BREAKING NEWS
Search

இன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப்! – ரஜினி முழு பேட்டி தமிழில்

இன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப்! – ரஜினி

ரே இரவில் பிரபலமாவது எப்படி… ‘ரஜினியைப் பேட்டி எடுங்க… இல்லன்னா  கூட நின்னு போஸ் கொடுங்க!’- 1996- பிரபலமான வாக்கியம் இது, பத்திரிகையாளர்கள் மத்தியில். காரணம் இரண்டுமே அரிதான விஷயம்தான், இங்குள்ளவர்களுக்கு!

பொதுவாக தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு தனிப்பட்ட பேட்டிகளைக் கொடுப்பதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம், ஏற்கெனவே அவர் சொன்னதுதான்… ‘ஒருத்தருக்கு கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்தாகனும்… இல்லன்னா மனசு கஷ்டப்படுவாங்க!’

சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள், இணையதளங்கள் என பல வடிவங்களில் உள்ள ஊடகங்கள் அவரை தினமும் பேட்டிகளுக்காக அணுகி வந்தாலும், யாருக்கும் அவர் பேட்டி தருவதில்லை.

இன்னொன்று, தான் சொல்ல நினைப்பதை பொது விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், பட விழாக்கள் என பல வழிகளில் சொல்லிவிடுகிறார் ரஜினி. எனவே தனியாகப் பேச அவசியம் வைப்பதில்லை அவர். இதனை நாம் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். அப்படீன்னா, வட நாட்டுப் பத்திரிகைகளுக்கு மட்டும் தருகிறாரே.. என்ற கேள்வி எழலாம். சில நேரங்களில் நன்கு அறிந்த யாராவது ஒருவரிடம் மனம் திறந்து அவர் பேசுவது உண்டு. இந்த முறை அந்த வாய்ப்பு மிட்டே சிறப்புச் செய்தியாளரும் தி பிலிம் ஸ்ட்ரீட் ஜர்னல் வார இதழின் ஆசிரியருமான பாரதி எஸ் பிரதானுக்குக் கிடைத்தது. ரஜினிக்கு ஏற்கெனவே அறிமுகான பெண் பத்திரிகையாளர் இவர்.

தனது அடுத்த படம், இந்திப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது, இந்த வயதிலும் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போதுள்ள உணர்வு, தயக்கம்… பால் தாக்கரேயை கடவுள் என்று சொன்னதன் பின்னணி… இப்படி பல விஷயங்களில் மனம் திறந்த பதில்களைக் கூறியுள்ளார் ரஜினி, வழக்கம்போல!

ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த பேட்டியின் முழு தமிழ் வடிவம்…

‘நீங்கள் மும்பையிலிருந்து வருகிறீர்களா…? ஒரு கனிவான விசாரணைக்குப் பிறகு ‘கடவுளின்’ வாசல் திறக்கிறது! வெள்ளை வேட்டி சட்டையில் பணியாளர் வருகிறார். தட்டில் ஆவி பறக்கும் பில்டர் காபி / குளிர்ந்த மோர். ப்ளூ ஜுர பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ள லதா நம்மை வரவேற்கிறார்.

சில நிமிடங்களில் அந்த வீட்டின் செல்ல டால்மேஷன் ‘நந்தா’ பின்தொடர மரப் படிகளில் ரஜினியைச் சந்திக்கப் புறப்படுகிறோம்… வெள்ளை வெளேரென்ற பெரிய ஹாலின் சுவரை நிறைத்துக் கொண்டு சாய் பாபா படம்.

ரஜினி… திரையில் அதிரடி நாயகன்… நிஜத்தில் அதற்கு நேர்மாறான சுபாவம்… கையில் இப்போதும் குரு ராகவேந்திரர் படம் பொறித்த கடிகாரம்.

முழுசாகப் பதினைந்து ஆண்டுகளாகின்றன, ரஜினி இந்திப் படவுலகை புறக்கணித்து, இணையில்லாத நாயகனாக சென்னையில் செட்டிலாகி. இடையில் அவரது ரசிகர்களுக்கு அவர் கிட்டத்தட்ட கடவுளாகவே மாறிவிட்டார். அதன் எதிரொலி, மும்பையின் மட்டுங்காவிலும் எந்திரன் ரிலீஸின் போது ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்… சிறப்புப் பூஜைகள்!

இதை (பாலாபிஷேகம்) எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரஜினி இதை சீரியஸாகப் பார்க்கவில்லை. ‘விடுங்க… இது அவங்களோட அன்பு., பாசம்!’ என்கிறார் சுருக்கமாக.

ரஜினிகாந்த் ஏன் இந்தளவு மாறிப் போனார்? அடிக்கடி பேட்டி கூட கொடுக்க முடியாத அளவுக்கு?

நோ நோ… நான் மாறவில்லை. அதே ரஜினிதான். இப்பல்லாம் நான் யாருக்கும் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஏன்னா பேப்பர், நியூஸ் சேனல்ஸ் எல்லாரும் எக்ஸ்க்ளூஸிவா பேட்டி வேணும்னு கேட்கிறார்கள். ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்குக் கொடுக்கலேன்னா மத்தவங்க தப்பா நினைப்பாங்க. இதைவிட, எல்லாருக்குமே நோ சொல்லிட்டா பிரச்சினை இல்ல பாருங்க.. மத்தபடி மீடியா இன்னிக்கு ரொம்ப பவர்புல்லாயிடுச்சி…

நான்தான் பல இசை வெளியீட்டு விழாக்களுக்கு, ட்ரைலர் வெளியீடுகளுக்குப் போறேனே…

எந்திரன் / ரோபோ பிரமாண்ட வெற்றி உங்களை ரொம்ப ரிலாக்ஸாக்கிடுச்சா..?

ஒ யெஸ்… ஒரு மாநில மொழிப் படத்தில் முதல் முறையா இவ்வளவு பெரிய முதலீடு செஞ்சிருக்காங்க.. இது தமாஷ் இல்ல. கலாநிதி மாறன் தைரியத்துக்கு பாராட்டுக்கள். அவர்  இந்தக் கதையை நம்பினார். எந்தத் தப்பும் நடக்கலை.. அது ஒரு பெரிய பொறுப்பு… கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா நடந்தது.

இந்தப் படத்துக்காக நீங்கள் ஆரம்பத்தில் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று கூறப்பட்டதே…?

சம்பளத்தை அப்புறமா கொடுங்கன்னு நான்தான் அவங்ககிட்ட சொன்னேன்… அப்புறமா நான் வாங்கிக்கிட்டேன் (சிரிப்பு). எனக்கு இப்போ பணம் வேணாம்னு அவங்ககிட்ட முதல்லயே சொல்லிட்டேன். எனக்கு தேவைன்னா நான் நிச்சயம் கேட்டு வாங்கிக்குவேன். அப்படி ஒரு தேவை இல்லாத பட்சத்தில் எதுக்கு சும்மா… ஏற்கெனவே நிறைய செலவு செய்திருக்காங்க படத்துக்காக. கலாநிதி மாறன் என்னோட நல்ல நண்பரும் கூட.

படம் தாயாராகும் போது நீங்க நயா பைசா வாங்கறதில்லைன்னும், அப்புறமா படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கிறதாவும் சொல்றாங்களே…

உண்மைதான்…

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகராக உங்களை மாற்றியது எது?

(சிரிக்கிறார்…)

நான் சொல்றது சரிதானா…?

மத்த நடிகர்கள் எவ்வளவு வாங்குறாங்கன்னு எனக்குத் தெரியல! (சிரிக்கிறார்.. அதே நேரம் பண விவகாரங்களில் முன்பு இருந்த தனது நி்லைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவுமில்லை)

முன்பு ஒருமுறை, நான் நடினாகாமலிருந்திருந்தால், பணத்துக்காக கடத்தல்காரனாக மாறியிருப்பேன் என்றீர்களே… நினைவிருக்கிறதா?

ஆமாம்… உண்மைதான்…  நடிக்க வராமலிருந்திருந்தால் நான்  ஒரு தாதாவாகப் போயிருப்பேன். ஆனால் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டேன். தேவையான அளவு பணம் இருக்கு.

அப்புறம், ரிலாக்ஸ் பண்ணிக்க கண்ணாடி முன்னால உட்கார்ந்து…

மெழுகுவர்த்தி, கண்ணாடி, இசை…. (எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒரேயொரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், கர்நாடக இசை மெலிதாக ஒலிக்க, கையில் விஸ்கியுடன் கண்ணாடி முன் அமர்ந்து கொள்வது ரஜினி வழக்கம்…). அதான் சரி. என்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளும் வழி அதான் இப்பவும். இரவு 9 மணிக்கு மேல் நான் யாரையும் சந்திக்கிறதும் இல்ல…

எந்திரனுக்காக 2 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைத்தீர்கள்…

2 வருஷம்,  10 மாசம்.. கிட்டத்தட்ட 3 வருஷம்…. ரொம்ப கஷ்டம்!

எந்திரன் ரிலீசுக்கப்புறம் இமயமலை போயிட்டீங்க?

அது.. ஒவ்வொரு பட ரிலீசுக்குப் பிறகும் நான் இமயமலைக்குப் போயிடுவேன்… தனியா, யார் துணையும் இல்லாம.

அங்கே கூட்டம் கூடிடாதா?

இல்லே, நான் ரொம்ப உள்ள இருக்கிற இமயமலை கிராமங்களுக்குப் போவேன். அங்கே இருப்பதே ஒரு தியானம் மாதிரிதான். அந்த கங்கை, புனிதமான மலை, அதனோட அழகு, அங்குள்ள கள்ளங்கபடமற்ற மனிதர்கள்… நான் அங்கே பல முறை போயிருக்கேன்.. 15 வருஷமா. 1995-ல் போக ஆரம்பிச்சேன்.

ஒவ்வொரு வருஷமும் நேபாள் போறதாவும்… அங்கே பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதைத் தவிர்ப்பீர்கள்னும் சொல்லியிருக்கீங்க?

இப்ப இல்ல… கூட்டம் கூடி தொந்தரவு பண்றாங்க. அங்க உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுது…

அதுதான் உண்மை. அதைப் புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி. என்னதான் இணையதளங்களில் அவரைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட ஜோக்குகள் வந்தாலும்… இந்த ஜோக்குகளை ரஜினி படித்திருக்கிறாரா?

யெஸ்… எனக்குத் தெரியும்… ரொம்ப தமாஷா இருக்கு…

அதைப் படிச்சப்போ எப்படி உணர்ந்தீர்கள்…?

அவை வெறும் ஜோக்ஸ்தானேப்பா…. (சிரிக்கிறார்). அவங்களோட கற்பனையைப் படிச்சிட்டு சிரிச்சேன். எப்படி அவங்களா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது… இன்னிக்கு இருக்கிற இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப்!

மகன் இல்லையேன்னு நீங்க எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா?

நோ நோ.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், கடவுள் ஆசீர்வாதத்தால. இன்னிக்கு 21-ம் நூற்றாண்டில இருக்கோம். ஆண் பெண் என்பதெல்லாம் ஒண்ணுமேல்ல இன்னிக்கு. என்னோட ரெண்டு பேரன்கள் யாத்ரா, லிங்காவைப் பாருங்க.. (பேரன்களுடன் ரஜினி இருக்கும் ஃபிரேம் செய்து மாட்டப்பட்ட படத்தைக் காட்டுகிறார்!)

நீங்க நல்ல தாத்தாவா…?

யா.. வெரி லவ்விங்….

மத்த எந்த நட்சத்திரமும் செய்யாததை நீங்க செய்றீங்க… ஒரு குர்த்தா, டை கூட அடிக்காம, இதே வழுக்கைத் தலையோடவே வெளியில வர்றீங்க. உங்க ரசிகர்கள் இதை சரியா எடுத்துக்கிறாங்களா..?

ஸ்க்ரீன்ல நான் எப்படியிருக்கேன்றதுதான் அவங்களுக்கு முக்கியம். அதுக்குதான் அவங்க பணம் செலவு பண்ணி பாக்கறாங்க. அவங்களுக்கு தங்களோட ஹீரோ பக்கா ஹீரோவா இருக்கணும். வெளியில எப்படி இருந்தாலும் கவலைப்பட மாட்டாங்க. மக்கள் புத்திசாலிகள். அவங்களுக்கு எல்லாம் தெரியும். எதுக்கு தேவையில்லாம நம்மை நாமே சங்கடப்படுத்திக்கணும் (நிஜத்திலும் மேக்கப், இமேஜை காப்பாத்தறதுக்காக!)

நீங்க நீங்களாவே இருக்கிறதை அவங்க பாராட்டறாங்க இல்லையா…

அது இயல்புதானே… ஆனா, அதே சினிமாவுல இப்படி வந்தா… அவங்க விரும்பமாட்டாங்க. நிஜத்துல ஓகே. சினிமாவுல அவங்களுக்கு ஹீரோதான் தேவை.

இந்த ஹீரோ, பார்வையாளர்கள் விரும்பறதை தர்றார்… காதலிக்கிற, சண்டையில் தூள்கிளப்புகிற துடிப்பான ஆக்ஷன் ரஜினி… அவரால முடியாததே இல்ல. ஆச்சர்யம் என்னன்னா… இவை எல்லாத்துக்கும் அவர் பக்காவா பொருந்தறார்…

நான் யோகா… எக்ஸர்ஸைஸ் பண்றேன். இதான் என் மூலதனம். ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு இந்த மூலதனம் ரொம்ப முக்கியம். ஆனா மனச ஃபிட்டா வச்சிக்க நல்ல எழுத்தாளர்கள், இயக்குநர்கள் இருக்காங்க…

வயதாகிறதே என்ற அழுத்தத்தை உணர்கிறீர்களா… ரோபோவில் நீங்கள் எல்லாம் செய்தீர்கள்… ஒரு இளம் நாயகியுடன் காதல் காட்சிகளில் நடித்தீர்கள்…

மனம்விட்டு சிரிக்கிறார்… சில நேரங்கள்ல சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, டான்ஸ் பண்ணும்போது வயசான ஃபீல் வரும். வயசாகிறது நிஜம்தானே… ஆனா டெக்னீஷியன்கள், டைரக்டர்களுக்கும் தெரியும். அவங்க மேனேஜ் பண்ணிடறாங்க. காதல் காட்சிகள்ல நடிக்கும்போது எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு. நடிப்புதானேன்னு சொன்னாலும்.. கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு!

கண்ணியமா இருக்க வேண்டும் என்பதில் உறுதியா இருக்கீங்க..?

அதுல ரொம்ப ரொம்ப உறுதியா கவனமா இருக்கணும்..

ரோபோவுக்கு அப்புறம் என்ன?

ஒரு அனிமேஷன் படம்.. ‘ஹரா’ன்னு தலைப்பு. ஒரு பாதி அனிமேஷன்… பாதி லைவ். அவதார் மாதிரி. ஆனா முழுசா ஒரு ரஜினிகாந்த் படம் பத்தி இன்னும் முடிவெடுக்கல..

யாஷ் சோப்ரா உங்களை தூம் 3 படத்துக்குக் கேட்டதா சொல்றாங்களே..

“அது முழுக்க முழுக்க வதந்திதான். என்னை அவங்க அப்ரோச் பண்ணல. எனிவே… ஹரா முடிஞ்ச பிறகு 6 மாசமாவது எனக்கு இடைவெளி தேவை. எனக்குப் பொருத்தமான நல்ல கேரக்டர், ரோல் கிடைச்சா… நல்ல தயாரிப்பாளர் – இயக்குநர்கள் அமைந்தால், நிச்சயம் அடுத்த படம் பண்ணுவேன். இல்லன்னா போதும்… இப்ப எனக்கு 61 வயசு!”

அமிதாப் இப்பவும் நடிக்கிறாரே…

“அவர்தான் எனக்கு முன்னுதாரணம்… ஆக்சுவலா.. திலிப்குமார்தான் எங்களுக்கெல்லாம் மையப் புள்ளி. அமித்ஜி, நான், ஷாரூக், அமீருக்கெல்லாம் திலீப் குமார்தான் இன்ஸ்பிரேஷன்!”

ரஜினிக்கு இப்போதும் மும்பை காற்று மீது அலாதியான காதல் இருக்கிறது. அதை கொஞ்சம் இழந்துவிட்டதையும் உணர்கிறார். இதை அவர் இப்படிச் சொல்கிறார்…

“அமிதாப் போன்றவர்களோடு நெருக்கமாக பழகி பேசும் வாய்ப்பு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்.. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராஃப்தார், ஹம்னு மூன்று படங்கள் பண்ணோம். சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் மூணுமே! சில நேரங்கள்ல மும்பைக்கு போய் நண்பர்களைப் பார்க்கணும்னு தோணும்… அங்க என பிரண்ட்ஸ் நிறைய… சுபாஷ் கய், சன்னி தியோல் (குத்து), ரிஷி கபூர், ஜீத்தேந்திரா… இப்படி நிறைய…”

ஏன் இந்திப் படங்களில் நடிப்பதை விட்டுட்டீங்க…

“அதை நானாதான் நிறைய குறைச்சிக்கிட்டேன். இங்க ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்தான் பண்றேன்… ரெண்டு குதிரைல ஒரே நேரத்துல சவாரி பண்றது கஷ்டம். இந்திப் படங்களில் வேலை பாக்குறதுக்கும் தெற்கில் பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. போதுமான அளவு செஞ்சிட்டேன் அங்க. கிட்டத்தட்ட 25 – 27 படங்கள் பண்ணிட்டேன் இந்தில. கிட்டத்தட்ட 10 வருஷம் வொர்க் பண்ணியிருக்கேன் அங்க. அந்த வாழ்க்கையை அனுபவிச்சேன்…”

இங்கே சென்னையில நீங்க கடவுள் மாதிரி அந்தஸ்துல இருக்கீங்க… ஆனா மும்பைல பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதை சங்கடமா தெரியலையா?

“ஓ.. நோ நோ நோ… உண்மையில, இந்தில நடிக்கும்போது ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்தேன். இங்கன்னா மொத்த சுமையும் என் தோல்லதான். ஆனா அஹ்க அதை பங்கு போட்டுக்க முடியும்…அதுமட்டுமல்ல… என்ன மாதிரி மனிதர்கள்… தர்மேந்திரா, வினோத் கண்ணா, அமிதாப்… இவங்களோடெல்லாம் சேர்ந்து பெரிய, பல கோடி பட்ஜெட்ல படம் பண்ணியிருக்கோம். பல நல்ல லொக்கேஷன், நல்ல நண்பர்களைப் பாத்திருக்கேன். அந்த வாழ்க்கையை நான் அனுபவிச்சேன்…”

கடிகாரத்துல உங்க குருவோட படம் இருக்கு…

“ஆமா..  எப்பவுமே நான் ரொம்ப ஸ்பிரிச்சுவல்…”

தொப்பையில்ல… கூடுதல் சதையில்ல.. எப்படி இவ்வளவு பிட்டா இருக்கீங்க… ஆச்சரியமா இருக்கு!

“அடிப்படையில என் உடம்புவாகு அப்படி. சி்ன்ன உடம்பு. கடவுள் ஆசீர்வாதத்துல, என்னோட பெற்றோர் கொடுத்த மிகப் பெரிய சொத்து இந்த உடம்பு. பிபி இல்ல, சுகர் கிடையாது, எந்த மரபு வழி நோயும் இல்லே… சின்ன உடம்புதான், ஆனா இறுக்கமான சருமம்… முக்கியமா பழக்கம் சரியா இருக்கணும்.. உடம்பை அக்கறையா பாத்துக்கறது முக்கியம்.”

ரஜினி என்ன ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுவார்… எந்த நட்சத்திரல் பிறந்தார் இத்தனை பெரிய நட்சத்திரமாய் ஜொலிக்கன்னு மக்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் இருக்கு…

சிரிக்கிறார்…

“நான் ரொம்ப லக்கி. 100 சதவீதம் ஆசீர்வதிக்கப்பட்டவன். இல்லன்னா இவ்ளோ பெரிய பெயர் கிடைத்திருக்குமா… எல்லாரும்தான் கடுமையா வேலை செய்றாங்க. எல்லாருக்கும்தான் வாய்ப்பு கிடைக்குது. கடவுள் எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார்… அதை நான் சரியா பன்படுத்திக்கிட்டேன். கடுமையா உழைச்சேன். கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்…”

மக்கள் உங்களை கடவுளாகவே பார்க்கிறார்கள்… அவர்களின் எதிர்ப்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால் உங்களுக்கு அழுத்தம் அதிகமாக இல்லையா…

நேச்சுரல்லி… அவங்க எதிர்ப்பார்ப்பு அதிகம்தான். படத்துக்குப் படம், அடுத்து வித்தியாசமா என்னன்னு.. அந்த பொறுப்புதான் பெரிய அழுத்தம்.. அடுத்து என்ன பண்றது… எப்படி பெரிசா பண்றது?

அந்தப் படம் வித்தியாசமாவும் இருக்கணும்… பொழுதுபோக்கா இருக்கணும்… ரொம்ப உபதேசம் பண்ற மாதிரி, ரொம்ப ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கக் கூடாது. அவார்ட் படம் மாதி்ரி இருக்கக் கூடாது. ஆனா நல்ல தரமான பொழுதுபோக்குப் படமா இருக்கணும். அதுக்காக ரொம்ப சீப்பா இருக்கக் கூடாது. ரோபோ நல்ல பொழுதுபோக்குப் படம்… வித்தியாசமான பரிமாணம்…

ரோபோவுல ஷாரூக்கான் நடிக்கவிருந்தாரே… அப்புறம்தான் உங்ககிட்ட வந்ததில்லையா? இதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
(வர்த்தக ரீதியில் உச்சத்திலிருக்கும் ரஜினிக்கு யாருடனும் எந்த ஈகோவும் இல்லை. எதையும்  ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறார் என்பது அவரது பதிலில் தெரிந்தது)

“இந்தக் கதை முதலில் கமலுக்குப் போனது. ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து பூஜை கூடப் போட்டார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சினை என்று நினைக்கிறேன். படம் ட்ராப் ஆகிவிட்டது. அப்புறம் ஷாரூக்கிடம் போனது. பட்ஜெட் பிரச்சினையாகிவிட்டது அங்கே. அதனால் அவர்கள் செய்யல…”

உங்கள் சிவாஜியும் நன்றாக போனதே…

“ஆமா, முதல் முறையா ரூ 75 முதல் 80 கோடி வரை ஒரு மாநில மொழிப் படத்துக்கு செலவழித்து, அதில் ரூ 110 முதல் 120 கோடி வரை எடுத்தாங்க. அது ரொம்ப உற்சாகம் தந்தது… மார்க்கெட்டை விரிவுபடுத்துச்சி…”

ரோபோ படம் கமல், ஷாரூக்கானிடம் முதலில் போய்விட்டு வந்ததே என்ற ஈகோ உங்களுக்கு இல்லையா?

“Daane daane pe likha hota hai khaane wale ka naam! (யார் யாருக்கு என்ன எழுதியிருக்கோ அதான் கிடைக்கும்!).

ஷங்கரை எனக்குத் தெரியும். அவர் திறமைகள் தெரியும். அதனாலதான் ஒப்புக்கிட்டேன். வேற யாராவது வந்து ரூ 200 கோடில படம் எடுக்கறதா சொல்லியிருந்தாலும் நான் தொட்டிருக்கக் கூட மாட்டேன். ஷங்கர் சரியா செய்வாரு… நல்ல படம் தருவார்னு எனக்குத் தெரியும். ஹாலிவுட்ல வந்து கேட்டிருந்தா கூட நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். சிவாஜில வேலை செஞ்சதுக்கப்புறம் அவர் பென்டாஸ்டிக் டைரக்டர்னு தெரிஞ்சிக்கிட்டேன்!”

டுவில் குசேலன் சரியா போகலை இல்ல..?

“அது ஒரு நாலைஞ்சு நாள் வேல… கெஸ்ட் ரோல்தான் பண்ணேன்…”

ஒரு படம் சரியா போகலன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்கல்ல..?

“டெபனிட்லி… நான் ரொம்ப கஷ்டமா உணர்வேன். பல பேருடைய பணம், நம்பிக்கை… அது தோற்றால் என்னை ரொம்பவே பாதிக்கும். அதுல எனக்கும் பொறுப்பிருப்பதா உணர்வேன். காரணம் மக்கள், ரசிகர்கள் எல்லாரும் இந்த ரஜினி மீதும் வைக்கும் நம்பிக்கை தோற்கும்போது ரொம்பவே பாதிப்பு ஏற்படும்….”

எந்திரன் / ரோபோ வெற்றியை எப்படி கொண்டாடினீங்க?

“ரொம்ப பிஸியா இருந்துட்டேன்… சௌந்தர்யா கல்யாணம்… பெரிய நிகழ்ச்சி… அப்புறம் அவங்க தலை தீபாவளி. இப்ப ஹராவில கவனம் செலுத்தனும்…”

இன்னிக்கு ரூ 7-8 கோடில எடுக்கற படத்துக்குக் கூட பெரிய பப்ளிசிட்டி பண்றாங்க. ஆனா ரூ 130 கோடிக்கு மேல பட்ஜெட்ல எடுக்கப்பட்ட ரோபோவுக்கு வெறும் 1 கோடிதான் பப்ளிசிட்டிக்கு செலவு பண்ணியிருக்காங்க. நம்ப முடியல… அதான் ரஜினியோ பவர். படத்தில் அவர் இருந்தா போதும். அங்கங்க போய் பப்ளிசிட்டி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்காக மக்கள் வந்து பார்க்கிறார்கள். படத்துக்காக நடிகர்கள் விளம்பரங்களில் தோன்றுவதை ரஜினி விமர்சித்ததாக சொல்லப்படுகிறது. எதுக்கு சேல்ஸ்மேன் மாதிரி இந்த வேலை பார்க்க வேண்டும் அவர் சொன்னதாக கூறப்படுகிறது. இதை ரஜினியிடம் கேட்டபோது, அவர் அதை பலமாக மறுத்தார். அப்படி ஒருபோதும் தான் சொன்னதில்லை என்றார்.

“அப்படி ஒருபோதும் நான் சொன்னதில்லை. நான் ஏன் அப்படிச் சொல்லப் போகிறேன்? அது அவரவர் தனிப்பட்ட விஷயம். அவங்க நல்லதுக்காகத்தான் படத்தை ப்ரமோட் பண்றாங்க. அதை விமர்சிக்க தேவை இல்லை. இந்த மாதிரி நான் எப்போதும் சொன்னதில்லை. 100 பர்சென்ட் உண்மை இது. சொல்லப் போனா.. ஒரு நடிகர் தனது படத்தை முடிந்தவரை ப்ரமோட் பண்ணனும். நான் என் மகள் கல்யாணத்துல பிஸியா இருந்துட்டேன். ஆனா நான் கூட ஆடியோ ரிலீசுக்காக போனேன். என் பாணில எந்திரனை ப்ரமோட் பண்ணேன். அது ரொம்ப முக்கியம்.  என்ன நடக்குதுன்னு மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியமில்லையா… நான் ஒருபோதும் விளம்பரத்துக்கு எதிரா சொன்னதில்லை. நான் யார் அப்படிச் சொல்ல…”

சென்னை போலீசாருக்கு தீபாவளிப் பரிசு கொடுத்ததா சொன்னாங்க…?

“ஆமா… ஒவ்வொரு வருஷமும் ஸ்வீட்ஸ் தருவேன்…”

புடவை போன்றவை அடங்கிய பார்சல் கொடுத்ததாக சொன்னார்கள்…?

“நோ நோ… அது அரசு அலுவலருக்கு லஞ்சம் கொடுத்த மாதிரியாகிடும். ஸ்வீட்ஸ் மட்டும்தான் கொடுத்தேன். இந்த மாதிரி மிகையா சில நேரங்கள்ல செய்திகள் வருது. நான் வெளிப்படையா ஏதாவது பேசணும்னு எதிர்ப்பார்க்கிறாங்க (சிரிக்கிறார்).”

பேச்சு மீண்டும் மும்பை பக்கம் திரும்புகிறது..

பாரதி எஸ் பிரதான்

“மும்பை ஒரு மயக்கும் நகரம்… நிஜமாகவே மிக அருமையான நகரம். பாலாசாஹேப்…” என்கிறார்…

மும்பையில் பாலாசாஹேப் தாக்கரேவைச் சந்தித்தீர்களே…?

“ஆமா… சந்தித்தேன்..”

அவர் கடவுள் மாதிரி என்றீர்கள்?

“ஆமா ஆமா.. தன்னுடைய மூத்த மகனைப் போல என்மீது அன்பு செலுத்துபவர் அவர்… இதற்கு முன்னும் அவரைச் சந்திச்சிருக்கேன்…”

பேட்டி முடிகிறது… டேப் நிறுத்தப்பட… அந்த சிங்கத்தை அதன் இருப்பிடத்தில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன், பெரிய வெள்ளை சோபாவில், அவருக்குப் பிடித்த கறுப்பு உடையில்.

ரஜினி ஜோக்குகள் அடங்கிய பிரிண்ட் அவுட் மீது ஒரு ஆட்டோகிராப் போட்டுத் தருகிறார். கீழே இறங்கி வந்து வழியனுப்புகிறார்… “ஆமா.. ஒண்ணுமே சாப்பிடலையே.. காபி, மோர்… வேற ஏதாவது..?” என்கிறார்.

எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது, ரஜினி!

-Courtesy: மிட்டே, தி பிலிம்ஸ்ட்ரீட் ஜர்னல்.

குறிப்பு: இந்த பேட்டியை பாரதி எஸ் பிரதானின் அனுமதியுடன் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். ஒரு முழு இரவு இந்த மொழிபெயர்ப்புக்காக செலவாகிவிட்டது. எடுத்தாளும் நண்பர்கள் ‘என்வழி’யை மறக்காதீங்க!!

குறிப்பு 2: பாரதி எஸ் பிரதான் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா பத்திரிகையாளராக உள்ளார். அடுத்து ரஜினியின் நண்பர் சத்ருகன் சின்ஹா வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறார்.
25 thoughts on “இன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப்! – ரஜினி முழு பேட்டி தமிழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *