BREAKING NEWS
Search

இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்! – ஏஆர் ரஹ்மான்

இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்! – ஏஆர் ரஹ்மான்

ந்தியாவையும் இந்திய மக்களையும் பெரிதும் நேசித்தவர், இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்… அவரது மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது என தனது இரங்கல் செய்தியில் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். rahman

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

“நம் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த இசையமைப்பாளர் மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணம் பற்றிய தகவல் அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த தலைமுறையில் யாரோடும் ஒப்பிட முடியாத ஒரு அடையாளமாக மைக்கேல் ஜாக்சன் இருந்தார்.

‘பாப் இசை’யில், மைல் கல்லாக இருந்த அவர், நம்ப முடியாத சிகரங்களை தொட்டார். 80களிலும், 90களிலும் அவர் ஆற்றல் மிகுந்த, நேர்த்தியான, தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு கலைஞராக திகழ்ந்தார்.

நான், ‘ஆஸ்கார்’ விருது பெற்ற பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். இந்தியாவையும், இந்திய மக்களையும் அவர் நேசிப்பதாக என்னிடம் சொன்னார். என்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாக கூறி, ‘ஜெய் ஹோ’ பாடலைப் புகழ்ந்து பேசினார்.

தன்னுடைய நடன அசைவுகள் ஆத்மாவில் இருந்து வெளிப்படுவதாக கூறிய அவர், 5 வினாடிகள் என் முன் ஆடி காண்பித்தார். அவருடைய நடனம் ஒரு மின்னல் போல் இருந்தது.

உலகம் வெப்பமயமாதல் பற்றியும், யுத்தங்களால் மனித இனத்துக்கு ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும் அவர் மிகவும் வருத்தப்பட்டார். உலக ஒற்றுமைக்காக ஒரு கீதத்தை உருவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன்.

அவருடைய 3 குழந்தைகளிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த குழந்தைகள், ‘ஐ லவ் யூ டாட்’என்றார்கள். பதிலுக்கு அவர், “ஐ லவ் யூ மோர்” என்றார்.

அவருடைய இசைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். ‘காட் ப்ளஸ் யூ’ (கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்) என்று கூறினார். அவர் மரணம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும், அது வதந்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்புவதற்கு ரொம்ப நேரமானது.

என் முதல் படமான `ரோஜா’வுக்காக, ‘காதல் ரோஜாவே’ என்ற பாடலுக்கு நான் இசையமைத்து கொண்டிருந்தபோது, மறைந்த சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீதர், ‘ரிமெம்பெர் தி டைம்’ என்ற மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தை கொண்டுவந்து கொடுத்தார். அது, எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது.

மனிதர்களை மதியுங்கள்…

இப்போது ஸ்ரீதரும் இல்லை. ஜாக்சனும் இல்லை. மனித உயிர்களின் மேன்மையை உணர்ந்து, உயிரோடு இருக்கும்போதே அவர்களை மதிக்க வேண்டும்.

வாழ்க்கை மிகவும் குறுகியது. கலைஞர்களும், அவர்களின் கலையும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். ஜெய் ஹோ மைக்கேல் ஜாக்சன். நாங்கள் உங்கள் இசையை நேசிக்கிறோம்… சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு…”, என்று கூறியுள்ளார் ரஹ்மான்.mj11

நடிகர் சங்கம் அஞ்சலி!

மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளைப் புகுத்தி ஒரு மாபெரும் கலை பொக்கிஷமான திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மறைவு இசையுலகுக்கு ஒரு பேரிழப்பு. தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி புகழடைந்துள்ளனர். உலக கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

சென்னை இசை ரசிகர்கள் கண்ணீர்!

மைக்கேல் ஜாக்ஸன் இசைக்கு சென்னை இளைஞர்கள் மட்டுமல்ல… பெரும்பாலான சென்னை மக்கள் ரசிகர்களாகவே இருந்தனர். குறிப்பாக அவரைப் பற்றிய எதிர்மறைச் செய்திகள் ரசிகர்களுக்கு அவர் மீது பெரும் அனுதாபத்தையே சம்பாதித்துக் கொடுத்தது.

இந்தியாவிலேயே சென்னையில்தான் மைக்கேல் ஜாக்ஸனின் இசைத் தட்டுகள் மற்றும் கேசட்-சிடிக்கள் அதிக அளவு விற்பனையாகி சாதனை படைத்தன. குறிப்பாக டேஞ்சரஸ் மற்றும் ஹிஸ்டரி ஆல்பங்கள் வரலாறு படைத்தன. ரூ.650 என விலை வைக்கப்பட்ட ஹிஸ்டரி ஆல்பத்தை வாங்க தொன்னூறுகளில் மக்கள் வரிசையில் நின்றது ஒரு பெரும் அதிசயம்.

ஜாக்ஸன் மறைவுக்கு பல ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கொடுத்து வைக்காத சென்னை!

உலகின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், சென்னையில் ஒரு முறை இசை நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் மேற்கொண்டார். 1993-ம் ஆண்டு டிசம்பர் 10-ல் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதனால், சென்னை மட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்த ஒட்டு மொத்த இசை ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஜாக்சனின் சென்னை வருகை ரத்தானது. ஜாக்சனின் வருகையை எதிர்பார்த்திருந்த சென்னை ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்னர் 1996-ல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதன் பிறகு ஜாக்சன் இந்தியாவுக்கு வரவில்லை.
2 thoughts on “இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்! – ஏஆர் ரஹ்மான்

  1. வடக்குப்பட்டி ராமசாமி

    நானும் இன்று ஒரு ரஹ்மான் தான்!

    ஆம் மிகுந்த வருத்தத்தில்! ஏதோ என் இதயம் கனக்கிறது!

  2. Manoharan

    Jackson is a Born Genius. Like Bruce Lee his fame will never end and his music stays always and will go on and on. Very sad of Jackson. மனித உயிர்களின் மேன்மையை உணர்ந்து, உயிரோடு இருக்கும்போதே அவர்களை மதிக்க வேண்டும்.

    100% True. But we are not doing that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *