BREAKING NEWS
Search

இலங்கை அரசின் கபட நாடகத்தில் ஏமாறாதீர்கள்! – விடுதலைப் புலிகள் அறிக்கை

தமிழர் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள உளவியல் போர்! – விடுதலைப் புலிகள் அறிக்கை

கொழும்பு: புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைப் பிரிக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. இந்த கபட நோக்க முயற்சிகள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியுள்ளது.

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்த கே.பி என்ற குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் போர் குற்றம் தொடர்பான விசாரணையில் அவரை அரசுத் தரப்பு சாட்சியாக பயன்படுத்தவும் இலங்கை முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் புலிகளின் தலைமைச் செயலக இணைப்பாளர் ராமு. சுபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பான தமிழ் பேசும் மக்களே!

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது, சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது, இன நல்லிணக்கம் என்ற பேரிலும், அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை இலங்கை அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி, குழப்பங்கள், கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன.

இதன் காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம்.

அதன் ஒருபகுதியாக, சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒரு தொகுதியைத் தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து, தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உளவியல் போர்…

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, தம்வசப்படுத்தும் உளவியற்போரை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை, செய்து கொண்டிருப்பவை என்ன?

யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்று குவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தது. ஊடகங்களைச் சுயாதீனமாகச் செயற்படவிடாமல் தடுத்தது. சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமலுள்ளது.

நாளாந்தம் பாலியல் வல்லுறவு, சித்திரவதை, கொலை என்று தடுப்புக் காவலில் உள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாது தடுப்பது மட்டுமன்றி போர்க் குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த இலங்கை அரசாங்கம்.

இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது, மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது. தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்றுமுழுதாக இலங்கை அரசின் கையிலுள்ள விஷயம். அதற்கு எந்தத் தடையுமே இல்லை.

தனி நபர்களை வரவழைப்பது ஏன்?

அது குறித்துப் பேசுவதானால்கூட தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனி நபர்கள் சிலரை அழைத்துப் பேசவேண்டிய தேவையில்லை.

இதுவொரு தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும், தம் மீதான அழுத்தங்களைத் தணிக்க இலங்கை அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

என்ன செய்திருக்க வேண்டும்?

தமிழ்மக்கள் மேல் அக்கறையும் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டுமென்ற விருப்பும் உண்மையாகவே இலங்கை அரசாங்கத்துக்கு இருக்குமானால்,

* இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினையும் நீக்கவேண்டும்.

* தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

* ஐயத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும்.

* இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரையும் அவரவரின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்.

* பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர்த் தொண்டு நிறுவனங்களையும் தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக அபிவிருத்திப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இடம்பெற வேண்டும். அத்தோடு தாயகத்திலுள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து இவற்றைச் செய்யவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணிகளுக்கென அணுகப்பட வேண்டியவர்கள் அதற்கெனவுள்ள மக்கள் கட்டமைப்புக்களேயன்றி, தனி நபர்களல்லர். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் செய்யும்போது உலகத் தமிழர்களும் அதற்கு முன்னின்று உழைப்பார்கள்.

அரசின் கபடத்தனம்!

ஆனால் இலங்கை அரசாங்கமோ மிகமிக இரகசியமாக, சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும், வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனிநபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை.

ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு, மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி தனிநபர்களைக் கொண்டு காரியமாற்றும் இலங்கை அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, இலங்கை அரசின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி, நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும், வழங்க முன்வந்திருக்கும் புலம் பெயர்ந்த தனி நபர்கள், இலங்கை அரசின் கபடத்தனத்தை விளங்கிக் கொண்டு விழிப்புணர்வோடு செயற்பட்டு அரசின் சதிக்குப் பலியாகாமல் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புறக்கணிக்க வேண்டும்!

சிலருக்குப் பொது மன்னிப்பளித்து அவர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டும், அபிவிருத்தி என்ற பெயரில் சலுகைகளை வழங்கியும் அரசியல் இலாபம் தேடமுனையும் இலங்கை அரசாங்கத்தின் வஞ்சகச் சூழ்ச்சியைத் தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

அத்தோடு, சலுகைகளுக்காக எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை விலைபேசும் சக்திகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்துச் சொல்லவும், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தி அதற்கான நீதியை உலகமட்டத்தில் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றும் வலுவுடனிருக்கும் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு செயற்படுவதன் மூலம் எமது விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 thoughts on “இலங்கை அரசின் கபட நாடகத்தில் ஏமாறாதீர்கள்! – விடுதலைப் புலிகள் அறிக்கை

 1. Ravanan

  தலைவர் பிரபாகரனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே……… ஐந்தாம் கட்ட போர் தொடங்குமா?

  என்ன தான் உண்மை….

  ஐயா வினோ……

  பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா….. தயவுசெய்து உண்மையான பதிலை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்….

 2. sakthika

  கடவுளே யாரைம் நம்ப முடியவில்லை …………….. என் தமிழ் மக்களை காப்பாற்று ………………. நீ உண்மையானால் உண் கல்கி அவதாரதிநை அங்கெ எடு ………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *