BREAKING NEWS
Search

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவது கடினம்! – மன்மோகன் சிங்

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவது கடினம்! – மன்மோகன் சிங்

சென்னை: சர்வதேச சட்டங்களை மீறி இன்னொரு நாட்டுக்குள் ராணுவத்தை அனுப்புவது கடினம் என்றும் இலங்கை விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அதுவே என்றும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார்.manmohan

மேலும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் கனரக ஆயுதங்களை அந்நாட்டுப் படைகள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்கவும், கூட்டணி முரண்களைக் களையவும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறைமுக ஹெலிபேடுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ் கன்னிமாரா ஹோட்டலுக்கு வந்தார்.

அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் ராணுவத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமையும் இந்த உயிரிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.

போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே இந்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். கடந்த காலம் முதல் இப்போது வரை, இந்தியாவின் நிலை என்னவென்றால், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அமைதியான, கெளரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். அங்குள்ள சிறுபான்மை தமிழர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதேநேரம் இலங்கைப் பிரச்சினைக்கு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்ததை செய்யும்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை!

இலங்கையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி அங்கு கனரக ஆயுதங்களை தற்போது பயன்படுத்தவில்லை.

இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ இந்தியா உதவி செய்யும். இலங்கைத் தமிழர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் உள்ளது.

ராணுவத்தை அனுப்புவது கடினம்

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை ‘இது சாத்தியம், இது சாத்தியமில்லை’ என்று ஊகமாகத்தான் கூற முடியும். நாம் ஒரு இறையாண்மை மிக்க நாட்டுடன் இப்பிரச்சினை குறித்து தொடர்பு கொண்டிருக்கிறோம். எனவே இறையாண்மை மிக்க ஒரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி நாம் எதையாவது சாதிக்க முடியும் என்று நினைத்தால் அது கடினம், எளிதான ஒன்றல்ல.

சர்வதேச சட்டம் என்று ஒன்று உள்ளது. எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

ஐந்தாண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறோம்!

இலங்கைத் தமிழர் துயரம் குறித்து காங்கிரஸ் கவலை கொள்ளாமல் உள்ளதாகக் கூறுவது தவறு.கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இனப் பிரச்சினை குறித்த கவலையுடன்தான் உள்ளது!

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுதொடர்பாக இலங்கை அதிபருடனும், பிரதமருடனும் நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியபடிதான் இருந்தன். தமிழ் மக்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அவர்களது குறைகளுக்கு காரணம் உள்ளது.

பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்!

விடுதலைப் புலிகள் விஷயத்தில், அரசைப் பொறுத்தவரை அது ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். தீவிரவாத அமைப்பாகும். அதன் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில்தான் இந்தியா பார்க்கிறது. இதுதான் இந்திய அரசின் கொள்கையாகும்.

திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் மாற்றமில்லை!

இந்த தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி என்பது திமுகவுடன்தான். எங்களின் 5 ஆண்டு சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். வெற்றி பெற்ற பிறகும் இதே கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார் மன்மோகன் சிங்.

கருணாநிதியை நலம் விசாரித்தார் பிரதமர்

செய்தியாளர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர்.

அங்கு முதுகு வலி, காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார்.

முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்தார்.

பிரதமரிடம் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், போர் நிறுத்தம் குறித்தும், தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோரையும் நலம் விசாரித்தார் பிரதமர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *