BREAKING NEWS
Search

என்னையே அர்ப்பணிக்கிறேன்! – முதல்வர் கருணாநிதி

என்னையே அர்ப்பணிக்கிறேன்! – முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் செய்தி

சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று தனது 87 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இன்று 87 வது பிறந்த நாள். பிறந்தநாளையொட்டி, இன்று அதிகாலை சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் மரக்கன்று ஒன்றை முதல்வர் நட்டார்.

பின்னர் அவர் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். முதல்வருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, சன்டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மாலை அணிவித்து ஆசி பெற்றனர்.

நிதி அமைச்சர் அன்பழகன், பொதுப்பணி மற்றும் சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் முதல்வருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிறகு சிஐடி காலனியில் இருந்து புறப்பட்ட முதல்வர் கருணாநிதி, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து பெரியார் திடலுக்குச் சென்று அங்குள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்திக்கிறார் முதல்வர்.

முன்னதாக, அவர் தனது பிறந்த நாளையொட்டி சிறப்புச் செய்தியொன்றை விடுத்துள்ளார். அதில் “தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தன்னையே அர்ப்பணித்துள்ள”தாகக் கூறியுள்ளார்.

அவரது பிறந்த நாள் செய்தி முழுமையாக:

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த “குவா குவா” எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வதோடு; அது கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்து; திராவிட இயக்கமெனும் தொட்டிலில் கேட்ட தன்மானத் தாலாட்டை; இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் “வாழ்க தமிழ்!” “வெல்க தமிழர்!” என முழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்; 87 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த எழுச்சி முழக்கம்; இன்றைக்கும் சோர்வு தட்டாமல் இந்தப் பார் மகிழ ஒலித்துக் கொண்டிருக்கிறது! தேரூரும் திருவாரூரிலிருந்து கிளம்பி, திருக்குவளையின் வேரார்ந்த அந்த கீதம்; இன்றைக்கும் அதற்கு வேதம்!

ஆனால், வேதங்கள், இதிகாச புராணங்களை விரித்துரைத்து மாந்தரிடையே பேதங்களை வளர்த்திடும் போக்கு; பாலப் பருவத்திலேயே அந்த இளைஞனுக்கு பகையான ஒன்று! அதனால்தான் அந்த ஊர் சலவைத் தொழிலாளி பட்டு என்பவரின் பாராட்டும், சீராட்டும் பெற்று வளர்ந்தான் – பாசமுடன் பழகி நட்போடு தொடர்ந்தவர்களோ; பழங்குடி இனத்தினரான ஆதி திராவிட மக்கள்தான்! சிங்கப்பூர் சவுராளி ராமச்சந்திரனின் ‘பார்பர் ஷாப்’ தான் அவனுக்கு பகுத்தறிவுப் பாசறை!

அவனது பொது வாழ்க்கையின் அதிகாலைப் பருவத்தில் அவன் ஏற்றிய கொடிகளில் பெரும் பாலானவை – அடித்தட்டு மக்கள் வாழ்ந்த தெருக்களில் அல்லது அவர்கள் வீட்டு முகப்புகளிலேதான்!

அந்த மக்கள் என்றால்தானே நோய் நொடிகளுக்குக் கூட இளக்காரம் -அவர்களை வாட்டும் குறைகளில் ஒன்று; வறுமையை விடக் கொடியது – பார்வையில் ஏற்படும் பழுது; என்பது அவன் மனத்தைப் பாடாய்ப்படுத்தியது.

காலிழந்த நொண்டியெனில், மற்றவர் தோளில் ஏறிக்கொண்டு நகர முடியும் – பேச இயலாதவர் எனில் எழுதிக்காட்ட முடியும்- காது கேளாதோர்க்கும் அதுவே பொருந்தும், இல்லாவிட்டால் கையால் ‘ஜாடை’ காட்டிட இயலும் – ஆனால் கண் பார்வையற்றோர்; ஒரு காட்சியைப் பிறர் வர்ணிக்கக் கேட்கும்போது கூட; அய்யோ; தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் தானே ஆழ்வர்.

அதனால்தான் இயலாதோர்க்கு – ஏழையெளியோர்க்கு – உதவிட வேண்டுமெனில் – வந்துற்ற வாய்ப்பைக் கொண்டு அவர்கட்கு கண்ணில் ஒளி வழங்கிடும் கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி;

கண்ணொளி வழங்கும் திட்டத்தைப்

பரவலாக வகுத்தான்.

அதனைத் தொடர்ந்து இரவலர்

எவரும் இருத்தலாகாது என

உரைத்து அவர்கட்கு மறு வாழ்வு

இல்லங்கள் அமைத்தான்.

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண அண்ணன்

காட்டிய வழியில் எத்தனையோ

திட்டங்கள் வடித்தான்.

மாற்றுத் திறனாளிகள்,

மலம் எடுப்போர்,

கை ரிக்ஷா இழுப்போர்,

அரவாணிகள் –

என அனைவர்க்கும் மனித உரிமை தந்திட; அவன் தயங்கியதில்லை.

சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில் அவன் ஒரு தளகர்த்தன்!

ஐந்து முறை மாநிலம் ஆளுகின்ற முதல்-அமைச்சராகவும் – பதினோரு பொதுத் தேர்தல்களில் வென்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் – 50 ஆண்டுகள் சட்டப்பேரவையில் வாழ்வில் ஒரு பகுதியை வழங்கி; தன்னை வளர்த்த அந்த பேரவைக்கு என எழில் மாடத்தை நிறுவி – தமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன்-

தமிழ் மொழி எங்கும், எதிலும் ஏற்றம் பெறவும் – தமிழர் எத்துறையிலும் வல்லவர், நல்லவர், மிகுந்த அறிவும், மேன்மைசால் ஆற்றலும் உள்ளவர் என எந்நாளும், எந்நாட்டவராலும் போற்றப்படவும்;

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்.

இதோ, 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும் – எத்தனையோ வரலாற்று ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூலகம் போன்ற இல்லத்தையும் – நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக; ஆம்; மாந்தர்தம் நோய் நொடி தீர்க்கும் திருப்பணிக்காக – இதோ பொதுவில் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கின்றான்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சி.கே.ரெங்கநாதன், இயக்குநர் ராமநாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை நியமித்து இந்த அறக்கட்டளையைத் திறம்பட நடத்திடுவர் என்ற உறுதியோடு இருக்கிறான்.

கோடியென வந்த சம்பளத்தையும் – குடியிருந்த வீட்டையும் – தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் – தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்!

வாழ்க தமிழ்!

வளர்க திராவிட இன உணர்வு!

-மு கருணாநிதி




11 thoughts on “என்னையே அர்ப்பணிக்கிறேன்! – முதல்வர் கருணாநிதி

  1. endhiraa

    தேரூரும் திருவாரூரிலிருந்து ,வேதம்!, இதிகாச புராணங்களை , கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி;ஏழையின் சிரிப்பில்
    இறைவனைக் காண , சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில், நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக;

    என்ன நாத்திகவாதி ஒரே கோயில், இறைவன், திருப்பணி ஒரே புலம்பலா இருக்கு..தலைய சுத்துது போங்க..

  2. Guevara

    //*இதோ, 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும்…….*//

    அப்போ மனைவியர் துணைவியர் என்ன ஆனார்கள் – JUST MISSED ?

    //*கோடியென வந்த சம்பளத்தையும் – குடியிருந்த வீட்டையும் – தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன்*//

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  3. M.S.Vasan

    “த‌மிழ‌ன் ப‌குத்த‌றிவு” 43 ஆண்டுகால‌ திராவிட‌
    ஆட்சியில், முத‌ல்வ‌ரின் வ‌ர‌லாறு அறியும‌ள‌வாது
    வ‌ள‌ர்ந்திருக்கும். த‌ன்னையே த‌மிழுக்கும், த‌மிழ‌ர்க்ளுக்கும்
    அர்ப்ப‌ணித்த, அர்ப்ப‌ணிக்கும் இத்த‌கைய‌ முத‌ல்வ‌ர்
    ஐந்துமுறை அர‌சு பீட‌த்தில் அம‌ர்ந்த‌து, உல‌கெலாம் உள்ள‌
    எல்லா த‌மிழ‌ர்க‌ளுக்கும் கிடைத்த‌ ஒர் அற்புத‌ம்.
    டாஸ்மாக்குள்ள‌ யாரு `மே 18, ஓட்டுக்கு துட்டு, ஓசி டீவி,
    அலைவ‌ரிசை, வாரிசுன்னு’ புல‌ம்பிட்டிருக்கிற‌து?
    ச‌ரி, ச‌ரி ரொம்ப‌ அடிச்சுராதிங்க‌, அவ‌ந்தான் நம்ம‌ ஆட்சிக்கு
    ப‌ண‌ம் கொடுக்கிற‌ ப‌ய‌. வாழ்க‌ த‌மிழ், த‌மிழ‌க‌ம், த‌மிழின‌..

  4. குமரன்

    தன்னைப் பற்றித தானே புகழ்ந்து எழுதிக்கொண்ட ஒரே தலைவர் இவர்தான்.

    ///இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் “வாழ்க தமிழ்!” “வெல்க தமிழர்!” என முழங்கிக் கொண்டிருக்கிறது.///

    ஈழத்தில் தமிழ் மக்களை வான்வழித் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டத்தோடு புளுகும் இவருக்குப் பிறந்தநாள் ஒரு கேடா? ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்றபோது இவர்தானே தமிழக முதல்வர். அவர்களின் பிணங்கள் கூட போர்க்களத்திலிருந்து அகற்றப்படாத நிலையில் இதே கருணாநிதி டெல்லி சென்று சோனியாவின் காலடியில் பத்து நாட்கள் கிடந்து தனது மகனுக்கும், பேரனுக்கும் துணை உறவுகளுக்கும் மந்திரி பதவி கேட்டு வாங்கியதை மறைத்து என்னமாகப் பசப்புகிறார்?

    தமிழ் தமிழன் என்று இவர் பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு?

    ////என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்.///

    அடப் படுபாவி. 2009 மே மாதம் யாருக்கடா வெற்றிச் செய்தி கொடுத்தாய்? ஈழத்தமிழருக்கா? ஈழத் தமிழர் இல்லாத உலகத் தமிழரை அழைக்கிறாயே? உனது மனதுக்குத் திருப்தி இதுதானா?

    ///கோடியென வந்த சம்பளத்தையும் – குடியிருந்த வீட்டையும் – தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் ///

    புளுகுவதற்கு எல்லையே இல்லையா?

    உங்கள் துணைவியார், மகன்கள், பேரங்கள் இவர்களின் சொத்து ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லையா, அதற்கு முன் கோபாலபுரம் வீடு வெறும் கொசுக்கடி. சண் குழுமத்திலிருந்து வருட தம்பலம் மட்டுமே உங்கள் பேரனுக்கு ரூபாய் 75 கோடி இது தவிர லாபம் பல நூறு கோடி ஒரு வருடத்துக்கு. நன்றாக நடிக்கிறீர்கள்.

  5. sakthivel

    //என்னையே அர்ப்பணிக்கிறேன்! – கருணாநிதி//

    அப்படியே உன் எல்லா சொத்துக்களையும் மக்களுக்கு அர்பணித்தால் ரொம்ப நல்லா இருக்குமே….

  6. TAMILAN

    தக்காளிக்கு பி (இறந்த) நாள் வாழ்த்துகள் …..

  7. sri

    என்ன jokeனா??
    இவரு என்னமோ இவருடைய பணத்தில் நல்லது செய்ற மாதிரி…..எல்லாம் மக்கள் பணம்.தமிழ் நாட்டு தமிழர்களை சொம்பேரியாக்கியுல்லான்…எல்லாம் சும்மா குடுக்கிறன்….என்ன மொடயர்கள்……..

  8. jagadeeswaran

    அப்படியே உன் எல்லா சொத்துக்களையும் மக்களுக்கு அர்பணித்தால் ரொம்ப நல்லா இருக்குமே…

    அதான் மகன், மருமகள், மகள், மருமகன், பேரன், பேத்தி, சித்தப்பா பையன், சித்தி பெண் இப்படி தனது உறவுகள் அனைத்தையும் தமிழர்களின் நலனுக்காக அர்ப்பணித்திருக்கிறார்,.

    நீங்கள் ஏர்செல், கலைஞர் டீவி என எல்லாவற்றையும் அர்ப்பணிக்கச் சொன்னால் எப்பூடீ….

    ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpreஓss.com

  9. Juu

    /*87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த “குவா குவா” எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை*/

    அப்ப நாங்கல்லாம் குவாட்டரும் கையுமா பொறந்தோம்??

    ஐயோ ஆண்டவா!!! என்னைய ஏன் இந்த மாதிரி ****** பசங்க கூட கூட்டு சேக்குற..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *