BREAKING NEWS
Search

இலங்கை ராணுவத்தின் பாலியல் வெறியாட்டம்! – சேனல் 4 அம்பலப்படுத்தும் புதிய வீடியோ

இலங்கை ராணுவத்தின் பாலியல் வெறியாட்டம்! – சேனல் 4 அம்பலப்படுத்தும் புதிய வீடியோ

முன்குறிப்பு: மனதை திடப்படுத்திக் கொண்டு இந்த கொடூர காட்சிகளைப் பாருங்கள். மிகுந்த வேதனையோடும் சங்கடத்தோடும் இந்த வீடியோ பதிவை இங்கே தருகிறோம்.

சர்வதேச சமூகத்துக்கும், இன்னமும் கூட ‘நமக்கென்ன வந்தது’ என்ற மனப்போக்குடனும் அலட்சியமாக  உள்ளவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பும் கூட்டு முயற்சியாகவே இந்த வீடியோவைத் தருகிறோம்.

இலங்கை ராணுவத்தின் கொடிய போர்க்குற்ற வீடியோ…

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளவை இலங்கை ராணுவத்தினரால் கடந்த ஆண்டு ஈழப் போரின்போது நடத்தப்பட்ட வெறியாட்டங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சில பொதுமக்களை கண்களைக் கட்டி, துப்பாக்கியால் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி இதனை ஒளிபரப்பியது. தமிழ்நாட்டு / இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

இந்த வீடியோவை போலியானது என்று கூறி தப்பிக்கப் பார்த்தது இலங்கை அரசு. ஆனால் சர்வதேச புலனாய்வு அமைப்புகள், இவை போலி அல்ல உண்மையே என்பதையும், எந்தக் காலகட்டத்தில் நடந்தன என்பதையும் உறுதிப்படுத்தின.

இந்த நிலையில் மேலும் சில போர்க்குற்ற ஆவணங்களை அல்ஜஸீரா வெளியிட்டது.

இப்போது மீண்டும் சேனல் 4 தங்களிடம் உள்ள முக்கிய வீடியோ ஆதாரத்தினை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேவின் போர்க்குற்றத்துக்கு மிக வலுவான ஆதாரம் இது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில், தமிழ்ப் போராளிகள் பலரையும் நிர்வாணப்படுத்தி பின்புறம் கைகளைக் கட்டி ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாக சுட்டுக் கொல்கின்றனர் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் இறந்த பின்னும் உடல்களை தோட்டாக்களால் குதறி வெறியாட்டம் போடுகின்றனர்.

அடுத்து இந்த புதிய வீடியோவில், சிங்கள இராணுவம் தமிழீழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சுட்டுத்தள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளன. அவை முழுமையாக ஒளிபரப்ப முடியாத அளவுக்கு கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள கொடுமைகளுக்குள்ளானவர், பெண் விடுதலைப்புலி உறுப்பினரும், விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டு வந்த ‘ஒளிவீச்சு’க்கு செய்தியாளராக இருந்தவருமான இசைப்பிரியா என தமிழ்நெட் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று சேனல் 4 இல் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில் நிர்வாணமாக ஏழு பெண்கள் இறந்து கிடக்க்கிறார்கள். இவற்றுக்கருகில் நின்று பேசுபவர்களின் உரையாடல்களிலிருந்து இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

சேனல் – 4 விரிவாக இந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய போதிலும், ஒரு கட்டத்தில் அதற்கு மேல் காட்சிகள் ஒளிபரப்பமுடியாத அளவுக்கு காட்சிகள் கொடூரமாக இருக்கின்றன. பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்களின் நிர்வாண உடல்கள், மற்றும் சூழ நின்று கொண்டிருப்பவர்களின் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய உரையாடல்கள் என்பன காரணமாக தொடர்ந்து ஒளிபரப்ப முடியவில்லை என்று சேனல் 4 செய்தி அறிவிப்பாளர்கள் கூறினர்.

இருப்பினும் அக்காணொளியை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கு சேனல் 4 அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள இந்த சூழலில் இந்த வீடியோவை சேனல் 4 ஒளிபரப்பிடயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றங்களின் அடிப்படையில் ராஜபக்சே மீது விசாரணை ஆரம்பமாகலாம், அவரைக் கைது செய்யவும் முகாந்திரம் உள்ளது என கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக சேனல் 4 செய்தி:

இசைப்பிரியா – பழைய வீடியோ

-என்வழி

படங்கள்:தமிழ்நெட்

வீடியோ: சேனல் 4
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *