BREAKING NEWS
Search

உலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம்… லண்டனில் 50000 பேர் பங்கேற்பு!

உலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம்… லண்டனில் 50000 பேர் பங்கேற்பு!

லண்டன்: இலங்கையில் தமிழருக்கெதிரான அடக்குமுறை உச்சகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில், உலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் மட்டும் மாவீரர் தின நிகழ்வில் 50000 பேர் பங்கேற்றனர். எக்ஸெல் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இந்த பிரமாண்ட நிகழ்வு, மாலை 6.00 மணிவரை நடந்தது. இதில் சுமார் 50,000 ஆயிரம் பொது மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அகல் விளக்கு ஏற்றி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

கனடா:

கனடாவின் தலைநகர் டொரன்டோவில், கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரம் பேர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, இந்த மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதலாவது நிகழ்வு, தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆலய மணி ஒலிக்க மாவீரர் துயிலும் பாடல் ஒலிக்க தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றும் அதேநேரம் இங்கும் ஏற்றப்பட்டது.

துயிலும் இல்லப் பாடல் சிடியில் ஒலிக்க தலைவர் ஈகைச் சுடர் ஏற்றும் காட்சி வீடியோவில் காட்டப்பட்ட போது மக்கள் மிக்க எழுச்சியுடன் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து எழுச்சி நடனங்கள், வானம்பாடிகளின் எழுச்சிப் பாடல்கள், சிறப்புரைகள், நாடகம் என மூன்று நிகழ்வுகளும் நடந்தன. இவற்றில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். இதுவரை காணாத வேகமும் எழுச்சியும் இந்த ஆண்டு நிகழ்வில் காணப்பட்டது.

சுவிட்ஸர்லாந்தில்…

சுவிட்ஸர்லாந்தின் பல இடங்களிலும் தேசிய மாவீரர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பிரிபோர்க் நகரில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் 9000 பேர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தியாகு மற்றும் கவிஞர் தாமரை இதில் பங்கேற்றனர்.


இத்தாலியில்…

இத்தாலியின் பலெர்மோ நகரில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேற்று தொடங்கின.

பொதுச் சுடர், ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட பிறகு, முள்ளிவாய்காலில் மரணித்த போராளிகளுக்கும் மக்களுக்கும் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்டிருந்த சுடர் ஏற்றப்பட்டது.

பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தில்…

நெதர்லாந்தின் அல்மேரா நகரில் பிற்பகலில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. அயர்லாந்து தலை நகர் டப்ளினிலும், மிகுந்த எழுச்சியுடன் இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகளோடு, ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.

நார்வே தலைநகரில்….

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் சனிக்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு மாவீரர் தின நிகழ்வுகள் தொடங்கின.

ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட பின்னர் மாவீரர் நாள் உரை வாசிக்கப்பட்டது. யாருடைய பரப்புரைகளுக்கும் பலிகடா ஆகாமல், தலைவன் வழியில் நின்று தமிழீழத் தனியரசுக்காக போராட உறுதி எடுத்துக் கொண்டனர் அனைவரும்.

வளைகுடா நாடுகளில் கத்தாரிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் மாவீரர் நினைவு நாள் மிகுந்த எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *