BREAKING NEWS
Search

இலங்கை போர்க் குற்ற விசாரணைக் குழுவைக் கலைக்க முடியாது! – ஐநா உறுதி

விசாரணைக் குழுவைக் கலைக்க முடியாது! – ஐநா உறுதி

நியூயார்க்: இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள குழுவைக் கலைக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்டப் போரின்போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன் கடந்த 2 வாரங்களுக்கு முன் நியமித்தார்.

ஐ.நா. சபையின் செயல் தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கிறது எனக் கூறி, அந்தக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான விமல் வீரவன்ஸ தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அருகே ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அலுவலகம் அருகே பதற்றம் ஏற்பட்டது. ஊழியர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் வரமுடியவில்லை. வெளியுறவுச் செயலர் ரமேஷ் ஜெயசிங்கே தலையிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றினார்.

இந்நிலையில், ஐ.நா. அலுவலகம் அருகே புதன்கிழமையும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாகும் வரை உண்ணாவிரதம்: ஐ.நா. குழுவைக் கலைக்காவிட்டால் வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என வீரவன்ஸ எச்சரித்தார்.

ஐ.நா. அதிகாரி கண்டனம்: மூத்த அமைச்சர் ஒருவரே இதுபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளோம். இலங்கை அமைச்சரின் வேண்டுகோள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஐ.நா. குழு கண்டிப்பாக கலைக்கப்படமாட்டாது என்றார் ஹக்.

கொழும்பு ஐநா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது...

ஐ.நா. விசாரணை நடைபெற்றால், மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டது உலகுக்குத் தெரிந்துவிடும் என்பதால்தான், நெருக்கடி அளித்து விசாரணையைத் தடுப்பதற்காக மூத்த அமைச்சர் ஒருவரே நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

ஐநாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அச்சுறுத்துவதன் மூலம் தமிழர்கள் மீதான இனப் படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், விசாரணையை ஐ.நா. தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




One thought on “இலங்கை போர்க் குற்ற விசாரணைக் குழுவைக் கலைக்க முடியாது! – ஐநா உறுதி

  1. sakthivel

    நான் அடிக்கறமாதிரி நடிக்கிறேன், நீ அழுகிறமாதிரி நடி- என்பதுபோல் இருக்கிறது இந்த பொய்.நா ஆர்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *