BREAKING NEWS
Search

அரசுப் பள்ளிகளாலும் அசத்த முடியும்!

மகிழ்ச்சி தந்த தேர்வு முடிவுகள்!

டந்த வாரம் வெளியான ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் மற்றும் இன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பெரும் நிறைவைத் தருவதாக இருந்தன. காரணம், இந்த இந்த இரண்டு முக்கியத் தேர்வுகளிலுமே, அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பெற்ற மதிப்பெண்களின் விகிதம் மெச்சத் தக்கதாக இருந்தது.

குறிப்பாக பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த மாணவி ஜாஸ்மின், ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். நெல்லை மாநகராட்சி நடத்தும் அரசுப் பள்ளியில், அதிலும் தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை அவர் படைத்தது சிலிர்ப்பைத் தந்தது.

மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி ஒருவரும் கூட அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவரே.

சென்னை மாநகராட்சியில் உள்ள 65 பள்ளிகளில் பெரும்பாலானவை 100 சதவிகித தேர்ச்சியைக் காட்டியுள்ளன. அதன் மாணவர்கள் அதிகபட்சமாக 485 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தரமான கல்வி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி என்பது அரசுப் பள்ளிகளிலும் சாத்தியமே என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள். இதற்குக் காரணமான அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதலிலேயே பாராட்டி விடுவோம்!

அதற்காக தனியார் பள்ளிகளை நாம் குறை சொல்லவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் வெறும் வியாபார மையங்களாக நிற்பதுதான் நமது வெறுப்புக்குக் காரணம்.

ஆனால் அரசுப் பள்ளிகள் அப்படியல்ல. அங்கே அனைத்து வசதிகளும் உண்டு. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, மரத்தடி வகுப்பறைகள் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல அமைவிடம், உள்கட்டமைப்பு வசதி என சகலமும் கிடைப்பது அரசுப் பள்ளிகளில்தான். அதைவிட முக்கியம் மாணவர்களுக்கு நெருக்கடி தராத கல்வி முறை.

இன்று சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் பல தனியார் பள்ளிகள் ஏதோ கொல்லன் பட்டறையில் இரும்பை அடித்து வார்ப்பதைப் போல மாணவர்களை படிக்கப் படுத்தும் பாட்டைப் பார்த்தால் எரிச்சலும் வெறுப்புமே மிஞ்சுகிறது. மாணவர்கள் அந்தப் பருவத்துக்கே உரிய விளையாட்டுத்தனத்தையும் அனுபவிக்க வேண்டும்; படிக்கவும் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவை அரசுப் பள்ளிகள். பாடத் திட்டமும் கூட சிறப்பாகவே உள்ளன. அதிலும் இப்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வெகு சிறப்பாக உள்ளதைச் சொல்லியாக வேண்டும்.

நிறைய பெற்றோர்கள், பள்ளியில் படிக்கும் போதே தங்கள் மகன் / மகள் பெரிய மேதாவித்தனத்துடன் திகழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, உலகத்திலேயே கடினமான கல்விமுறை எதுவோ அதைத் தேர்வு செய்வார்கள். இப்படியெல்லாம் நெருக்கடி கொடுப்பதன் விளைவு என்ன தெரியுமா? உலகிலேயே யாரும் செய்யத் துணியாத குற்றங்களையெல்லாம் செய்து முடித்து சைக்கோ லெவலுக்கு வந்து நிற்கிறார்கள் அந்த நெருக்கடியுடன் படித்த சில மாணவர்கள். நாம் பொத்தாம் பொதுவாக இதைச் சொல்லவில்லை. நிறைய உதாரணங்கள், நேரடி சாட்சிகள் உள்ளன.

இதையெல்லாம் எத்தனையோ உண்மைச் சம்பவங்களுடன் விளக்கியும் கூட, பல பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. அவர்களது மனப்பான்மை, அரசுப் பள்ளிகளுக்கு எதிராகவே உள்ளன. இதற்கு காரணம், அதீத எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல… ‘தனியார் பள்ளியில், அதிக கட்டணம் கட்டி என் பிள்ளையைப் படிக்க வைக்கிறேன் பார்’ என்ற தம்பட்ட உணர்வு, அரசுப் பள்ளிகள் பஞ்சை, பராரிகள், ஒடுக்கப்பட்டோப் படிக்க வேண்டியவை என்ற கீழ்த்தரமான சிந்தனை மற்றும் தனியார் பள்ளிகளில்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கை போன்றவையே.

சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கூற்றுக்கும், தனியார் பள்ளிகளில்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை!

மாநிலத்தில் முதலிடம்...

இப்போதாவது பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். பணம், அந்தஸ்து என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதில் முனைப்பு காட்டலாம். குறிப்பாக அரசுப் பணியாளர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்பி முன்வர வேண்டும். இதற்காக அரசு உத்தரவு போடும்வரை (இப்படியொரு யோசனை அரசுக்கும் நீ…ண்ட காலமாகவே உள்ளது!) காத்திருக்கத் தேவையில்லை.

சமூகத்தின் பொறுப்பான மனிதர்களது பிள்ளைகளும் படிக்கிறார்கள் என்ற உணர்வே அரசுப் பள்ளி ஆசிரியர்களை இன்னும் சிரத்தையுடன் செயல்பட வைக்கும். இதை அனுபவப்பூர்வமாகவே இங்கு சொல்கிறோம். அதுமட்டுமல்ல… அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் கொட்டிக் கொடுக்கிறது அரசு. அது, தேர்தல் நேரத்தில் அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்காக மட்டுமல்ல, மாணவர்களுக்கு நல்ல கல்வியை போதிப்பதற்காகவும் கூடத்தான்!

கிராமப்புறங்களில் வட்டித் தொழில், விவசாய நடவடிக்கைகள், வெட்டிப் பஞ்சாயத்து போன்றவற்றில்தான் பெரும்பாலான நேரங்களை சில ஆசிரியர்கள் கழிக்கிறார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர, அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டில் அனைத்துத் தரப்பு பெற்றோரும் விரும்பித் தலையிடுவது பெருமளவு உதவும்.

இந்த நேரத்தில் அரசும் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோரின் விழிப்புணர்வு, அரசின் பொறுப்பான அணுகுமுறை மற்றும் ஆசிரியர்களின் கடமை உணர்வு… இம் மூன்றும் சரியான நேர்க்கோட்டில் இணைந்தால், மாணவர்கள் எந்தவித மன நெருக்கடிக்கும் உள்ளாகாமல் கல்வியைக் கற்பார்கள்.

அரசுப் பள்ளிகள் தரும் கல்விக்கு நிகரில்லை என்ற நிலை தானாகவே உருவாகும். அதுமட்டுமல்ல, தனிநபர் கமிஷன் போட்டு கல்விக் கட்டணங்களை முறைப்படுத்தியும், அதற்கு கட்டுப்படாமல் காவாலித்தனம் செய்யும் தாளாளர்களும்கூட (பணத் தாளை எண்ணுபவர்= தாளாளர்!) வழிக்கு வருவார்கள். அதற்கும் அடங்காத வர்த்தகர்கள் தானாகவே ஒழிந்து போவார்கள்!

-வினோ

ஆசிரியர்

என்வழி
13 thoughts on “அரசுப் பள்ளிகளாலும் அசத்த முடியும்!

 1. patrick

  “அரசுப் பணியாளர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்பி முன்வர வேண்டும் இதற்காக அரசு உத்தரவு போடும்வரை (இப்படியொரு யோசனை அரசுக்கும் நீ…ண்ட காலமாகவே உள்ளது!) காத்திருக்கத் தேவையில்”

  idea is nice , but where is ur child is studying vino sir , in govt school?
  ———————————

  ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவனல்ல (நான் அரசு பணியாளனுமல்ல)… ஆனாலும் எனது குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார்கள்!

 2. ss

  பேட்ரிக்,

  இப்படி அவசர அவசரமா வினோவை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன? அவர் தனக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு அதற்கு உட்பட்ட கருத்துகளை தான் எழுதுகிறார்.. அவசரப்பட்டு குற்றம் சாட்டாதீர்கள்.. நாட்டில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து எடை போடாதீர்கள்.

  அரசு பள்ளியில் பயின்ற ஒரு மாணவி மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரையும் அவருடைய ஆசிரியர்களையும் முதலில் பாராட்ட தோன்ற வில்லையா?..

  உண்மையிலேயே அரசு பள்ளிகளில் தரம் இருக்கிறது என்று மீண்டும் நிருபித்திருக்கும் ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  உண்மையிலேயே பெற்றோர்கள் யோசிக்க வேண்டிய காலம் இது.. அமெரிக்காவில் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வதற்கென்று சில வெப்சைட் உள்ளது.. நமது நாட்டிலும் அப்படி பட்ட மதிப்பீடுகள் வந்தால், பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்கும் முன்பாக ஆசிரியர்கள் பற்றிய மதிபிடுகளை தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆசிரியர்கள் எந்த பள்ளியில் இருந்தாலும் அங்கீகாரம் பெறுவார்கள்..

  நான் படிக்கும் காலத்தில், ஒவ்வொரு வகுப்புகள் மாறும் பொது, குறிப்பிட்ட ஆசிரியர் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் சிபாரிசுக்கு நின்ற நினைவுகள் வருகிறது…

  நல்ல ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் முயற்சி இந்த வருட பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளில் உலகத்திற்கு அடையலாம் காட்டபட்டுள்ளது மென் மேலும் வெற்றிகள் குவியட்டும்.

 3. Raja

  அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு யாரும் கவலைப் பட வில்லை. ஆனால் எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை. நான் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அன்று ஆசிரியர்கள் அக்கறையுடன் பாடம் நடத்தினார்கள். இன்று அதே பள்ளியில் ஆசிரியர்கள் வேறு தொழில் தொடங்கி கொண்டு பள்ளிக்கு சம்பளம் மட்டும் வாங்கவே வருகிறார்கள். இப்படி பட்ட ஆசிரியர்கள் இருப்பதால் எங்கள் ஊரில் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு/தனியார் பள்ளிகளுக்கு செல்கிறார்கள்.

  அரசு ஊழியர்கள் வேறு தொழில் தொடங்க தடை விதித்தால் நல்லது.

 4. sathish

  ஜாஸ்மின் அவர்களுக்கும் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 5. RAMAN/

  உண்மையிலேயே அரசு பள்ளிகளில் தரம் இருக்கிறது என்று மீண்டும் நிருபித்திருக்கும் ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  ஜாஸ்மின் அவர்களுக்கும் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 6. santhosh

  பேட்ரிக்,

  இப்படி அவசர அவசரமா வினோவை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன?
  அரசு பள்ளியில் பயின்ற ஒரு மாணவி மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரையும் அவருடைய ஆசிரியர்களையும் முதலில் பாராட்ட தோன்ற வில்லையா?..

  ஜாஸ்மின் அவர்களுக்கும் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 7. endhiraa

  வாழ்த்துக்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு !

  வினோவின் கட்டுரை ஒரு தினமணி தலையங்கம் படித்ததை போல் இருந்தது. பாராட்டுக்கள் !

 8. sakthivel

  தேசிய மொழியான ஹிந்தி-யும் அரசு பள்ளிகளில் அனுமதித்து மாணவர்களின் எதிர்காலம் மேம்பட உதவலாமே….

  மொழி பேதங்களை உடைத்தால் தமிழக மாணவர்களின் திறமை இன்னும் வெளிவரும்…..

 9. patrick

  To all
  i am also studied in govt school but it was aided one.i knew the real situation of govt schools. most of the school even though having facilities but results will be very low. most of the govt teachers giving more important for tution class but not for students who are studying in schools. there is difference between the govt aided and govt school also
  most of the teachers are in govt aided are not getting the actual pay, administration taking most of the pay giving them less.

  i am saying it is not fair to ask govt staff child to study in govt school. they are one percent in tamil nadu . what abt remaining 99 percent ?. make education free to every body including ashram school run by rajini trust

  congrats to the state first ranker who studied in govt school.
  ” but exception are not examples”
  .

 10. பிள்ளையாண்டான்

  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் அதை திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்!!

  அரசு பள்ளிகளில் படிப்பதை, கேவலமாக நினைக்கும் பாங்கு நிச்சயம் மாறவேண்டும். கிராமங்களை விட, நகரங்களில் தான் இந்த போக்கு அதிகம்.

  அரசு பள்ளிகளில் தனது பிள்ளைகளை படிக்க வைப்பதை, உறவினர்களே கேவலமாக பேசுவது வருந்த தக்கது.

 11. Anbil Raja

  //அரசுப் பணியாளர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்பி முன்வர வேண்டும் இதற்காக அரசு உத்தரவு போடும்வரை (இப்படியொரு யோசனை அரசுக்கும் நீ…ண்ட காலமாகவே உள்ளது!) காத்திருக்கத் தேவையில்//
  The government has no right to tell me where my son goes to school, even if i am employed with them.
  Sending kids to private school, for me, is to increase their self image and not mug up subjects and score 495

 12. r.v.saravanan

  அரசுப் பள்ளிகள் தரும் கல்விக்கு நிகரில்லை என்ற நிலை தானாகவே உருவாகும்.

  உருவாக வேண்டும்

  அப்போது தான் சில தனியார் பள்ளிகள் வியாபார
  மையமாக இருக்கும் நிலை மாறும்

  அரசு பள்ளிகளின் தரத்தை நிருபித்த ஜாஸ்மின் அவர்களுக்கும்
  அந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *