BREAKING NEWS
Search

‘அரசியலில் ஓய்வா? நான் எப்போ சொன்னேன்?’ – முதல்வர் கருணாநிதி

‘அரசியலில் நான் ஓய்வு பெற ஒரு தேதியை நீங்களே குறிப்பிட்டுச் சொல்லுங்கள்” –   முதல்வர் கருணாநிதி

கோவை: அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக நான் சொல்லவில்லை. இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை” என்றார் முதல்வர் கருணாநிதி.

மேலும், வரும் ஆண்டுகளில் தமிழர்கள் வாழும் பிற நாடுகளில் செம்மொழி மாநாடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஆனால் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

“செம்மொழி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் மனு கொடுத்தார்களா என்பது எனக்குத் தெரியாது, கொடுத்ததாகப் பத்திரிகைகளில்தான் செய்தி வந்தது. அதை மீறித்தான், அலட்சியப்படுத்திவிட்டு தமிழர்களை மதிக்கும் வகையில் இம் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்றுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்ட அம் மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும், அக் கட்சியைச் சேர்ந்த எம்பி து.ராஜா, சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலாக தமிழை மேலும் படிப்படியாக வளர்த்து உயர்ந்த கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் இம் மாநாட்டின் சாதனையாகக் கருதுகிறேன்.

மொரீசியஸ் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மொழி, இன அடையாளங்களைத் தெரிந்து கொள்வதற்கு வேண்டுகோள் விடுத்தால் அங்கு தமிழ்ப் பணியாற்ற அரசு தயாராக இருக்கிறது.


எதிர்ப்பா?

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கருத்து லட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை நானாகக் கூறவில்லை, தமிழகத்தில் உள்ள இத்தகைய கருத்துடைய பல பத்திரிகைகள், இதழ் ஆசிரியர்கள், புலவர்கள் தெரிவித்த கருத்தின் எதிரொலியாகத்தான் இந்தத் தீர்மானத்தை மாநாட்டில் அறிவித்துள்ளோம். எனவே, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அவர்களின் முன்னேற்றத்தில் பற்று கொண்டோர் இந்த அறிவிப்பை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

செம்மொழி மாநாடு என்ற பெயரால் கைதிகளை விடுவிப்பதாக அரசு அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் யாரை நம்பி அறிக்கை வெளியிட்டார் என்பது தெரியவில்லை.

கைதிகளை விடுவிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அந்த அறிக்கையில் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது அவருடை பிறந்த நாளையொட்டி 1992-ல் 230 கைதிகளும், 1993 ஆண்டு 132 கைதிகளும், 1994 ஆம் ஆண்டு 163 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். செம்மொழி மாநாட்டைவிட ஜெயலலிதாவின் பிறந்தநாள் புனிதமாக இருக்கலாம்.

எனக்குள்ள வேதனையெல்லாம் பத்திரிகையாளர்கள் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும்போது இந்தத் தகவல்களை அவருக்கு நினைவூட்டினால் தவறுகள் மீண்டும் மீண்டும் வராது.

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

நடப்பு ஆண்டில் பொறியியல் கல்வியில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிலும் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பஸ் கட்டணம் உயராது

தமிழக அரசு சார்பாக மத்தியில் உள்ளவர்களுக்குத் தெரிவித்த கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்காமல், பெட்ரோல் டீசலுக்கு அவர்கள் உத்தேசித்ததைக் காட்டிலும் ஓரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.150 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார் முதல்வர்.

ஓய்வு பெறுவதாக நான் கூறவில்லையே!

அப்போது, ‘செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாகக் கூறினீர்களே, அந்தத் திட்டம் இப்போது இருக்கிறதா?’ என முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே முதல்வரின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் எழுந்து முதல்வர் அருகே வந்தார்.

அப்போது பதில் அளித்த முதல்வர், “ஓய்வு பெறுவதாக நான் எப்போது கூறினேன்” என்றார்.

அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதாகக் கூறினீர்களே என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

“அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” என்று எடுத்துக் கொள்ளலாமா என்றதற்கு, “நீங்களே ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!” என்று கூறி செய்தியாளர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார்.
4 thoughts on “‘அரசியலில் ஓய்வா? நான் எப்போ சொன்னேன்?’ – முதல்வர் கருணாநிதி

 1. Dhiravidan

  எந்த தடை வந்தாலும் தமிழினமே அழிந்தாலும் தனக்கும் தன்னுடைய குடுபத்தாற்கும் பதவி வேண்டும் என்ற உன்னத கொள்கையுடன் இருக்கும் ஒரே உத்தம தலைவர் இவர்… !!!!

 2. M.S.Vasan

  த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ம‌ற‌திதான் தானைத்த‌லைவ‌ரின் ப‌ல‌ம்.
  ஆனாலும், அவ‌ரே எப்ப‌டி அவ‌ர் சென்ன‌தையே ம‌ற‌ந்தார்.
  திருகுவ‌ளை, குல‌விப் பருவ‌ம் கூட‌, இன்னும் ம‌ற‌க்காத‌வ‌ர்,
  (பிற‌ந்த‌ நாளில் முர‌சொலி க‌டித‌ம்) எப்ப‌டி தானே அறிவித்த‌
  ‘ப‌த‌வி வில‌க‌லை’ ம‌றுக்கிறார்? ம‌றைக்கிறார்? அல்ல‌து
  அவ‌ரும் ம‌க்க‌ளைப் போல‌வே ‘ம‌ற‌ந்தாரா’? விடை?

 3. paranthaman

  ஸ்டாலின் முதல்வர் கனவு அம்போ

 4. Krishna

  டேய்.. நீ அரசியலில் இருந்தோ ஓய்வு பெறமாட்டடா…ஒலகத்தில இருந்தே ஓய்வு பெறப்போற….சாகும்போதாவது நல்லவனா சாகுடா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *