BREAKING NEWS
Search

இந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை!

இந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை!

திண்டுக்கல்: ‘இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை nedumaran2ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உண்மையில், இலங்கைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக, ஆபத்தைத் தருவித்துத் தரும் வாயிலாக உருவாகியுள்ளது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், தமிழ் ஈழம் மலரும் என்ற ஆய்வரங்கம் மற்றும் ஐயம் தீர் அரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசியதாவது:

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கூடாது என்பதற்காக, சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

சீனாவின் பிடிக்குள் இலங்கை சென்றுவிட்டது. ஹம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. மன்னார் குடாவில் இந்தியா-இலங்கை கூட்டாகச் சேர்ந்து பெட்ரோல் எடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் மீறி, பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது இலங்கை.

மேலும், இப்பகுதியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.

இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலத்துக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது.

யூதர்களை ஹிட்லர் அழித்தது போல, இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழர்களை அழித்து வருகிறார். இலங்கை அரசு தரும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

சர்வதேச சட்டத்தையும் ராஜபக்ச மதிப்பது இல்லை. ஐ.நா. மக்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மதிப்பதில்லை.

ஜெனிவா ஒப்பந்தப்படி, போரில் சம்பந்தப்படாத பொதுமக்களைக் கொல்லக் கூடாது என்ற நெறிமுறைகளும் மீறப்படுகின்றன.

தற்போது 3.5 லட்சம் தமிழ் மக்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிகளவு புதைக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகிறார் இலங்கை அதிபர்.

ஆனால், தமிழர்கள் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுகின்றார். அப்போது மட்டும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி வெடிக்காதா?

உலகத்தினரை ஏமாற்றும் இலங்கை அதிபரின் செயலுக்கு இந்தியா உதவி வருகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர அனுமதிக்கக் கூடாது. அது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும்.

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் நிச்சயம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள், என்றார் நெடுமாறன்.
2 thoughts on “இந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை!

  1. குமரன்

    யூகோஸ்லாவியாவின் அதிப‌ராக இருந்த ஸ்லோப்டன் மிலோசவிக் மீது போர்க்குற்றங்களுக்காகவும், இனப் படுகொலைக்காகவும் தொடுக்கப்பட்டது போன்ற வழக்கை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, அவரது அமைச்சரும் உடன்பிறப்புமான கோத்தபய ராஜபக்சே முதலானோர் மீது ஹேக் நீதிமன்றத்தில் (இனப்படுகொலைக்காக வழக்கு) தொடுப்பதும் அதை எவர் தடுத்தாலும் முன் நின்று நடத்துவதுமே குறைந்த பட்சம் இந்தியத் தமிழர் செய்ய வேண்டிய கடமை. இதன் மூலம் மட்டுமே இலங்கையின் இனவாத சிங்கள அரசை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். இதனால் சிங்களர்க்கு மட்டும் அல்ல, கலைஞருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கூட மன வருத்தம் நேர்ந்தாலும் அதை இந்தியத் தமிழர்கள் பொருட்படுத்தக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *