BREAKING NEWS
Search

ஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது?

ஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது?

திமுக – காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் தேர்தல் நாடகங்கள் ஒரே நேரத்தில் அம்பலமாகும் தருணம் கிட்டத்தட்ட வந்தேவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். Karu-Sonia

இதுவரை இந்த மூன்று கட்சிகளின் அறிக்கைகள், வாய்ச் சவடால்கள் மற்றும் பிரச்சார உளறல்களை முடிந்தவரை நாம் முழுமையாகவே வெளியிட்டு வந்திருக்கிறோம்.

அவை நமது கருத்தல்ல. செய்திகள். ‘முதலில் நடப்பதை கவனிப்போம்… பின்னர் நாம் ஒரு முடிவுக்கு வருவோம்…’ இதுதான் நமது வழி…

ஈழப் பிரச்சினையில் இந்தக் கட்சிகள் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லை என்றாலும், துரதிருஷ்டவசமாக இவர்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும். காரணம் இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளில் மட்டுமல்ல, உள்நாட்டுக் குழப்பங்களில், போர்களில், சமாதானப் பேச்சுகளிலும் கூட இந்தியாவின் நேரடிப் பங்கு மிகப் பெரியது.

குறிப்பாக ஈழப் போரில், ராஜீவின் மரணத்துக்குப் பிந்தைய இந்திய அரசின் அணுகுமுறை என்பது முற்றிலும் தமிழருக்கு எதிராகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. அது நரசிம்மராவாக, ஐகே குஜ்ராலாக, வாஜ்பாயாக இருந்தாலும் சரி… இன்றைய மன்மோகன் சிங்காக இருந்தாலும் சரி.

நரசிம்மராவ், குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் காலங்களில் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு நேரடி உதவிகள் இல்லாமல் கவனமாகத் தவிர்க்கப்பட்டது. அப்போது சோனியாவிடமும் பெரிதாக அதிகாரம் இல்லாமல் இருந்தது. ஆனால் மன்மோகன் சிங் காலத்தில் அறிவிக்கப்படாத செயல் பிரதமர் என்ற அளவுக்கு சோனியாவின் கொடி பறக்கத் துவங்கிவிட்டது.

‘ராஜீவ் கொலைக்கு பிரபாகரனை பழி தீர்த்துக் கொண்ட பிறகு தமிழர் உரிமைகள் பற்றிப் பேசலாம்’ என்பதுதான் சோனியா காந்தியின் கொள்கை. இதை அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், பல முறை பூடகமாக சொல்லிவிட்டார். அவரது புதல்வரும், அடுத்த பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தியும் சொல்லிவிட்டார். மகள் ப்ரியங்காவும் இதையே வேறு வார்த்தைகளில் சொல்லிவிட்டார்.

இது நடக்குமா… நடக்காதா… என்பதெல்லாம் பின்னர் பேச வேண்டிய விஷயம். சோனியாவின் சிந்தனை இதுதான். அதைப் புரிந்து கொண்டால் போதும்.

இந்த சூழலில்தான் தேர்தல் வந்துவிட்டது.

விடுதலைப் புலிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அந்நிய நாட்டிலிருந்து வந்து கூலிக்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்ல. ஈழத்து மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். தங்கள் மக்களின் கொடுந்துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணத் துப்பாக்கி தூக்கியவர்கள். 34 ஆண்டுகள்… பல களங்களையும், களங்கங்களையும் தாண்டி இன்னும் வீரியத்தோடு போரிட்டுக் கொண்டிருப்பவர்கள். ஈழத்து தமிழனையும், புலிகளையும் பிரித்துப் பார்ப்பது எந்தளவு முட்டாள்தனம் என்பதை மற்றெல்லோரையும் விட நன்கு புரிந்தவர் முதல்வர் கருணாநிதி.

எவ்வளவோ இக்கட்டான தருணங்களிலும்கூட, புலிகளுக்காக அவரது சதையாடியதை நாமும் பார்த்திருக்கிறோம். முதல்வராக இருந்தும், தமிழன் என்ற உணர்வு அந்த பதவியை மீறிப் பொங்கியதால்தான், தமிழ்ச் செல்வனுக்காக அவரால் இரங்கல் கவிதை எழுதமுடிந்தது.

கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க அவரைத் துடிக்கச் செய்தது. கருணாநிதியை ஈழமக்கள் மட்டுமல்ல, புலிகளும் மிகவும் நம்பினார்கள்.

ஆனால் தேர்தல், கூட்டணி பேரம், மிச்சமிருக்கிற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பு, தனது வாரிசுகளையும் அவர்தம் தொழில்களையும் பாதுகாக்க வேண்டிய அச்ச உணர்வு, காங்கிரஸின் மறைமுக நெருக்கடிகள்… இதற்கெல்லாம் ஆட்பட்ட அல்லது ஆட்படுத்தப்பட்ட முதல்வர், ஈழத் தமிழனை ஊறுகாயாக்கிக் கொண்டு, இன்னொரு கருணாவாக ஈழ மக்களுக்கு காட்சி தருகிறார் இன்று.

கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பாடுபடும் எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அந்த இன உணர்வை முழுமையாக காவு கொண்டது அவரது சுயநலமே.

கருணாநிதியின் இந்த நிலையால், அவரைச் சார்ந்து இயங்கிய பாமக, திருமாவளவன் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின நிலைமை திரிசங்கு சொர்க்கமாக மாறிவிட்டது. இவர்களின் தமிழுணர்வில் விளம்பரமும் சுயவெளிப்பாடும் அதிகமாக இருந்தாலும், வேறு வழியில்லை… அட குரல் கொடுக்க இவர்களாவது இருக்கிறார்களே என்ற சின்ன ஆறுதல்தான் ஈழப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழனுக்கும்!

இந்தத் தேர்தலில் இவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று மக்களைச் சந்தித்து வெற்றி பெற்று ஒட்டு மொத்த தமிழினத்தின் சார்பாகவும் குரல்தர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணமாகவும் இருந்தது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருந்தால் நிச்சயம் வைகோவும்கூட தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் இருந்ததாக மதிமுக பிரமுகர் ஒருவர் முன்பு நம்மிடம் கூறியதை நினைவு கூர்கிறோம்.

ஆனால் எங்கே இப்படியெல்லாம் நடந்துவிடுமோ என்ற பதைப்பில் காய்களை நகர்த்தியவர் ஜெயலலிதா. _jeyalalitha1

திமுகவை ஒரு கணமும் விட்டு விலகமாட்டேன் என்று நாடகமாடிக் கொண்டிருந்த காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்து முதல் கல்லை விட்டெறிந்தார் ஜெயலலிதா.

அவ்வளவுதான்… கருணாநிதிக்கு மற்ற எல்லாமும் மறந்துவிட்டது. முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் துவங்கிவிட்டவர், வாரத்துக்கு ஒரு அரசியல் முடிவை மேற்கொண்டார். என்ன நடந்தாலும் சரி… காங்கிரஸ் மட்டும் போகக் கூடாது என்ற தீவிரத்தில் தனது தமிழினத் தலைவர் மகுடத்தையே தரையில் வீசி எறிந்தார்!

அவரது தோல்வி அங்கேயே உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும், திமுகவின் மற்ற தோழர்கள் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுத்தார் ஜெயா. தன்னுடனிருந்த மதிமுகவையும் சேர்த்து கூட்டணி அமைத்து தேர்தல் களம் புகுந்தார்.

ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கையில் இறங்கி கூட்டணியைக் காத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்த கருணாநிதியை, லாவகமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டார்.
காங்கிரஸை விட்டால் கூட்டணிக்கு வேறு நாதியே இல்லை என்ற நிலை கருணாநிதிக்கு ஏற்பட, அதை மிகச் சாதுர்யாக தனது அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

இத்தனை நாள் இலங்கைத் தமிழர்களாக இருந்தவர்கள் ஈழத் தமிழர்களானார்கள், இலங்கை இறையாண்மை திடீரென காணாமல் போய், மகராசி நாக்கில் தமிழீழம் வந்து உட்கார்ந்தது. போரென்றால் சாவது சகஜம்தானே என்றவர், அய்யோ ஈழத்து சகோதரர்கள் செத்து மடிகிறார்களே என மேடைகளில் இரங்கல் பாடினார்.

இங்கே கருணாநிதி நல்லவர்… ஜெயலலிதா மோசமானவர்… அல்லது கருணாநிதி தமிழின துரோகி… ஜெயலலிதா ஈழத்துத் தாய்… என்ற நிலைப்பாட்டை நாம் முன்வைக்கவில்லை.

இதுவரை நடந்தது இதுதான்… இப்போது நடப்பவை அதையொட்டிய நிகழ்வுகளே…

இன்றைய சூழலில் கருணாநிதி – ஜெயலலிதா இருவருமே தங்கள் அரசியல் லாபங்களுக்காக மட்டுமே ஈழத்துச் சகோதரர்களின் சொல்லொணாத சோகங்களைப் பேசுகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற தெளிவுக்கு கருணாநிதி இருமாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் அன்றைக்கே போயஸ் கார்டன் கதவுகளைத் தட்டியிருப்பார் சோனியாவும் அவரது அடிப்பொடிகள் தங்கபாலுவும் வாசனும்.

தமிழக மக்களும் முற்று முழுதாக காங்கிரஸையும் ஜெயலலிதாவைும் புறக்கணிக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கும். அதை முழுமையாகக் கெடுத்தவரும் கருணாநிதிதான்.

தமிழனின் விரோதியாகிவிட்ட காங்கிரஸை அழைத்து நடுவீட்டில் உட்காரவைத்து தலைவாழை விருந்து வைக்கிறார் அவர். இது புரியாத, அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் சினிமாக்காரர்கள் காங்கிரஸை தமிழகத்துக்குள் விடமாட்டோம் என்கிறார்கள்.

தமிழக வாக்காளர்களை குழப்பியடிக்கும் கருணாநிதி – ஜெயலலிதாவின் திருப்பணியில் தங்கள் கரங்களையும் இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தவிர இதில் வேறு பிரயோஜனம் உண்டா…?

இதோ, காங்கிரசும் அதிமுகவும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு இப்போதே அச்சாரம் போடுகிறார்களே… இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

சரி… சுயநலமி கருணாநிதியும் வேண்டாம், நாடகமாடும் ஜெயலலிதாவும் வேண்டாம், தமிழன விரோதி காங்கிரஸைப் புறக்கணிப்போம்… எனில் யாருக்குதான் நாங்கள் ஓட்டுப் போடுவது? 49 ஓ வைத் தேர்ந்தெடுப்பதா? என்ற கேள்வியை மக்கள் பல இடங்களில் எழுப்புவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி எனத் தீர்மானித்தேயாக வேண்டிய நிலையில் தமிழக வாக்காளர்கள். இதற்கு முந்தைய பல தேர்தல்களில் கருத்துக் கணிப்புகளையும், ஏஸி ரூமில் ஹாய்யாக உட்கார்ந்தபடி அலசோ அலசு என அலசித் தள்ளும் சொகுசுப் பத்திரிகையாளர்களின் ஜோஸியங்களையும் தவிடுபொடியாக்கிய புத்திசாலிகள் மக்கள்.

என்ன செய்யப் போகிறார்கள்… பார்ப்போம்!

-எஸ்எஸ்
15 thoughts on “ஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது?

 1. M.Senthil Kumar

  நல்ல சொல்லிரிக்கிங்க நச்சின்னு…

  ஆனா நம்ம மக்கள் நெலைமை தான் மோசம் ஆயுடிச்சி…

  “பகலிலேயே பசு மாடு தெரியாதவர்களுக்கு இராத்திரியில் எருமை மாடு தெரிய போவதா என்ன???

 2. Sekar

  ஏறக்குறைய தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் அப்படியே எஸ்எஸ்

 3. பிரதிப்

  //ஆனால் தேர்தல், கூட்டணி பேரம், மிச்சமிருக்கிற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பு, தனது வாரிசுகளையும் அவர்தம் தொழில்களையும் பாதுகாக்க வேண்டிய அச்ச உணர்வு, காங்கிரஸின் மறைமுக நெருக்கடிகள்… இதற்கெல்லாம் ஆட்பட்ட அல்லது ஆட்படுத்தப்பட்ட முதல்வர், ஈழத் தமிழனை ஊறுகாயாக்கிக் கொண்டு, இன்னொரு கருணாவாக ஈழ மக்களுக்கு காட்சி தருகிறார் இன்று//

  மிக தெளிவான கனிப்பு மற்றும் சிறந்த கட்டுரை.

 4. ரஜினி ராஜேஷ்

  மிக மிக அருமையான பதிவு சார்.

  கலைஞர் அவர்களின் முந்தைய செயல்பாடுகளும், இன்றைய நிலைபாடுகளும், மற்றும் ஜெயலலிதா அவர்களின் போக்கு, கூட்டணி தாவும் சில்லரை வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரையும் அலசி, அதற்கு தீர்வு மக்களிடமே விட்ட உங்கள் நடுநிலைமைக்கு நன்றிகள் சார்.

 5. ராஜநடராஜன்

  இவ்வளவு வருட அரசியலில் முதிர்ந்த கலைஞரின் தடுமாற்றம்,சில முகத்திரைகள் கிழிவது வருத்தத்தையே அளிக்கிறது.ஜெயலலிதா பற்றிய மதிப்பீடு இன்னும் மதில்மேல் பூனை மாதிரியாகவே இருக்கிறது.வரும்கால அரசியல் இதற்கான பதிலை தரும்.

 6. Ramkumar Singaram

  Really fantastic article MR.SS.

  It is really a surprise to see a person like you in Rajini’s camp (This is my first visit to your site sir!!). Surely your website and clear thoughts will bring Rajini to the common people, as you said in the ‘Vanakkam’ page.

  Now Rajini can test the waters. b’cause he has matured fans also like you… LOL!

  Best wishes…

 7. Ramanan

  It is easier to analyze the situation and say exactly what is in all our mind but what is the solution? What is your suggesstion? What you will do in this situation?

 8. pannadai

  I LOVE YOU CHELLAM,I LOVE YOU DAA!!மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள். மனதில் ஓடிக் கொண்டிடுந்ததை வார்த்தைகளில் பார்த்த மனநிறைவு.
  BUT ORUU NAPPASAI THAAN,TAMILEELAM KIDAIKUM ENNRU, ATHANAL ENN VOTDU AMMAVUKU.
  SOMETHING IS BETTER THAN NOTHING!!

 9. ஆர்.செல்வக்குமார்

  திடீரென கண்மூடித்தனமாக அம்மாவை ஆதரிக்கத் துவங்கி, தேர்தல் நெருங்க நெருங்க, ஏதோ ஒரு சந்தேகத்தில் நடுநிலை எடுத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்.

 10. vivek

  this is not a state election. dont think about jj& karuna.

  congress shouldn’t come to power. bjp & 3rd front are better for india
  and also for our relations in eezham…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *