BREAKING NEWS
Search

இந்திய திரைப்பட விழா கொழும்பிலேயே நடக்கட்டும்…

இந்த ஒற்றுமையை ஆட்சியாளர்கள் குலைக்காமல் இருக்க வேண்டுமே!

ன்னை மீறி எங்கும் ஒற்றுமையோ சாதனை.. அட சண்டையோ கூட நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள் ஆட்சியாளர்கள். குறிப்பாக இன, மொழி உணர்வுகளைத் தலைத் தூக்காமல் முளையிலேயே நசுக்கிவிடுவதில் ஆட்சியாளர்கள் குறியாக இருப்பார்கள்.

மொழிப்போர் தியாகிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் கூட, பதவி நாற்காலியைப் பிடித்த பிறகு, ‘இறையாண்மை வேண்டும், மொழி வெறி கூடாது’ என்றெல்லாம் பேசுவதை இந்த 42 ஆண்டு திராவிட ஆட்சியில் பார்த்துப் பார்த்து சலித்தே போய்விட்டது!

கொழும்பில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விருது விழா விஷயத்தில் ஆரம்பம்தொட்டே, ஆட்சியாளர்கள் ராஜபக்சே அரசுக்கு பெரும் ஆதரவாக நின்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். இந்த விழாவுக்காக இலங்கை அரசு 9 மில்லியன் டாலர்களைச் செலவு செய்கிறது. இந்தப் பணம் கூட இந்திய அரசு வழங்கிய – அதாவது தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பணம் – உதவியின் ஒரு பகுதியே. இந்த விழாவின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வருமானம் 126 மில்லியன் டாலர்கள்.

எந்த அடிப்படையில் இந்த அளவு வருமானம் வருகிறது தெரியுமா? நமது சக இந்திய கலைஞர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன் போன்ற கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கப் போகிறார்கள் என்று பரப்பப்பட்ட பிரச்சாரங்களால்தான். இவர்களுக்காகவே பல விளம்பரதாரர்கள் கணிசமாக கொட்டித் தருகிறார்கள். அதிலும் பெரும்பாலானவை இந்திய வர்த்தக நிறுவனங்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது சாதாரண போர் அல்ல.. திட்டமிட்ட ஒரு இன அழிப்பு. நவீன வரலாற்றில் மனித சரித்திரம் காணாத பெரும் கொடூரம் அது. அந்த படுகொலையின் சாட்சிகள் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்துள்ளன. கேட்கக் கேட்க, பார்க்கப் பார்க்க மனம் பதறித் துடிக்கிறது.

‘எல்லாம் முடிஞ்சி போச்சே.. இனி எதற்கு திரும்பத் திரும்ப இதைப் பற்றியே பேச வேண்டும்?’ என்று பெரும்பான்மை இந்தியர்கள் கேட்பதைப் போலவே, சில தமிழர்களும் கேட்பதைக் காண முடிகிறது.

ஆம், எல்லாம் முடிந்துவிட்டது. உயிருள்ள ஜடமாக வாழப் பணிக்கப்பட்டுள்ளனர் ஈழத் தமிழர்கள். இதை அப்படியே ஒப்புக் கொண்டு அமைதியாக இருந்துவிடலாமா?

தமிழர்கள் உருவாக்கிய ஒரு தேசமே முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது… பிரச்சினையின் அடிப்படை உண்மையைப் பார்க்கமாட்டோம் என கண்களை மூடிக் கொண்ட சர்வதேசம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சப்பைக் கட்டோடு ஒரு தேசத்தையே அழிக்கத் துணைபோனதை மௌனமாக ஏற்க வேண்டுமா?

போராட்டம் புலிகளின் கையில் இருந்தவரை பயங்கரவாதம் என ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது போராட்டத்தையே மக்களின் கையில் ஒப்படைத்துவிட்டனர் புலிகள். துப்பாக்கிகளோ ஆயுதங்களோ அவர்களிடம் இல்லை.

ஆனால் முன்பைக் காட்டிலும் பெருமளவு உரிமைகள் பறிக்கப்பட்டதுடன், வாழ்விடங்களையும் இன அடையாளத்தையும் தொலைக்க வேண்டிய சூழலில் உள்ளனர் தமிழர்கள்… இப்போதும் உலகம் வெற்றுக் கதைகளைப் பேசி ராஜபக்சேக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதை உணர்வுள்ள சக தமிழன் பார்த்துக் கொண்டிருப்பது சரிதானா?

‘தமிழன் தன் இனத்துக்கு செய்யப்பட்ட கொடுமையை ஏற்றுக் கொண்டு ஒருபோதும் சும்மா இருக்கமாட்டான்’ என்பதை தொடர்ந்து செயலில் காட்ட வேண்டும்.  அந்த புறக்கணிப்பின் அவமானம் இலங்கை அரசுக்கு ஒவ்வொரு நாளும் சர்வதேச அரங்கில் தலைகுனிவையும், அவமானத்தையும் தந்துகொண்டே இருக்க வேண்டும். பொருளாதார, ராஜரீதியான இழப்புகள் தொடர வேண்டும்.

அதன் ஒருபடிதான் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்பது. அதில் ஓரளவு விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

அடுத்து ஐஃபா விழா. இந்த விழாவை தமிழ் சினிமா கலைஞர்கள் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் ஒட்டு மொத்த கலைஞர்களும் புறக்கணிக்க வேண்டும். இந்திய கலைஞர்கள் யாருமில்லாமல் இந்திய திரைப்பட விழாவை இலங்கை நடத்தப் போகிறதா? பார்க்கலாம்!

இந்த விஷயத்தில் நாம் முன்பே சொன்ன மாதிரி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ்க் கலைஞர்களே ஐஃபா விழா அமைப்பாளர்களுக்கு முதல் அடியை வலுவாகத் தந்தவர்கள் என்பதை எந்த நேரத்திலும் மறக்கக் கூடாது. தமிழ் உணர்வாளர்கள் நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டோர் இந்த பெரும் கலைஞர்களின் உணர்வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மற்ற தமிழ் கலைஞர்களும் ரஜினி, கமலின் வழியைப் பின்பற்றி புறக்கணிப்பை முன்பே தெரிவித்துவிட, இப்போது நடிகர் சங்கமே ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

இதன் அடுத்த நிலையாக, ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைவர் சீமானின் துணிச்சலான போராட்டம் மற்றும் கச்சிதமான வாதத்தைக் கேட்டு, அதிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு இந்த விழாவுக்கு செல்வதைக் கைவிட்டுள்ளார் அமிதாப். அது மட்டுமல்ல, அந்த விழாவின் தூதர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்டார். தன் மகன், மருமகள் உள்ளிட்ட யாரும் இலங்கைக்குப் போக மாட்டார்கள் என்று அவர் அறிவித்திருப்பது, தமிழர்களின் நொந்த மனங்களுக்கு ஆறுதலான விஷயமே.

இனம், மொழிக்கு அப்பால் சக மனிதனின் மன உணர்வைப் புரிந்து, மதிக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அதற்காக அமிதாப்புக்கு நன்றி சொல்வோம்.

இன்று தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த அமைப்புகளும் இலங்கை விழாவைப் புறக்கணிப்பதாகவும், இந்தப் புறக்கணிப்பை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஒற்றுமை, ஒருமுகமான எதிர்ப்புணர்வும் தொடரவேண்டும்.

ஆனால் இந்த ஒற்றுமை உணர்வை மத்திய – மாநில ஆட்சியாளர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். தன்னை மீறி ஒரு போராட்டம் வெற்றியை நோக்கிப் போகிறது என்று தெரிந்தாலே, அதனை எப்படியாவது உடைத்து நொறுக்குவதில் வல்லவர் முதல்வர் கருணாநிதி. அவருக்கு இணக்கமான மத்திய அரசும் அதன் ஆட்சியாளர்களும் இவரை விட பத்து மடங்கு மோசமானவர்கள். எனவே இவர்கள் திரையுலகில் இன்னொரு அணியை ஏற்படுத்தி மீண்டும் பிளவை உண்டாக்காமல் இருக்க வேண்டும். சினிமாக்காரர்கள் இப்போது விடுத்துள்ள அறிக்கையும், அதில் காட்டியுள்ள உணர்வும் உண்மையென்றால், ஆட்சியாளர்களின் எந்த தந்திரத்துக்கும் பலியாகிவிடக் கூடாது.

இந்திய திரைப்பட விழா, கொழும்பிலேயே நடக்கட்டும்… ஆனால் ஒரு இந்தியக் கலைஞர் கூட அதில் பங்கேற்கக் கூடாது!

-வினோ

ஆசிரியர்

என்வழி.காம்
11 thoughts on “இந்திய திரைப்பட விழா கொழும்பிலேயே நடக்கட்டும்…

 1. Chozhan

  வினோ, உண்மையிலேயே அருமையான கட்டுரை உங்களின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. எதற்கும் அஞ்சாத துணிவுக்கு நன்றி. உங்களின் பயம்/சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. கருணா என்ன சாதாரண மனிதரா? கலியுக சகுனி.

 2. endhiraa

  இந்திய திரைப்பட விழா, கொழும்பிலேயே நடக்கட்டும்… ஆனால் ஒரு இந்தியக் கலைஞர் கூட அதில் பங்கேற்கக் கூடாது!

  இதை எல்லா இந்தியனும் ஆமோதிக்க வேண்டும் !!

 3. palPalani

  /*
  இந்திய திரைப்பட விழா, கொழும்பிலேயே நடக்கட்டும்… ஆனால் ஒரு இந்தியக் கலைஞர் கூட அதில் பங்கேற்கக் கூடாது!
  */
  இதுதான் உண்மையான் பதிலடி!

 4. Logan

  //yuvaraj says:
  வினோ ,
  வாழ்த்தி வனங்குகிறேன் //

  ரீபிட்டு

 5. Sudha

  இனம், மொழிக்கு அப்பால் சக மனிதனின் மன உணர்வைப் புரிந்து, மதிக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அதற்காக அமிதாப்புக்கு நன்றி சொல்வோம்.

  இந்திய திரைப்பட விழா, கொழும்பிலேயே நடக்கட்டும்… ஆனால் ஒரு இந்தியக் கலைஞர் கூட அதில் பங்கேற்கக் கூடாது!

  இதை எல்லா இந்தியனும்/ Thamilanum ஆமோதிக்க வேண்டும் !!

 6. tamilan

  ////இதன் அடுத்த நிலையாக, ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைவர் சீமானின் துணிச்சலான போராட்டம் மற்றும் கச்சிதமான வாதத்தைக் கேட்டு, அதிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு இந்த விழாவுக்கு செல்வதைக் கைவிட்டுள்ளார் அமிதாப்//////

  வாழ்த்துகள் சீமான் ,,, உங்கள் போராட்டம் தொடரட்டும்

 7. r.v.saravanan

  இனம், மொழிக்கு அப்பால் சக மனிதனின் மன உணர்வைப் புரிந்து, மதிக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அதற்காக அமிதாப்புக்கு நன்றி சொல்வோம்

  இந்திய திரைப்பட விழா, கொழும்பிலேயே நடக்கட்டும்… ஆனால் ஒரு இந்தியக் கலைஞர் கூட அதில் பங்கேற்கக் கூடாது!

  அருமை வினோ வாழ்த்துக்கள்

 8. Chozhan

  தமிழா! ஒன்றுபடு தமிழர்கள் எப்படி எல்லாம் சித்ரவதை அனுபவிக்கிறார்கள் என்று தயவுசெய்து சிந்தித்துபார் அதற்க்கு மேலும் ஒரு சாட்சியாக ஒரு போராளி உயிருடன் கொல்லப்படுவதை tamilwin .com ல் பார்க்கவும் இந்த இவு இரக்கமற்ற சுயநலக்காரர்கள்/பதவிக்காக உள்ள கருணா போன்றவர்கள் வாழும் இந்த நாட்டில் வாழ்வதைவிட வீரச்சவே மேலானது. இந்த போராளிக்கு எனது வீரவணக்கம் இனியாவது ஒற்றுமையாக போராடுவோம் ஒன்றுபடுவோம். சிங்களவன் நம்மைபிரித்து சூழ்ச்சி செய்கிறான் அவனுக்கு நாம் யார் என்று காட்டவேண்டிய (தவறியதை சரிசெய்வோம்) நேரம் வந்துவிட்டது. நாம் ஓரணியில் நின்று திரைப்பட விழாவை அனைத்து இந்திய திரைத்துறையும் புறக்கணிக்க செய்வோம் அதையும் மீறி செல்பவர்களின் படங்களை திரையிடாமல் செய்வோம் அவர்களை முழுமையாக புறக்கணிப்போம். நம் இனம் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் பாராட்டு விழா/ செம்மொழி மாநாடு இது எல்லாம் தேவையா? எதிரியைவிட துரோகி மோசமானவன். நம் இனம் உள்ளவரை இது போன்ற ஆள்களுக்கு மன்னிப்பே கிடையாது.

 9. குமரன்

  ///கருணா என்ன சாதாரண மனிதரா? கலியுக சகுனி.///

  தயவு செய்து சகுனியைத் திட்டாதீர்கள். அவன் தனது பிள்ளை பெண் பேரன் பேத்தி பல்லாயிரக் கணக்கில் சம்பாதிப்பதற்காக அதையெல்லாம் செய்யவில்லை. கருணாநிதி செய்யும் ஒவ்வொரு காரியமும் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான கொடிகள் சம்பாதிக்கும் நோக்கிலேயே அமைந்திருக்கின்றன. தனது மகனுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவி வரவேண்டும் என்றுதானே சோனியாவை சொக்கத்தங்கம் அது இது என்று நக்கத் தயங்காது சொல்லி அதே கால கட்டத்தில் நடந்த இனப்படுகொலையை நாடகமாடி மூடி மறைத்தார்.

  முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் 2009 மே ௧௭ வரை இடைவிடாது வான் வழித் தாக்குதலோடு நடந்தது என்பதும், கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியும் பேரன் தயாநிதியும் அதே மே மாதம் 28 ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டார்கள். மக்கள் மடையர்கள் அல்ல. பதவிக்காக இனப் படுகொலைக்கு பேரம் பேசியவர் கருணாநிதி என்பது மக்களுக்குத் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *