக முயற்சி இது.

 3. Chozhan

  வயதானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் கருணாநிதியே.

 4. balaji

  பின்பு அவரையே காலை வாரியதையும் சொல்லுங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *