BREAKING NEWS
Search

இங்கிலாந்து அவுட்; அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்!

ட்வெண்டி 20 உலகக் கோப்பை: அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

லண்டன்: ட்வெண்டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. photocms2

மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் ஓவர்கள் மற்றும் வெற்றி இலக்கு குறைக்கப்பட்ட இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்.

இதன் மூலம் இரண்டாவது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. ரவி போபரா அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்தார். கெவின் பீட்டர்ஸன் 32 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவு தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் மழைகுறுக்கிடவே, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 9 ஒவர்களில் 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி வெற்றி அத்தனை சுலபமாக இருக்கவில்லை. மளமளவென 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு தூணாக நின்றவர்கள் சந்தர்பால் மற்றும் சர்வான்.

இருவரும் மிக நேர்த்தியாக, அதே நேரம் மின்னல் வேகத்தில் அடித்து ஆடி வெற்றி தேடித் தந்தார்கள்.

சர்வான் 19 ரன்களும், சந்தர்பால் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீசிய சைடுபாட்டம், பிராட், ஆண்டர்ஸன், ஸ்வான், ரஷீத் ஆகிய 5 பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டைப் பெற்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய சர்வதேசப் போட்டியொன்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

சூப்பர் 8 சுற்றின் மதல் போட்டியில் இந்தியாவை வென்றது இந்த  அணி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தான்…

கென்ஸிங்டன் ஓவலில் நடந்த மற்றொரு பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான்.  முதலில் விளையாடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை  இழந்து 156 ரன்களைக் குவித்து.

அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *