BREAKING NEWS
Search

அரசு அலட்சியத்தின் விலை 7 உயிர்கள்!

ஒரு அலட்சியத்தின் விலை 7 உயிர்கள்!

முன்பெல்லாம் வாக்குப் பதிவு முடிந்து புதிய ஆட்சியாளர்கள் கொஞ்ச நாள் ‘தேனிலவுக் காலத்தை’ அனுபவித்த பிறகுதான் மக்களை தொங்கலில் விடுவார்கள். hyderabad

இது ஐடி யுகமல்லவா… வாக்குப் பதிவு முடிந்த மறுவாரமே, ஆட்சியாளர்கள் தங்கள் சுயரூபத்தை, மக்கள் மீதான அலட்சியத்தைக் காட்டியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் சாக்கடை கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் வரை இறந்து போயுள்ளனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காரணம், ஆட்சியாளர்களின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பற்றதனம்!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் போலக்பூர் பகுதியில் நேற்று முன்தினம் குடிநீருடன் சாக்கடை கலந்திருக்கிறது. குடிநீர் மஞ்சள் நிறத்துக்கு மாறியதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

ஆனால் அவர்கள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூர் பிரமுகர்களிடமும் சொல்லிப் பார்த்தனர். ஒரு நடவடிக்கையும் இல்லை. சாக்கடை கலந்த நீரையே அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி குடித்தனர்.

இந்த நீரைக் குடித்ததும் பலருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது. பலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.

இதனால் போலக்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாந்தி-பேதியால் அவதிப்பட்ட சையத் உஸ்மான் (60), தயாதபசும் (15), அமன் (4), சிரோக் (8) ஆகியோரை அப்பகுதி மக்கள் அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 4 பேரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போல் பீவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுசல்யா (6), அகிபி (7), சித்திக் (4) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.

நேற்று காலையில் இருந்து மாலை வரை சாக்கடை குடிநீர் குடித்த சுமார் 1300 பேர் காந்தி, பீவர், நீலோபர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதன் பிறகு விசாரணை நடந்தது, இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்… ஆனால் போன உயிர்களுக்கு யார் பொறுப்பு? இப்போது மக்கள் படும் அவதிகளுக்கு யார் காரணம்?

ஓட்டுப் பதிவு நடக்கும் வரை காட்டும் அக்கறையை 5 ஆண்டுகளும் காட்ட முயற்சிக்கலாமே… மக்கள்தான் அரசியல்வாதிகளின் ஊழல், பித்தலாட்டங்களை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டார்களே… ஊழல் செய்து பாக்கெட்டு நிரப்புங்கள்… அதைத் தட்டிக்கேட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. குறைந்தபட்சம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது சரியாகச் செய்து கொடுங்களேன்…!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *