BREAKING NEWS
Search

இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது! – முதல்வர் கருணாநிதி

திமுகவினர் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது! – டெல்லியில் முதல்வர் கருணாநிதி பேச்சு

டெல்லி: பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதிய வைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. திமுகவினருக்கு இதை குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன், என்றார் முதல்வர் கருணாநிதி.

புது டெல்லியில் திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியதாவது:

“தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். ஆனால் தமிழகத்துக்கு எல்லா வளமும் உண்டு. இன்று நேற்றல்ல. அந்தக் காலத்திலேயே தமிழ்நாட்டிலே எழுதப்படுகின்ற கதைகளிலெல்லாம் முகப்புரையில், நீர் வளம் நிலவளம் சூழ்ந்த தஞ்சைத் தரணியில் என்றுதான் தொடங்குவார்கள்.

அப்படித் தொடங்குவது அதுவும் ஒரு கற்பனைதான். ஏன் அதை கற்பனை என்று சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் எல்லா வளமும் உண்டு. ஆனால் நீர்வளம் குறைவு. பக்கத்திலே இருக்கின்ற கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் நீர்வளம் நிரம்பியவை. பக்கத்திலே இருக்கின்ற அந்த நீர் வளத்தைத்தான் பெற்று தமிழ்நாடு வாழ வேண்டியிருக்கிறது. நான் என்னுடைய கவலையை இங்கே சொல்லுகிறேன்.

ஆனால் தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருக்கின்ற தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடிய மனோபாவம், என்ன காரணத்தாலோ பக்கத்து மாநிலங்களிலே உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை.

ஒருமைப்பாடு ஒருவழிப் பாதை அல்ல!

ஒருமைப்பாடு ஒரு வழிப்பாதையாக ஆகக்கூடாது. ஒருமைப்பாட்டில் எல்லா மாநிலங்களும் சகோதர மாநிலங்களாக ஒன்றுக்கொன்று உதவுகின்ற மாநிலங்களாக இருந்தால்தான் அந்த ஒருமைப்பாடு சீரானதாக, சிறப்பானதாகக் கருதப்பட முடியும்.

பக்கத்திலே இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, இன்னொரு மாநிலம் தண்ணீரை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தால், அது வேடிக்கை காட்டுவதை விட, அப்படி வேடிக்கை காட்டுவதையும் அதனால் வேதனைப்படுகின்ற தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டு, அந்த வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பது இன்னும் தவறு.

நான் தலைநகரத்திலிருந்து மீண்டும் சொல்லுகிறேன். மத்திய அரசு இனியாவது இந்த மாநிலங்களில் ஏற்படுகின்ற தகராறுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவர்கள் அடித்துக் கொண்டு அவர்களாக வரட்டும் என்றில்லாமல், நமக்கும் பொறுப்பு உண்டு என்ற முறையில் மத்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.

பெரியாருடைய பெயரால் எத்தனையோ மன்றங்கள், படிப்பகங்கள், வாசக சாலைகள், இல்லங்கள், இத்தனையும் தமிழகத்திலே இருக்கின்றன. ஆனால் வியப்புக்குரிய செய்தி, டெல்லியிலும் இப்படிப்பட்ட ஒரு மையத்தை உருவாக்கி பெரியாருடைய கொள்கைகளை விரித்து உரைப்பதுதான் வியப்புக்குரியது என்றால் அது மிகையாகாது.

எல்லா இடங்களிலும் பெரியாருடைய தாக்கம், இந்த அலைகள், இந்த வேகம், இந்தச் செயல் செல்ல வேண்டும். பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியாருக்கு செய்கின்ற நன்றி ஆகாது.

பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதிய வைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது.

இதுதான் இந்த பெரியார் மைய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என் கட்சியினருக்கு நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். பெரியார் கணினி மையத்தை புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா திறந்து வைத்தார்.

மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
4 thoughts on “இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது! – முதல்வர் கருணாநிதி

  1. unmai

    அதாவது உன்ன போல இருக்க கூடாது ,,,, நிச்சயம் உங்களை போல இரட்டை மனிதனாக யாராலும் இருக்க முடியாது ,,,, கொலைஞர் அவர்களே

  2. reja

    ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் நீர்வளம் நிரம்பியவை. பக்கத்திலே இருக்கின்ற அந்த நீர் வளத்தைத்தான் பெற்று தமிழ்நாடு வாழ வேண்டியிருக்கிறது. நான் என்னுடைய கவலையை இங்கே சொல்லுகிறேன்.

    இது கலைஞரின் அறிக்கை இந்த நீர் பிரச்சினைக்காக ஒரு முறையாவது டெல்லிக்கு சென்றதுண்டா இதை பற்றி பேசுவதற்கு இவருக்கு தகுதி கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *