BREAKING NEWS
Search

இயற்கை எரிவாயு குடும்பச் சொத்தல்ல! – ரிலையன்ஸுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

அம்பானி குடும்பத்தினருக்கு எரிவாயு மீது சட்ட உரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்!

டெல்லி: கிருஷ்ணா – கோதாவரிப் படுகையில் ரிலையன்ஸ் மூலம் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையும் அதிகாரமும் மத்திய அரசுக்கே உள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் எந்த உரிமையும் கோர முடியாது. எரிவாயு என்பது தேசத்தின் சொத்து..” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணா – கோதாவரிப் படுகையில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெளிக் கொணரும் காண்டிராக்ட் பெற்ற நிறுவனங்களுள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த காண்ட்ராக்ட் ரிலையன்ஸுக்குக் கிடைத்தபோது, ஒன்றுபட்ட நிறுவனமாக இருந்தது ரிலையன்ஸ்.

பின்னர் அம்பானி குடும்பம் உடைந்து முகேஷ் – அனில் சகோதரர்கள் பிரிந்தனர். சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட்டன.

அப்போது குடும்ப ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதன்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் (கே.ஜி.பேசின்) எடுக்கப்படும் எரிவாயுவை மார்க்கெட் விலைக்கு கீழ் விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஒரு யூனிட் எரிவாயுவை 2.34 அமெரிக்க டாலர் என்ற விலையில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு 17 வருடங்களுக்கு கொடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது மின்சாரத் தயாரிப்புதிட்டத்திற்கு இந்த எரிவாயுவைக் கோரினார் அனில்.

ஆனால் கேஜி படுகை எரிவாயு விஷயத்தில் என்ன விலைக்கு, யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என்பதால், இந்த குடும்ப ஒப்பந்தத்தை மீறினார் முகேஷ் அம்பானி.

கே.ஜி. பேசின் இயற்கை எரிவாயு அரசுக்கு சொந்தம் என்பதால், அதை குடும்ப ஓப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலைக்கு கொடுக்க முடியாது என்றும், மத்திய அரசு நிர்ணயித்த விலையான 4.2 அமெரிக்க டாலருக்கு தான் எரிவாயுவை விற்க முடியும் என்றும் கூறினார்.

முகேஷின் இந்த முடிவை எதிர்த்து அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேல் விசாரணை இழுத்துக் கொண்டே போனது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நீதிபதி சதாசிவம் முகேசுக்கு ஆதரவாகவும் இன்னொரு நீதிபதியான சுதர்சன ரெட்டி அனிலுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி தலையிட்டு சதாசிவத்தின் தீர்ப்பை ஆதரித்து முகேசுக்கு ஆதரவான தீ்ர்ப்பை அறிவித்தார். இதனால் நீதிமன்றத்தின் பெரும் பரபரப்பு நிலவியது.

நீதிபதி சதாசிவம்

நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில், எரிவாயு என்பது நாட்டின் சொத்து, மக்களின் சொத்து. இதனால் இதன் விலை தொடர்பான விஷயத்தில் ரிலையன்ஸ் குடும்பமும் சகோதர்களும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது.

எரிவாயு மக்களை அடையும் வரை அது அரசாங்கத்தின் சொத்தாகும். தயாரிப்பு-பகிர்வு ஒப்பந்தப்படி ஒரு யூனிட் எரிவாயுவின் விலையை அரசு 4.2 டாலராக நிர்ணயித்துள்ளது. இது தான் உண்மையான விலையாக இருக்க முடியும். இந்த விலையைவிடக் குறைவான விலைக்கு எரிவாயுவைத் தர வேண்டும் என்று யாரும் கோர முடியாது.

இந்த விவகாரம் குறித்து இரு சகோதரர்களின் நிறுவனங்களும் மீண்டும் பேசி, 6 வாரங்களுக்குள் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் (அதாவது புதிய விலையை நிர்ணயிக்க வேண்டும்) என்றார்.

மாறுபட்ட நீதிபதி சுதர்சன ரெட்டி

இதையடுத்து நீதிபதி சுதர்சன ரெட்டி தனது தீர்ப்பை வழங்கினார். அது அனில் அம்பானிக்கு ஆதரவாக அமைந்திருந்தது.

இரு வேறுபட்ட தீர்ப்பு வந்ததால், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலையிட்டார். இரு தீர்ப்புகளையும் ஆராய்ந்து, நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பை இறுதித் தீர்ப்பாக அறிவித்தார்.

இந்தத் தீர்ப்பின்படி ஒரு யூனிட் எரிவாயுவின் விலையை 4.2 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் வைத்து அனில் அம்பானிக்கு, முகேஷ் அம்பானி விற்கலாம். ஆனால் இந்த விலையையும் அரசுதான் முடிவு செய்யும்.

தீர்ப்பை நீதிபதிகள் அறிவித்தபோது அனில் அம்பானி கோர்ட் அறையில் இருந்தார். தீர்ப்பை கேட்டதும் அவர் அமைதியாக எழுந்து வெளியேறினார். வெளியில் காத்திருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அனில் அம்பானி பங்குகள் விலை சரிவு…

இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் வேகமாக உயரத் தொடங்கின. 3 சதவீத உயர்வை அவை சந்தித்தன. அதேசமயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனப் பங்குகள் 13 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து ரூ. 1045.80 ஆக இருந்தது.

மத்திய அரசு வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா வரவேற்றுள்ளார்.

“அரசுக்கு எதிராக எத்தகைய பிரசாரம் மேற்கொண்டாலும் தேசமே முக்கியம் என்ற வகையில் அரசின் இறையாண்மை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.




2 thoughts on “இயற்கை எரிவாயு குடும்பச் சொத்தல்ல! – ரிலையன்ஸுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

  1. r.v.saravanan

    எரிவாயு என்பது தேசத்தின் சொத்து

  2. kamatchinathan

    எங்கே தேசத்தின் சொத்து எல்லாம் அரசியல்வாதிகளின் பை க்கு தான் போகிறது .அவர்களாவது எதாவது நாட்டுக்கு நல்லது செய்வார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *