BREAKING NEWS
Search

உலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது!

உலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது!

லண்டன்: சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றதால் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது இந்தியா. photocms

முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றுப் போன இந்தியாவுக்கு இந்தப போட்டி மிக முக்கியமானதாக இருந்தது. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச போவதாக அறிவித்தார். இதன்படி லுக் ரைட்டும், ரவி போபராவும் இங்கிலாந்தின் இன்னிங்சை துவக்கினார்கள். 2-வது ஓவரிலேயே ஆட்டம் இழந்த லுக்ரைட் (1) ஆர்.பி.சிங் பந்து வீச்சில் யூசுப் பதானிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் ரவி போபராவுடன், பீட்டர்சன் கூட்டணி சேர்ந்தார். இந்த ஜோடி அணி நல்ல நிலைமைக்கு வர உதவியது. 10 ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்த போது ரவி ஜடேஜா பந்துவீச்சில் ரவி போபரா 37 ரன்களில் கிளீன் போல்டு ஆனார். ஜடேஜா தனது அடுத்த ஓவரில் பீட்டர்சனையும் (46 ரன்) பெவிலியனுக்கு அனுப்பினார்.

பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.

உபரி ரன்களாக மட்டுமே 14 வைடு உள்பட மொத்தம் 16 ரன்களை வாரி வழங்கினர் இந்திய பந்து வீச்சாளர்கள்.

இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மந்தமான பேட்டிங்

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக வந்த ரோகித் ஷர்மா 9 ரன்களில், சைட் பாட்டம் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதன்பின்னர் இறங்கிய சுரேஷ் ரெய்னா (2 ரன்), பவுன்சர் பந்தை தூக்கியடித்து பிடிபட்டார். 24 ரன்னுக்குள் 2 விக்கெட் விழுந்ததால் இந்தியா ஆட்டம் கண்டது.

இதன் பின்னர் கவுதம் கம்பீருடன், ரவி ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் அபாரமான பந்து வீச்சினாலும், கட்டுக் கோப்பான பீல்டிங்காலும் தடுமாற்றம் கண்டது. திக்கித் திணறி ஆடிய ஜடேஜா ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்ததுதான் மிச்சம். அவரது மந்தமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு ரன் தேவை வீதம் அதிகரித்து கொண்டே வந்தது. ஸ்கோர் 62 ரன்களை எட்டிய போது, கம்பீர் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதை தொடர்ந்து களம் புகுந்த துணை கேப்டன் யுவராஜ்சிங் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அட்டகாசமாக தொடங்கினார். மறுமுனையில் தொடர்ந்து சொதப்பி கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா ஸ்வான் பந்து வீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஜடேஜா தனது ரன்னில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார்.

அதே ஓவரில் யுவராஜ்சிங் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் போஸ்டரால் ஸ்டம்பிங் ஆனார். அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அவர் 2 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ்சிங் வெளியேறியதும் இந்தியாவின் நம்பிக்கையை கரைய தொடங்கியது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டோனியும், யூசுப் பதானும் பலமாக போராடிப் பார்த்தனர். ஆனால் இங்கிலாந்தின் பந்து வீச்சின் முன்னால் அவர்கள் நினைத்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

நெருக்கடியான அந்த கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது. சைடுபாட்டம் கடைசி ஓவரை வீசினார். இதில் முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு ரன்னும், 2-வது மற்றும் 3-வது பந்தில் முறையே டோனி 2 மற்றும் ஒரு ரன்னும் எடுத்தனர்.

இதன் பின்னர் 4-வது பந்தில் யூசுப் பதான் சிக்சர் அடித்தார். இதனால் 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது, அடுத்த பந்தில் பதானால் ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. இதையடுத்து கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அதில் டோனி ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு சின்ன ஆறுதல் தந்தார்.

இதையடுத்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுத்த இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சூப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று விட்டது. கடைசி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை சந்திக்கிறது இந்தியா. ஆனால் இந்த வெற்றி தோல்வியால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
2 thoughts on “உலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது!

  1. raj.s

    Oru peeling m illai… Indian ngra unarvea illai..solla ponal konjam aruthal a irku..ivanga thottadu. srilanka la gundu pottapa anga vilayadina team thanea vangattum…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *