BREAKING NEWS
Search

இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை! – சொல்கிறார் கேபி

‘இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை!’ – சொல்கிறார் கேபி

கொழும்பு: உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்ப வில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்கி கொண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், என கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு விடுதலைப் புலிகள் தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் கேபி. ஆனால் மலேசியாவில் வைத்து அவரை இலங்கை உளவுத்துறையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கைது செய்யப்பட்டதே ஒரு நாடகம்தான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று கே.பத்மநாதனை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு உள்ளது. அதில் செய்தியாளர் கேட்ட கேள்விகளும், பத்மநாதன் அளித்த பதில்களும்:

கேள்வி: ராஜபக்சேயின் குடும்ப ஆட்சியில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்களிடம் இருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சேயின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர்கள். இதன் காரணமாகவே உங்களை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது. 2003-ம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக் கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை.

கேள்வி: கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்கள்?

பதில்:- பல கப்பல்கள் இறுதி யுத்தத்தின்போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

கேள்வி: கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட வில்லை. உங்களுக்கு அதுபற்றி தெரிந்திருக்கும்தானே?

பதில்: இரண்டு, மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சில வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.

கேள்வி: உங்களை எங்கே பிடித்தார்கள்?

பதில்: மலேசியாவில்.

கேள்வி: உங்களை யார் பிடித்தது?

பதில்: மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.

கேள்வி: என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்? தற்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்குத் தெரியாது!

கேள்வி: உங்களை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?

பதில்: ஆம். நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவ வேண்டும். கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி: யுத்தத்தின் இறுதிக் காலத்தில் உங்களது பணி என்னவாக இருந்தது?

பதில்: நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உள்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை.

கேள்வி: மலேசியாவில் இருந்து இலங்கை வந்ததன் பின்னர் மட்டக்களப்புக்கு போயிருக்கிறீர்களா?

பதில்: இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்தபோது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.

கேள்வி: உங்களுடைய பழைய யுத்த களத்திற்கு சென்றபோது எவ்வாறு கவலைப்பட்டீகள்?

பதில்: முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

கேள்வி: புலம்பெயர்ந்த வர்களின் குழுவுடன் நீங்கள் வன்னிக்கு சென்றீர்களா?

பதில்: வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்ந்தோம்.

கேள்வி: யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தில் அழிந்து போன சொத்துக்கள் குறித்து உணர்கிறீர்களா?

பதில்: நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கின்றோம்.

கேள்வி: சர்வதேசத்தில் விடுதலைப்புலிகளின் பலம் என்ன?

பதில்: சிலர் உண்மையை பேசுகிறார்கள். பலர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகின்றனர். நான் முகாம்களுக்கு சென்ற போது அங்கு உள்ள இளைஞர்களும், பெண்களும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

கேள்வி: தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்ப வில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்கி கொண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கேள்வி: அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?

பதில்: இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
4 thoughts on “இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை! – சொல்கிறார் கேபி

  1. karthik

    நீங்கள் அப்படி நம்பினால் தான் நல்லது… சிங்களர் கைபிடியில் உள்ளவரை.

  2. PROMISE

    பதுங்கி பாய்வது தான் புலியின் உயர் குணம் ,,, புலிகள் பாயும் நரிகள் சாகும்

  3. sakthivel

    இதை மகிந்தாவின் கோவணத்திட்க்குள் இருந்து சொல்லக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *