BREAKING NEWS
Search

இலங்கை தமிழருக்கு சம அந்தஸ்து: பிரதமர் வலியுறுத்தல்


இலங்கை தமிழருக்கு சம அந்தஸ்து: பிரதமர் வலியுறுத்தல்

டெல்லி: இலங்கைத் தமிழர்களின் விருப்பமான சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கைக்கு அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அந்த விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.manmohan-singh-40817

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தி்ல் கலந்து கொண்டு பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இலங்கைப் பிரச்சினையைப் பற்றி தீவிரமாகப் பேசினர்.

திருமாவளவன், கணேசமூர்த்தி போன்ற தமிழக எம்பிக்கள் மக்களவையில் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்த குளறுபடிகளுக்கு பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவின் எம்பி சுஷ்மா ஸ்வராஜ், தமிழ் இலக்கியமான நன்னெறிப் பாடலை மேற்கோள் காட்டி, ஈழத்தில் சிந்தப்பட்ட தமிழர்களின் ரத்தத்துக்கு நியாயம் கேட்டார்.

இவற்றுக்கெல்லாம் பதிலளித்து நேற்று பிரதமர் பேசினார்.

அவர் கூறியதாவது:

இலங்கையுடன் இந்தியாவுக்கு பல நூற்றாண்டுகளாக உறவு உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளில் இந்தியா தீவிர பங்கெடுத்துள்ளது.

இதற்காக ஏற்கனவே ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இலங்கையில் இயல்புநிலை திரும்பவும், தமிழர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடியேறவும் இந்தியா இன்னும் நிறைய செய்ய விரும்புகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை, விடுதலைப்புலிகள் பிரச்சினையை விட பெரியது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் சம அந்தஸ்து கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களின் சட்டப்பூர்வ உணர்வுகளை நிறைவேற்றி வைக்க வேண்டிய மனோதிடத்துடன் இலங்கை அரசு செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானுடன்…

பாகிஸ்தானுடன் சமாதானத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆனால் இதற்கு பாகிஸ்தானிடம் இருந்து சாதகமான பதில் வர வேண்டும். இரு கைகளும் தட்டினால்தான் ஓசை எழும்பும்.

தனது மண்ணில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத சக்திகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பை தாக்குதல் உள்பட இந்தியாவுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை இரு நாட்டு மக்களும் வரவேற்பார்கள்.

பாகிஸ்தானில் ஸ்திரமற்ற தன்மையும், கலவரமும் நிலவுகின்றன. இவை இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தெற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவாவிட்டால், இந்தியா தனது லட்சியங்களை எட்ட முடியாது. வறுமையும், அறியாமையும் இல்லாத தெற்கு ஆசியாவை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு.

இந்த கனவை நனவாக்க தேவையான சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். அதற்குரிய மனோதிடம், உறுதிப்பாடு, ராஜதந்திரம் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் தலைமை செயல்பட வேண்டும்.

சீனாவுடன்…

சீனாவுடன் நமக்கு பன்முக உறவு உள்ளது. சீனா, நமது ராணுவ கூட்டாளி. தீவிரவாதம், புவி வெப்ப மாற்றம் போன்ற பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. இந்த நல்லுறவு, இரு நாடுகளுக்கும் நல்லது.

சீனாவுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதே சமயத்தில், நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம்.

ஆஸ்திரேலியப் பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை கேள்விப்பட்டு திடுக்கிட்டேன். இவற்றில் சில தாக்குதல்கள், இன வெறியுடன் நடந்துள்ளன. இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய அரசுடன் நடக்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத்துடன் பேசினேன். அவரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்திய மாணவர்களின் பெற்றோர் அடையும் வேதனையை நான் குறைத்து எடை போட விரும்பவில்லை.

அதே சமயத்தில், ஆஸ்திரேலியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதை பத்திரிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இன வெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையை தெரிந்தோ, தெரியாமலோ பத்திரிகைகள் உருவாக்கி விடக்கூடாது.

தீவிரவாதத்துக்கு எதிராக…

தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது. அதுதான் மத்திய அரசின் கொள்கை. மும்பை தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்க எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு நிறுவனம் அமைத்ததுடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உளவு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

4 இடங்களில் தேசிய பாதுகாப்பு படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் அவை அமைக்கப்படும். பாதுகாப்பு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அனைத்து மாநில முதல்வர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நக்சலைட் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், ஜனநாயக பாதைக்கு கொண்டுவரப்பட வேண்டும். கோரிக்கைகளை அடைய வன்முறை, வழி அல்ல.

ஓட்டுச்சீட்டு மூலம் கருத்து தெரிவிப்பதற்கு ஜனநாயகம் வாய்ப்பு அளிக்கிறது. போராளியாக இருந்தவர்கள் பலர் பின்னாளில் ஆட்சியாளர்களாக மாறி உள்ளனர். அதுதான் ஜனநாயகத்தின் அழகு.

நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்க இரு வித வழிமுறை பின்பற்றப்படும். நக்சலைட்டுகளை ஒடுக்கிக்கொண்டே, அவர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதுதான் அந்த வழிமுறை.

எந்த மாநிலத்தின் மீதும் பாரபட்சம் காட்டாமல், அனைத்து மாநிலங்களும் சம வளர்ச்சி பெற பாடுபடுவோம். பின்தங்கிய மற்றும் பழங்குடியின பிராந்தியங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

மத்திய, மாநில அரசுகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படாவிட்டால், எந்த வளர்ச்சி திட்டமும் வெற்றி பெற முடியாது. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, தேசிய மேம்பாட்டு கவுன்சிலில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமானால், இவற்றை தடுக்க வேண்டும்.

இந்த விவாதத்தில் அத்வானி, முலாயம்சிங், லாலுபிரசாத் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுகளில் ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்தது. இது நல்ல தொடக்கம். தேச நலன் சார்ந்த பிரச்சினைகளில் நாம் கட்சி வேறுபாடுகளை கடந்த உணர்வுடன் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டால், 21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று அத்வானி கூறினார். இது நல்ல யோசனை. இந்தியாவுக்கென்று நீண்ட கால கனவு இருக்க வேண்டும்.

சபாநாயகரும், துணை சபாநாயகரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. ஸ்திரத்தன்மைக்காகவே மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால், வலிமையான, நிலையான அரசை கொடுக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார் பிரதமர்.

பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்.
One thought on “இலங்கை தமிழருக்கு சம அந்தஸ்து: பிரதமர் வலியுறுத்தல்

  1. Kesava

    இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது.அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்?????

    ஒரு நாய் இப்படி மற்றது அப்படி…..??? எது உண்மையோ? உங்கள் சுயநல கொள்கைகளுக்கு இருக்கடி ஆப்பு…..வைப்பானடி பக்ஸா சீனாவோடு சேர்ந்து உங்களுக்கு வேட்டு….அப்போ பாப்பமடி சோனியா உன்டை ஆட்டத்தை !!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *