BREAKING NEWS
Search

‘இலங்கை திரைப்பட விழாவை ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்’

‘இலங்கை திரைப்பட விழாவை இந்திய திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்’ – தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை

சென்னை: இலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவை, ஒட்டு மொத்த திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும், என்று தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளன.

அந்த அறிக்கை:

“கடந்த வருடம் இலங்கையில் தமிழ் இனத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குவியல் குவியலாக ஆயிரக்கணக்கானவர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது, சிங்கள அரசு. அங்கு கேட்ட மரண ஓலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் இன்னமும் ஆறாத வடுவாக இருந்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தி, தமிழ் இனத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் ஒன்று கூடி மனிதச்சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக் கூட்டம் என திரையுலகம் சார்பில் கண்டனங்களை தெரிவித்தோம்.

அதை செவி கொடுத்து கேட்டும், சிங்கள அரசு போரை நிறுத்தவில்லை. நடைபெற்ற தமிழ் இன அழிப்பு போரில், தங்கள் உடல் உறுப்புகளை இழந்து, அந்தப்போரின் நடமாடும் நினைவு சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தத்தை பார்க்கையில், நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது.

எந்த கலைஞரும் பங்கேற்கக் கூடாது!

நம் சகோதர-சகோதரிகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வருகிற ஜுன் 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்புவில் நடத்தக் கூடாது. அதனையும் மீறி அங்கு அந்த விழா நடப்பதாக இருந்தால், இந்திய திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தொழிலாளர் சம்மேளனத்தினர், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே அந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் உணர்வுகளுக்கும், உள்ளக் குமுறல்களுக்கும் ஆதரவாக தமிழ்திரை உலகின் இந்த புறக்கணிப்பு முடிவுக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமல்லாம் இந்தியர், சகோதரர்கள் என்று கூறப்படுவது உண்மையானால் இந்த முடிவை தன்னிச்சையாக அனைத்துக் கலைஞர்களும், அனைத்து மொழி திரைத் துறையினரும் எடுத்தாக வேண்டும்.

தான் செய்த சதி வேலைகளை மறைத்து, குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு, இந்திய திரையுலகம் குறிப்பாக, தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்…”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
6 thoughts on “‘இலங்கை திரைப்பட விழாவை ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்’

 1. eelam tamilan

  Good decision and Thanks all of you… I am expecting some push from political ground to send some artists there to support their good friend MR… We will see live in next week…

 2. sakthivel

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- இப்போது நமக்கு மிகவும் தேவை.

 3. Chozhan

  மிகவும் நன்றி. இந்த அறிக்கைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள். காயம்பட்ட ரணத்திற்கு மருந்து போட்ட உணர்வு.

 4. palPalani

  பாடலாசிரியர் தாமரை, இது முறைப்படி தென் கொரியாவில நடக்க வேண்டிய ஒரு விழா, இந்திய அரசின் தலையீட்டின் பிறகே இது இலங்கைக்கு மாற்றப்பட்டதாக சொல்லியிருக்கிறார். இது மட்டும் உண்மைஎன்றால், எதிரிகள் இன்னும் போராடுகிறார்கள், ஆனால் தமிழர்கள் இன்னும் உறங்கிகொண்டுதான் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்.

 5. முல்லை மைந்தன்

  இயற்கையே கொழும்பில் எமக்காக போராடத்தொடங்கிவிட்டது. அந்த மண்ணில் கால் வைத்து, இன்னும் பாவத்தை சுமக்க வடஇந்திய கலைஞர்கள் முயலக்கூடாது. இதையும் மீறி சென்றால் எம் தேசியத்தலைவனின் நண்பன் இயற்கையின் விளைவு அவர்களையும் பின்தொடரும் என்பது கண்கூடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *