BREAKING NEWS
Search

இசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்! -மன்மோகன் சிங் பாராட்டு

இசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்! -மன்மோகன் சிங் பாராட்டு

டெல்லி: தனது இசையால் தேசத்தின் ஒற்றுமையை வளர்க்கும் அரிய பணியைச் செய்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, நாராயணபுரத்தில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், ஆஸ்கார் விருது நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான நேற்று, டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.

ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.

பிரிவினைவாதிகளுக்கு பதிலடி

விருது வழங்குவதற்கு முன்னதாக சோனியாகாந்தி பேசுகையில், “தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், ஒற்றுமையை பேணிக் காக்கவும் பல வழிகள் உள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையாலும், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் பின் தங்கிய மற்றும் ஏழைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலமும் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். பிரிவினைவாதிகளுக்கு இதுவும் ஒரு பதிலடிதான். ரஹ்மான் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பணிகள் பாராட்டுக்குரியவை…” என்றார்.

“இசையால் தேசத்தின் ஒற்றுமை வளர்ப்பவர் ஏஆர் ரஹ்மான். அதேபோல ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் ஒருமைப்பாட்டுப் பணிகள், கல்வி சேவைகள் பாராட்டுக்குரியவை”, என்று புகழாரம் சூட்டினார் மன்மோகன் சிங்.

ரஹ்மான் தனது ஏற்புரையில். அமரர் இந்திரா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *