BREAKING NEWS
Search

இன்று விடுதலையாகிறார் சீமான்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டது செல்லாது! – உயர்நீதிமன்றம்

சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமானை கைதி செய்தது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததால், சீமான் இன்று விடுதலையாகிறார்.

திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் இயக்க தலைவருமான சீமான், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10-ந் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கைக்கு எதிராக சில கருத்துகளை சீமான் பேசினார்.

இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த அரசு உத்தரவை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீண்டநாட்களாக நிலுவையில் இருந்தது.

இந்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வக்கீல் சந்திரசேகரன் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுவதாகும், 11 முறை ஒத்திப் போடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். இந்த நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லாததால் வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதியிடம் புகார் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி வாதிட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

கைது செல்லாது…

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், ‘சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது’ என்று வாதிட்டார்.

உத்தரவு ரத்து

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

“போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரயோகிக்க முடியாது. எனவே கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த கைது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது…”

வரவேற்பு

உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் உணர்வாளர்களை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையாகும் சீமானை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *