BREAKING NEWS
Search

இனி அரசியல் ராஜதந்திரப் போராட்டம் மட்டுமே! – கேபி

இனி அரசியல் ராஜதந்திரப் போராட்டம் மட்டுமே! – கேபி

விடுதலைப் புலிகள் இனி ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்டத்தில் இறங்கமாட்டார்கள் என்றும், இனி அரசியல் spathmanathanராஜதந்திர நடவடிக்காகள் மூலமே தமிழர் உரிமையை மீட்டெடுப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் நேற்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளது.

மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குதல்கள், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் உள் / வெளி சூழல்கள் போன்றவற்றினை கவனத்தில் கொண்டும் இம் முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளது.

இதன் அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்த கட்டப் பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளினூடே தொடரும்.

நாம் நமது புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையினை அறிவித்த பின்னர் என்னிடம் உரையாடிய சிலர் என்னிடம் கேட்ட முக்கியமான இரு கேள்விகளை ஆராய்வது இந்த வாரப் பக்கங்களுக்கு முக்கியமாகப்படுகிறது.

ஆயுதப் போராட்டத்தின் நிலை என்ன?

அரசியல் இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளை கெரில்லாப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாதா?

pooralikal-158-copy

அது சிறிலங்கா அரசுக்கு கூடுதல் அழுத்தத்ததைக் கொடுத்து, அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பக்க பலமாக அமையும் அல்லவா?

-இவையே அந்தக் கேள்விகள்.

முதலில், நான் ஒரு விடயத்தினைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிற்பாடு, அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணத்தினைத் தொடர்வது என்ற முடிவினை நான் மட்டும் தனித்து எடுக்கவில்லை. களத்தில் நிற்கும் தளபதிகள் மற்றும் தொடர்பில் இருந்த ஏனைய துறைசார் போராளிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதைய அனைத்துலக ஒழுங்கில் நாம் அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணிக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்.

நாம் ஒரு பேச்சுக்கு கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட முனைகிறோம் என வைத்துக் கொள்வோம்.

அதன் விளைவுகள் எத்தகையவையாக இருக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த தாக்குதல் முனைப்புக்களை சிறிலங்கா அரசு தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தவே பயன்படுத்தும்.

இதன் உடனடித் தாக்கம் இன்று தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பில் பாதகமாகப் பிரதிபலிக்கும்.

அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக சிங்கள அரசினால் தடுத்து வைக்கபட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்குட்பட்டும் வருகின்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகும்.

மக்கள் தத்தமது இடங்களில் இயன்றளவு விரைவாக குடியமர்த்தப்படுவதற்குரிய அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுப்பது பலவீனமடைந்து, மக்களை நீண்டநாட்களுக்கு தடுப்பு முகாம்களுக்கள் முடக்குவதற்கு வழிகோலும்.

இது ஏற்கனவே மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும். இந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்புவதற்கு ஆதாரமாய் நிற்கவேண்டியது தமிழீழ தேசத்தின் கடமை.

இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாக குடியமர்வதற்கு நாம் எந்த வகையிலும் இடையுறாக இருக்க முடியாது.

மேலும், மக்களை தடுப்பு முகாம்களுக்குள் முடக்கியபடி வன்னிப்பெரு நிலத்தின் குடிசனப்பரம்பலை குடியேற்றங்கள் மூலமும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமும் தமிழ்ப் பெரும்பான்மையற்ற முறையில் மாற்றியமைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமும் துணை புரிவதாய் அமைந்து விடும்.

தமிழர் பிரதேசங்களை மிக நீண்ட நாட்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பக்குள் வைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமே வாய்ப்புக்களை வழங்குவதாய் அமைந்து விடும்.

அனைத்துலக அரங்கில் நமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக பரப்புரைகளையும் இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு நமது விடுதலைப்போராட்டக் கட்டமைப்புக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை இலகுவாக்கிவிடும்.

இவை மட்டுமன்றி, அரசு அல்லாத தரப்புக்களின் ஆயுதப்போர் பற்றிய இன்றைய உலக அணுகுமுறையினால் எம்மால் எவ்விதமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவோ அல்லது அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரானப் பிரயோகிக்கவோ முடியாமல் போகும்.

மாறாக, நாங்கள் இதுகாலவரை எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் நிகழ்த்திய ஆயுதம் தரித்த விடுதலைப் போர் ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் இருந்து அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுப்பதே சமகால உலக உறவுகள், அரசியல் – பொருளாதார நிலைப்பாடுகளின் வெளிச்சத்தில் வெற்றிக்கான வழித்தடமாக இருக்கும்.

அந்த அடித்தளங்கள் எவை?

எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போர் தமிழீழ மக்களிடையே வலுவான தேசிய எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய சுயநிர்ணய உரிமை, தாயகம் தேசியம் என்கின்ற அடிப்படை விடயங்களை முதன்மையான விடயங்களாக வலுவாக முன்னிறுத்தியுள்ளது. தாயகத்திலும், புலத்திலும் அரசு, இறைமை என்பன போன்ற விடயங்களில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசியவாத அரசின் செல்வாக்கிற்கு வெளியே தேசிய இனச்சிக்கலை கையாளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. உலக தமிழ்ச் சமூகம் மத்தியில் தமிழீழம் சார்ந்த ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்தியது. இவ்வாறு இந்த அடித்தளங்களை பட்டியலிடலாம்.

அனைத்திலும் மேலாக அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் விடுதலைப் போர் என்கின்ற தார்மீகம் எங்கள் அரசியல் நிலைப்பாட்டினை ஆதரமாக தாங்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றியே நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இங்கு போராட்ட இலக்கு மற்றும் போராட்ட வடிவம், இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான பார்வை முக்கியமானது. நமது போராட்ட இலக்கினை அடைந்து கொள்ள எத்தகைய போராட்ட வடிவம் கூடுதல் பயன் தருமோ அந்த வடிவங்களை நாம் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டும். இதையே நமது தலைவர் 1987 ஆம் ஆண்டில் போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய காலகட்டத்தில், போராட்ட இலக்கினை முன்நோக்கி நகர்த்துவததற்கு போராட்ட வடிவத்தினை மாற்றுவது தவிர்க்க முடியாதது.

நாம் மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது மிகவும் அவசிமானதாகும். இந்த அடிப்படையிலேயே போராட்ட வடிவமாற்றமும் முக்கியமானதாகும்.

சர்வதேச நெருக்கடிகள்…

நாம் முன்னர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியவாறு தானே அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தோம் என்ற கேள்வி சிலர் மத்தியில் இந்த தருணத்தில் எழலாம்.

உண்மைதான். ஆனால் முன்னர் இருந்த சூழலுடன் தற்போதைய சூழலை நாம் ஒப்பிட முடியாது. 1970-களில் ஒற்றைத் துப்பாக்கியுடன் நமது தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட நமது விடுதலை இயக்கம் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் தாண்டி, இமாலய சாதனைகள் புரிந்து வரலாற்றில் ஈட்டிய வெற்றிகள் ஊடாகவே நமக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் திறந்தன.

இருந்தும் அனைத்துலகத்தின் நலன்களும் நமது நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்காமையால் திறக்கப்பட்ட அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் பெரியளவில் வந்தடையவில்லை. இறுதியில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தை தன்வசப்படுத்தியவாறே போரை முன்னெடுத்தது.

நமக்கு திறக்கப்பட்டிருந்த அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் வந்தடையாமைக்கு அடிப்படையில் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

1. தெற்காசியாவிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்த கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது இலட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வரவேண்டும் என்பதிலும் அனைத்துலகம் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உலக ஆதரவினை திரட்டுவது சாத்திமற்றதாக இருந்தது.

நாம் தற்போது நமது தாயகச் சூழல் கருதியும் அனைத்துலக நிலைமைகளை மதிப்பீடு செய்தும் நமது விடுதலை இலட்சியத்தில் உறுதியாக நின்று கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றுகிறோம்.

இதன் ஊடாக உலக நலன்களுடன் நமது நலன்கள் முரண்படும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களில் ஒன்றினில் முரண்பாட்டைத் தவிர்க்கிறோம். உலகம் தற்போது ஏற்க மறுப்பதற்காக நமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தழிழ் மக்களின் விடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான நிலைமைகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களையும் கொண்டுவரும்.

இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்ளும் உலக சக்திகளின் புவிசார் அரசியல் தோல்வியினை அடையும் சூழலும் இந்த மாற்றங்களின் ஊடாக உருவாகும். அப்போது நமக்கான தமிழீழ தேசத்தை நாம் அமைத்துக் கொள்வதற்கான நிலைமைகளும் உருவாகும். இந்த நம்பிக்கையுடன் நமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பதும் இலகுவான ஒரு விடயம் அல்ல. பல சவால்களையும் எதிர்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது, என அவர் எழுதியுள்ளார்.
3 thoughts on “இனி அரசியல் ராஜதந்திரப் போராட்டம் மட்டுமே! – கேபி

 1. ss

  Vaiko, Seeman and Ramadoss – this message is for people like you only.. Try to be realistic. When LTTE understands reality, better you guys too understand..

 2. Sreethar

  ss

  I dont think u understood the reality….you can see..He didnt say surrender their arms.. the diplomatic way approach givs big pressure.. once world come to know the Stilankan government real cruel face on tamils they will support the arms to save those people…

 3. Manoharan

  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் ஒருமித்த குரல் கொடுத்தால் நிச்சயம் தமிழீழம் மலரும். ஆனால் அதற்க்கு மிகுந்த உழைப்பும்,ராஜதந்திரமும் வேண்டும். அதற்க்கும் மேல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான நல்ல தலைமை வேண்டும்.பிரபாகரன் போன்ற ஒருவர் வருவாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *