BREAKING NEWS
Search

ஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! – அனல் பறக்கும் சீமான் பேட்டி

ஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! – அனல் பறக்கும் சீமான் பேட்டி

சீக்கிய அதிகாரி: விடுதலைப் புலிகள் ராஜீவைக் கொன்றதை நியாயப்படுத்துகிறீர்களா?04

சீமான்: உங்கள் சீக்கியர் இந்திராவைக் கொன்றதை நியாயப் படுத்துகிறீர்களா?

சீக்கிய அதிகாரி (தலைவர் பிரபாகரன் படத்தைக் காட்டி): இவர் உங்கள் பிரதரா?

சீமான்: ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்!

-இது ஏதோ நாடகத்தில் அல்லது மேடையில் பேசப்பட்ட வசனமல்ல. நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கனடாவில், சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட்டபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.

இதுகுறித்த தமிழின் பிரபல பத்திரிகைகள் அனைத்துக்குமே தனது பேட்டியை வழங்கியுள்ளார் சீமான். அவற்றில் ஜூனியர் விகடன் மற்றும் ரிப்போர்ட்டரில் வந்துள்ள பேட்டிகள் தமிழர் உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தன.

அந்தப் பேட்டியிகளின் தொகுப்பு:

கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?

“வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற

அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை.

‘தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்!’ என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.

இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.”

கைது நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?

“மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ்.

‘இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்?’ எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.

பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா?’ என்றார். ‘உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?’ எனக் கேட்டேன்.

இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவர் உன்னோட பிரதரா?’ எனக் கேட்டார். ‘ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்!’ எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறையிலேயே சிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.”

பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக் கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?

seeman and thalai

“வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.

பிரபாகரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் – அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.”

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை தாக்கியது உங்களின் ‘நாம் தமிழர்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என போலீஸ் சொல்கிறதே?

“என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோவனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை. தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை.

ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் ‘நாம் தமிழர்’ அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும். சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா?

ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள்… வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்!”

என்னுடைய அறையில் தான் உங்களுடைய நாம் தமிழர் இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்’ என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?

“ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், ‘சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?’ என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு ‘மௌனத்தின் வலி’ என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?

எங்களுடைய ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்’ என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு ‘ஜஸ்டிஸ் ஃபண்ட்’ திரட்டலாம்’ என்றார்.

திடீரென ‘நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்’ என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. ‘நாம் தமிழர்’ என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். ‘ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்’ என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள..”

கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?

“முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத் துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!”

p8b

தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?

“நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும்.

தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?

சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.”

நன்றி: ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர்
3 thoughts on “ஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! – அனல் பறக்கும் சீமான் பேட்டி

 1. pataas

  well done seemaan..
  singalan alikapada வேண்டியவன் அரக்கன்
  பிரபாகரன் nam annan ..அவர் vazhiyil nadapom உறுதியாக தமிழனாக

 2. pJS

  தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! –

 3. kumar

  //தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான்! –//

  நான் ஆமோதிக்கிறேன் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *