BREAKING NEWS
Search

அறிவாலயத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடும் கருணாநிதி! – ஜெ அட்டாக்

அறிவாலயத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடும் கருணாநிதி! – ஜெ அட்டாக்

சென்னை: நான் தலைமைக் கழகத்துக்குச் செல்வது மக்கள் பணியாற்றவும் தொண்டர்களைச் சந்திக்கவும்தான். ஆனால் கருணாநிதி அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்திக்கிறாரா… நண்பர்களுடன் அமர்ந்து சீட்டு விளையாடுகிறார். களிப்பூட்டும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார், என்று கடுமையான அறிக்கை விடுத்துள்ளாரக் ஜெயலலிதா.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் முதன் முதலாக தொண்டர்களை சந்தித்து மனுக்களை வாங்கினேன் என்றும், இது எனது ‘கன்னி சந்திப்பு’ என்றும், ஒரு மணி நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நான் போய்விட்டேன் என்றும், இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்து விட்டதாகவும், 22 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் மனு வாங்கும் படலம் என்றும் ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இன்னொரு நாளிதழ், நான் தலைமைக் கழகம் வந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடுவதாகவும் கூறியுள்ளது.

இவர்கள் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு பலியாகி, அவர் சொல்வதற்கேற்ப செய்தி வெளியிடுவது அம்பலமாகியுள்ளது.

கூட்டம் வந்தது என்னால்தான்!

நான் 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்ததில் இருந்து இன்று வரை கழக உடன்பிறப்புகளிடமிருந்து தினந்தோறும் மனுக்களை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 1982ம் ஆண்டு நான் தலைமைக் கழகம் செல்ல ஆரம்பித்த பிறகு தான், தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.

1983ம் ஆண்டு கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் தினமும் தலைமைக் கழகத்திற்கு சென்று அங்கு வரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தேன்.

தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள்…:

அதற்கு முன்பு புரட்சித் தலைவர் அமைச்சரவையில் இருந்த எந்த ஒரு அமைச்சரும் தலைமைக் கழகத்திற்கு சென்று என்னைப் போன்று கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்றதும் கிடையாது, அவர்களது குறைகளை கேட்டறிந்ததும் கிடையாது என்று கழக உடன் பிறப்புகளே என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். கழகத் தொண்டர்கள் தான் அமைச்சர்களை தலைமைச் செயலகத்திற்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கோ சென்று பார்ப்பார்களே தவிர, அமைச்சர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

எம்ஜிஆருடன் மதிய உணவு:

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காலையில் கோட்டைக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்காக மாம்பலம் ஆற்காடு சாலையில் இருந்த அலுவலகத்திற்கு வருவார்கள். நானும் தலைமைக் கழகத்தில் காலை முதல் மதியம் வரை தொண்டர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாம்பலம் அலுவலகத்திற்குச் செல்வேன். அங்கு புரட்சித் தலைவரோடு நானும் மதிய உணவு அருந்துவேன். பின்னர், கழக உடன்பிறப்புகள் என்னிடம் கொடுத்த மனுக்களை, கோரிக்கைகளை புரட்சித் தலைவரிடம் தெரிவிப்பேன். இதன் விளைவாக கழக உடன் பிறப்புகளின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

என் கால் படாத இடங்களே இல்லை:

1983ல் கழக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் என் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் நான் தொடர்ந்து இடைவிடாது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு ஊரிலும் என்னை சந்தித்த கழக உடன்பிறப்புகளின் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை பொறுமையாக கேட்டுக் கொள்வேன்.

“புரட்சித் தலைவரின் வாரிசு”:

இந்த அளவுக்கு கட்சிப் பணியை நான் ஆற்றியதன் காரணமாகவும், கழக உடன் பிறப்புகளின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியதன் காரணமாகவும் தான் கழக உடன் பிறப்புகள் “புரட்சித் தலைவரின் வாரிசு” என்று என்னை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரியும். எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987ம் ஆண்டு வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும்.

கழகம் வளர்ந்துவிட்டது!

எந்த ஒரு கட்சியின் பொதுச் செயலாளரும் அத்தனை பேரிடமும் ஒரே நாளில் மனுக்களைப் பெற்று அவர்களது குறைகளை நேரில் கேட்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். ஏனென்றால் இன்று, கழகம் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. இருப்பினும், அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். தினசரி தொண்டர்கள் தலைமைக் கழகத்திற்கும், எனது இல்லத்திற்கும் வருகின்றார்கள். கழகத் தொண்டர்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அனைத்துக் கடிதங்களுக்கும் பதில்கள் அனுப்பப்படுகின்றன.

என் வயது 62…:

எல்லோரையும் நான் நேரில் பார்த்து மனுக்களைப் பெறவில்லை என்று குறை சொல்பவர்கள், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1982ல் என்னுடைய வயது 34. இன்று எனக்கு வயது 62 என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், கழக தொண்டர்கள் எல்லோரும் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால், மாவட்ட வாரியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தால் சரியாக வராது என்பதால், ஒன்றிய வாரியாகவோ, நகர வாரியாகவோ, அல்லது சட்டமன்றத் தொகுதி வாரியாகவோ சந்திக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சட்டமன்றத் தொகுதி வாரியாக சந்திப்பை ஏற்பாடு செய்தால் கூட, 234 நாட்கள், அதாவது கிட்டத்தட்ட ஒர் ஆண்டு காலம் ஆகும். அப்போதும் ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் வருவார்கள். இருந்தாலும், இதற்கு என்ன வழி என்பதை சிந்தித்து, விடா முயற்சியோடு தொண்டர்களுக்கு நிச்சயம் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவேன்.

சீட்டு விளைாயாடும் கருணாநிதி:

கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு வராமல் இருந்தால்தான் செய்தி. நான் தலைமைக் கழகத்திற்கு வந்தால் அது தான் செய்தி என்று சொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தொண்டர்களை தினசரி சந்தித்து இருக்கிறாரா? அதற்கு அத்தாட்சி இருக்கிறதா?

கருணாநிதி அறிவாலயத்துக்கு தினமும் போகிறார். ஆனால் அங்கு ஒரு தொண்டர்கூட இருப்பதில்லை. அவரும் தன் நண்பர்களுடன் அமர்ந்து சீட்டு விளையாடி பொழுதைக் கழிக்கிறார். வேறு பல களியாட்டங்களிலும் ஈடுபடுகிறார்.

நான், போயஸ் கார்டனில் இருந்தாலும், தலைமைக் கழகத்தில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும், எந்த நேரமும் கழகப் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்.

அறிவாலயம் வெறிச்சோடியே இருக்கும்…

கருணாநிதி தலைமைக் கழகத்திற்குச் சென்று கட்சிக்காரர்களை சந்திக்கிறார் என்றும், நான் தலைமைக் கழகத்திற்குப் போவதற்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது என்றும் பேசி இருக்கிறார் மு.க. அழகிரி. கருணாதியானாலும், அழகிரியானாலும், ஸ்டாலின் ஆனாலும் இவர்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ஆட்கள் யாரும் வருவதில்லை. ஏனென்றால் மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி இவர்களிடம் இல்லை. அறிவாலயம் எப்போதும் கூட்டம் இன்றியே வெறிச்சோடி இருக்கும். ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சி இருந்தால் தவிர அங்கு கூட்டம் வருவதில்லை. இவர்களும் வேறு வேலை இல்லாமல் சீட்டு விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘வொர்க்கிங் ப்ஃரம் ஹோம்’:

ஆனால், நான் தலைமைக் கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகின்றார்கள். தலைமைக் கழகம் சென்றால், அவர்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பதால், நான் வீட்டில் இருந்தபடியே முக்கியமான கட்சி வேலைகளை கவனிக்கிறேன்.

ஒய்வெடுக்கவா செல்கிறேன்?:

அடுத்தபடியாக நான் கோடநாடு சென்றாலே, “ஒய்வெடுக்க செல்கிறேன்” என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கோடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கோடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




9 thoughts on “அறிவாலயத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடும் கருணாநிதி! – ஜெ அட்டாக்

  1. kavirimainthan

    கலைஞரின் சாதனைகளை அம்மையார் குறைவாக
    எடை போடுகிறார்.

    கலைஞர் சீட்டாடுவதைத் தவிர
    வேறு எதைச் சாதித்திருக்கிறார் என்று கேட்கிறார் –

    கலைஞரின் சாதனைக்கு இதோ ஒரு சாட்சி –

    கடந்த பல ஆண்டுகளாக திமுக தொடர்ந்து
    மத்தியில் பதவி வகித்தாலும், தமிழ் நாட்டில்
    ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களுக்கு
    எந்த பயனும் கிடைக்கவில்லை
    என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு
    சாட்டையடியாக வெளியாகி இருக்கும்
    செய்தியைப் பாருங்கள் !

    இன்று வெளியாகியுள்ள திமுகவின்
    சாதனை வரலாறு – (இந்த செய்தி
    தமிழ்ப் பத்திரிகைகள்
    எதிலும் வெளிவரவில்லை என்பது
    குறிப்பிடத்தக்கது )(வராமல்
    பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும்
    சொல்லலாம் !)

    கலாநிதி மாறன், சன் குழும நிறுவனத்தின்
    மேனேஜிங் டைரெக்டர் என்கிற முறையில்
    பெறும் வருட சம்பளம் ரூ.37.8 கோடிகள்.

    அவரது மனைவி காவேரி, இதே
    நிறுவனத்தின் இணை மேனேஜிங் டைரெக்டர்
    என்கிற முறையில் பெறும் வருட சம்பளம்
    ரூ.37.8 கோடிகள்.

    ஆக கணவர், மனைவி இருவரும் சேர்ந்து
    மார்ச் 2010 -ல் முடிந்த நிதியாண்டில்
    பெற்றுள்ள மொத்த சம்பளம்
    74.16 கோடிகள் –

    அதாவது 741 லட்சங்கள் –
    அதாவது

    மாதச்சம்பளம் சுமார் 61 லட்சங்கள் !!

    இந்த தொகை அவர்கள் பெறும் சம்பளம்
    மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    லாபத்தில் பங்கு என்பது தனி விஷயம் –
    அது ஆண்டு வரவு செலவு தணிக்கைக்கு
    பின்னர் தெரிய வரும்.

    பங்கு மார்க்கெட்டில் சன் நிறுவனம்
    இருப்பதால் – இந்த விவரங்கள் வெளியே
    வந்திருக்கின்றன.இல்லை என்றால்
    இவை வெளியே தெரியவும் வாய்ப்பு இல்லை!

    ஒரு கொசுறு செய்தி –

    இன்னும் ஒரு பெருமைப்படத்தக்க செய்தி –

    ஸ்பைஸ் ஜெட் என்கிற விமான நிறுவனத்தின்
    39 சதவீத பங்குகளை கலாநிதி மாறன்
    சுமார் 750 கோடி ரூபாய்க்கு வாங்கி
    இருக்கிறார் ! (இது இரண்டு நாட்களுக்கு
    முன்னர் வந்த செய்தி )இதன் மூலம்
    அதிக அளவில் பங்குகளை வைத்திருக்கும்
    தனி நபர் என்கிற முறையில்,
    இந்த நிறுவனத்தின்
    முழு கட்டுப்பாடும் இவர் கீழ் வருகிறது !

    கலாநிதி மாறன் தமிழரில்லையா ?
    தமிழ் நாட்டுக்காரரில்லையா ?

    இவர் ஒருவர் மட்டும் தானா?
    இவராவது தொழில் செய்து கோடீஸ்வரர் ஆனார்.

    கலைஞர் தன் குடும்பத்திலேயே
    ஒரு தொழிலும் செய்யாமலே எவ்வளவு
    கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறார் !

    எவ்வளவு இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் !

    எத்தனை தொலைக்காட்சி முதலாளிகள் !!

    தமிழர்களுக்கு கலைஞர் எதுவும்
    செய்யவில்லை என்று சொல்பவர்கள்
    இதை எல்லாம் பார்த்தாவது திருந்தட்டும் !

    – காவிரிமைந்தன்
    http://www.vimarisanam.wordpress.com

  2. degalti

    கண்ணை கட்டுது…..
    எம்மாம் பெரிய அறிக்கை…..

  3. குமரன்

    ///என் கால் படாத இடங்களே இல்லை:///

    ஆமாம், ஆமாம், கழக (அ.தி.மு.க) முன்னணியினர். ஆட்சியில் இருக்கும்போது அமைச்சர்கள், இல்லாத பொது முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், இவை எல்லாவர்ர்யுக்கும் முத்தாய்ப்பாக இவர் ஆட்சியில் இருக்கும்போது அரசு அலுவலர்கள், பொது மக்கள் என்று இவர் கால் படாத இடமே இல்லை.

    எல்லாரையும் ஏறி மிதிக்கும் குணத்தை இவர் விட்டால் ஒழிய இவரை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  4. sam

    வொர்க்கிங் ப்ஃரம் ஹோம்’: supeerrrruuuuuuuu………

  5. Dinesh

    ஓய்வெடுத்தது போதும் தாயே… வா வெளியில் வா… இந்த தமிழ்நாட்டை ஆள வா… வெளி நாட்டு பிரச்சினைக்கு கூட குரல் கொடுக்காவிட்டால் பரவா இல்லை. நீங்க உள்நாட்டுக்காகவாது கொஞ்சம் செய்வீர்கள். குறைந்த பட்சம் சட்ட ஒழுங்கா நல்லா இருக்கும் நீங்க ஆட்சிக்கு வந்தால்…

  6. MARIAPPAN

    ஓய்வெடுத்தது போதும் தாயே… வா வெளியில் வா… இந்த தமிழ்நாட்டை ஆள வா……..குறைந்த பட்சம் சட்ட ஒழுங்கா நல்லா இருக்கும் நீங்க ஆட்சிக்கு வந்தால்…
    நன்றி தினேஷ்.

  7. Juu

    இப்போ புரியுது!!! அறிவாலயத்தில் ஏன் சீட்டு பிரச்சனை வருதுன்னு…

  8. mukesh

    //1982ம் ஆண்டு நான் தலைமைக் கழகம் செல்ல ஆரம்பித்த பிறகு தான், தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.//

    //அதற்கு முன்பு புரட்சித் தலைவர் அமைச்சரவையில் இருந்த எந்த ஒரு அமைச்சரும் தலைமைக் கழகத்திற்கு சென்று என்னைப் போன்று கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்றதும் கிடையாது, அவர்களது குறைகளை கேட்டறிந்ததும் கிடையாது என்று கழக உடன் பிறப்புகளே என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். கழகத் தொண்டர்கள் தான் அமைச்சர்களை தலைமைச் செயலகத்திற்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கோ சென்று பார்ப்பார்களே தவிர, அமைச்சர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.//

    //எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987ம் ஆண்டு வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும்.//

    எம். ஜி ஆரையும் சொந்த கட்சியையும் இதை விட யாரும் கேவலப் படுத்தமுடியாது.

  9. குமரன்

    ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவரைப் பார்த்து நாடே பயப்படும் அப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி செய்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *