BREAKING NEWS
Search

இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு 2 தீபாவளி! – ஷங்கர்

இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு 2 தீபாவளி! – ஷங்கர்

ந்திரன் வெளியாகும் இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையப்போகிறது, என்றார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியது:

‘எந்திரன்’ ட்ரைலரில் சில ஹைலைட்டான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதைவிட பல மடங்கு காட்சிகள் படத்தில் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு சிம்பொனி, எலக்ட்ரானிக்ஸ், இந்தியன் ஸ்டைல் என மூன்று விதமாக இசையமைத்திருக்கிறார்.

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நாவல் எழுதுபவர்கள் காட்சியின் சூழ்நிலையை வார்த்தையில் வர்ணிப்பதைபோல அழகாக இந்த படத்தை தனது சவுண்டால் வர்ணித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ரஜினியை இதுவரை இல்லாத அளவுக்கு அழகாக காட்டியிருக்கிறார்.

ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் ஆர்ட் டைரக்டர் சாபுசிரில் இரு ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கொசு நடித்திருக்கிறது. அதற்கு எழுத்தாளர் சுஜாதா ‘ரங்குஸ்கி’ என்று பெயர் வைத்திருக்கிறார். சின்ன வயதில் அவரை அவரது நண்பர்கள் அப்படி அழைப்பார்களாம்.

ஒரு ஸ்கிரிப்ட் எழுதுகிற அளவுக்கு பா.விஜய் பாடலை எழுதிக் கொடுத்தார். அதுதான் ‘கிளிமஞ்சாரோ’ பாடல். ட்ரைலர் உருவாக்க, தனி ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுங்கள் அதை வைத்து நான் உருவாக்குகிறேன் என்று எடிட்டர் ஆண்டனி சொன்னார். அதன்படி பிரமாதமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

சந்தானமும் கருணாசும் காமெடி செய்திருக்கிறார்கள். கருணாஸ் இயக்குனரின் நடிகர். தனியாக வசனம் பேசாமல் இயக்குனர் சொல்கிற வசனத்தை மட்டும் பேசக் கூடியவர்.

ரஜினி சயின்டிஸ்ட் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். எந்திர மனிதனாகவும் நடித்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் இருக்கிறது. கடைசி 45 நிமிடம் கலக்கும் (மொட்ட பாஸ் போலவா!).

இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரண்டு தீபாவளி பண்டிகை. ஒன்று நவம்பரில் வரும் தீபாவளி. மற்றொன்று ரோபோவெளி. ‘எந்திரன்’ படத்துக்கு பிறகு ரஜினியின் பெயர்கூட எந்திரகாந்த் என்று மாறலாம்.

கலாநிதி மாறன் பெயரில் கலையும் இருக்கிறது நிதியும் இருக்கிறது. கலைக்காக நிதி அளிப்பவர் அவர். மலேசியா விழாவில் ஒளிபரப்பப்பட்ட உரையில் முதல்வர் கலைஞர் என்னை பற்றி சில வரிகள் சொல்லியிருந்தார். அதற்காக இந்த மேடையில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…,” என்றார்.

ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்த வைரமுத்து!

விழாவின் சிறப்புரையாக அமைந்தது கவிஞர் வைரமுத்துவின் பேச்சு.

ரஜினியின் பெருமை, புகழ் குறித்து அவர் பேசியது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ள வைத்தது.

அவர் பேசுகையில், “தமிழன் உலகமெல்லாம் சிதறிக் கிடக்கிறான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் களையெடுப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், நெசவாளிகள் என எல்லோருமே மாலை நேரத் தில் சந்தோஷத்துக்காக தியேட்டருக்கு வந்தார்கள்.

ஆனால், நவீனம் தமிழ் சினிமா ரசிகனை சிதறடித்துவிட்டது. இன்றைய குழந்தைகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இளைஞன் இணையத்துக்குள் மூழ்கி கிடக்கிறான். பெண்கள் சீரியலுக்குள் விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வரும் ஆற்றல் எந்திரனுக்கு இருக்கிறது.

‘அவதார்’, ‘டைட்டானிக்’, ‘கிளாடியேட்டர்’ போன்ற படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இங்கிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய படம் எந்திரன்.

ரஜினி பற்றி இணையத்தில் ஒரு செய்தி படித்தேன். அமிதாப்பச்சனும் ரஜினியும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு செல்கிறார்கள்.

அங்கு ரஜினியை பார்த்த ஓபாமா, ‘வாங்க ரஜினி, டீ சாப்பிடலாம்’ என்கிறார். இதைபார்த்ததும் அமிதாப்புக்கு அதிர்ச்சி. ஓபாமாவுக்கு கூட தெரிந்தவராக ரஜினி இருக்கிறாரே என்று.

அடுத்து வாடிகன் நகருக்கு போப்பை சந்திக்க செல்கிறார்கள். ரஜினியை பார்த்த போப், ‘ரஜினி மேடைக்கு வாருங்கள்’ என்கிறார். இதை கேட்டதும் அமிதாப் மயங்கி விழுந்து விடுகிறார்.

பிறகு அமிதாப்பிடம் ரஜினி கேட்கிறார். ‘ஏன் மயங்கி விழுந்தீர்கள்’ என்று.

‘போப்பிற்கு உன்னை தெரிந்திருக்கிறது என்பதற்காக மயங்கவில்லை. ரஜினியின் அருகில் வெள்ளை உடையுடன் ஒருவர் நிற்கிறாரே… அவர் யார் என்று ஒருவன் கேட்டான். அதனால்தான் மயங்கினேன்’ என்றாராம் அமிதாப்.

இது அதிக கற்பனையாக, மிகையாக கூட இருக்கலாம். ஆனால், தமிழன் சாதனையை அங்கே பதிவு செய்கிறான்.

ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, உற்சாகம். எந்திரனில் ரஜினி 100 அடி தாண்டுவார், அடுத்து 120 அடி பாய்வார்…” என்று பேசி முடித்த போது, ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது என்றால் அது சம்பிரதாய வார்த்தை!

ரஜினி ஏஜ் அல்ல… இமேஜ்! – கே.எஸ்.ரவிகுமார்

கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “எல்லோரையும் போல படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பார்கள்.

மணியோசை மலேசியாவிலேயே கேட்டுவிட்டது. ஹாலிவுட்டிலும் படம் இயக்க தகுதியான ஒரே ‘இந்தியன்’ ஷங்கர்தான்.

ரஜினியுடன் நான் வேலை செய்திருக்கிறேன். அப்போது ‘நான் இன்னும் ஒரு மூணு படம் பண்ணலாமா பாஸ்!’ என்பார். 3 படமல்ல 300 படங்கள் கூட அவர் நடிப்பார். 80 வயதிலும் டூயட் பாடும் நடிகராக இருப்பார். அதற்கு காரணம் அவர் ஏஜ் இல்லை. இமேஜ்…”, என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் பேசும் போது, ‘ஹரிதாஸ் 4 தீபாவளிகளைக் கடந்து ஓடியது. எந்திரன் படம் 5 தீபாவளிகளைக் கடந்து ஓடும்’, என்றார்.

“எந்திரன் ட்ரைலர் பார்த்த பிறகு எனக்கு பேச்சும் வரவில்லை, மூச்சும் வரவில்லை. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்”, என்றார் இயக்குநர் சேரன்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “ரஜினி ரசிகர்களை போலவே நானும் இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். டிரைய்லரை பார்த்து மிரண்டு விட்டேன். வழக்கமாக சினிமாவுக்கு 100 நாள் போஸ்ட் ஓட்டுவார்கள். ஆனால், இந்த படத்திற்கு 1000 நாள் போஸ்டர் ஓட்டுவார்கள். அந்த அளவிற்கு எந்திரன் மகத்தான வெற்றியை பெறுவான்”, என்றார்.

விழாவில், ரஜினி மனைவி லதா, சௌந்தர்யா, அஸ்வின், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் விஜயகுமார், சுந்தர்.சி, கரண், ஜெய், ஷாம், நகுலன், துஷ்யந்த், கிருஷ்ணா, இயக்குனர் தரணி, லிங்குசாமி, கிச்சா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், காஜா மைதின், எடிட்டர் மோகன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, அய்யப்பன், சிவஸ்ரீ சீனிவாசன், கே.முரளிதரன், முரளி நாராயணன், எடிட்டர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை கருணாஸ் தொகுத்து வழங்கினார்.

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு 2 தீபாவளி! – ஷங்கர்

 1. r.v.saravanan

  ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி,
  உற்சாகம்

  சரியான வார்த்தை

 2. Razini

  பிரின்ஸ் அவரு இருந்தாரு வீழா ச்டில்ஸ் ஒழுங்கா பாருங்க தெரியும்

 3. ramesh

  உலகை மயக்கவும் மடக்கவும் கடல் அலையால் மட்டும்தான் முடியும்……..

  மக்களின் மனதை மயக்க மகிழ்சிவிக்க “தலைவா உன் அலையால்” மட்டும்தான் முடியும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *