BREAKING NEWS
Search

‘அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?’

‘அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?’

ரு நல்ல பத்திரிகை அல்லது பத்திரிகையாளனின் அடையாளம் என்ன தெரியுமா… நாட்டு நடப்பைச் சொல்வதோடு நில்லாமல், நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என வழிகாட்டுவதும்தான்.

தமிழ் நாளிதழ்களில் -பல வித விமர்சனங்கள் இருந்தாலும்-இன்றைக்கு தினமணியைத் தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் அந்த தகுதி இல்லை என்பதே உண்மை. தமிழ் ஈழம், அரசியல் நடப்பு, மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கு என பல விஷயங்களில் தினமணியின் பார்வை நேர் கொண்டதாகவே, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பு வரி என்ற பெயரில் தமிழக அரசு மக்கள் தலையில் புதிய வரியொன்றைச் சுமத்தியுள்ளது. இதுகுறித்து தினமணி இன்று வெளியிட்டுள்ள தலையங்கம் மக்கள் மனங்களை அப்படியே பிரதிபலிக்கிறது. ‘எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்குவது என முடிவெடுத்துவிட்டால், அப்புறம் ஆட்சி எதற்கு… தனியாரிடம் அதை ஒப்படைத்துவிடலாமே..’ என மாநில அரசின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துள்ளது.

அந்த தலையங்கம்:

editlogo-copyருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் “சாலைப் பாதுகாப்பு வரி’ என்கிற புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச் செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது என்பது நெடுஞ்சாலைத் துறையின் வேலை. இந்த வேலைக்காகத்தான் வாகன வரியும் ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணமும் ஏற்கெனவே வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஏனைய பல வரிவிதிப்புகளும் உள்ளன.

காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் நலனைப் பேணுவதற்காகத்தான் கட்டாய வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது காப்பீடு நிறுவனங்கள்தானே தவிர, மாநில அரசு அல்ல.

அப்படி இருக்க, எதற்காக இப்படியொரு புதிய வரி என்பது புதிராக இருக்கிறது. ஒருபுறம் மதுபான விற்பனை அமோகமாக நடப்பதால், அரசு கஜானா நிரம்பி வழிகிறது என்று மாநில அரசு மார்தட்டிக் கொள்கிறது.
இன்னொருபுறம், இலவசத் திட்டங்களை வாரி வழங்கி அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசு முயல்கிறது. ஆனால், மற்றொருபுறமோ, இதுபோல தேவையில்லாத அர்த்தமில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி அவர்களின் ஏகோபித்த வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

தேர்தலுக்கு முன்னால் பஸ் கட்டணத்தைத் திடீரென்று குறைத்தார்கள். தேர்தல் கமிஷனின் கண்டிப்பினால் குறைத்த கட்டணத்தை மறுபடி உயர்த்தினார்கள். இப்போதுதான் தேர்தல் எல்லாம் முடிந்து, அமோக வெற்றியும் பெற்றாகிவிட்டதே! மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக பஸ் கட்டணத்தை முன்பு திட்டமிட்டதுபோல குறைப்பார்களென்று எதிர்பார்த்தால், சம்பந்தாசம்பந்தமே இல்லாமல் இப்படி புதியதொரு வரியை விதிக்கிறது தமிழக அரசு!
சாலைகள் அமைப்பது, கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவைகளை மக்களுக்கு அளிப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவை ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இதற்காகத்தானே வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, வீட்டு வரி, வாகன வரி என்று மக்களிடமிருந்து வரிகள் பல வசூலித்தும் வருகின்றனர்?

அதற்குப்பிறகும் சாலைகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறது அரசு. மகாபலிபுரத்துக்கு யாராவது பயணிக்க வேண்டுமானால் அதற்கு சுங்கம் (டோல்) கட்டியாக வேண்டும். கேட்டால் கட்டணச் சாலையில் இலவசமாக எப்படி நீங்கள் பயணிக்க நினைக்கலாம் என்று கேட்கிறார்கள்? சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் அரசின் கடமைக்குக் கட்டாயக் கட்டண வசூல் என்பதே வேடிக்கையாக இல்லை?

வர்த்தக ரீதியிலான வாடகைக் கார்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வேன்கள், லாரிகள் மற்றும் பஸ்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். தனியார் வாகனங்களிடமிருந்து 20-ம் 30-ம் 40-ம் சாலைக்கட்டணம் என்ற பெயரில் போகும்போதும் வரும்போதும் வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையல்லவா? இதற்கு அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?

“மானியங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். எதுவும் இலவசமாக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அது கல்வியானாலும், மருத்துவ வசதியானாலும், சாலைகளானாலும் அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் தரத்தான் வேண்டும்’

– இது, கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கியின் பொருளாதார மேதைகள் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உபதேசம். அதன் விளைவுதான் பணம் படைத்தால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு வரி என்பது ஓர் அப்பட்டமான மோசடி. சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு முறையாகவும் விரைவாகவும் வாகனக் காப்பீட்டுக் கழகங்கள் நிவாரணம் அளிக்கிறதா என்பதை அரசு உறுதி செய்தாலே போதும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் அரசு நிவாரணம் கொடுத்தாலே போதும். அதையெல்லாம் விட்டுவிட்டு இதுபோல மோசடியான வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தி அவர்கள் காதில் பூ சுற்ற வேண்டிய அவசியமில்லை!
5 thoughts on “‘அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?’

 1. m

  இலவச திட்டங்களை முட்டாள்தனமாக ஏற்றுகொல்வதால் இது போன்ற மூளை இல்லா அரசியல்வாதிகளின் சட்டங்களை ஏற்றுக்கொல்லவேண்டும். இப்படிஎல்லாம் வரி விதித்தும் சாலைகளையும் பேருந்துகளையும் சரியாக பராமரிக்கிறார்களா? யார் கேட்டது தானியங்கி கதவு பேருந்துகளை? இதனால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. என்ன செய்வது எல்லவற்றிலும் கவர்ச்சியை எதிர்பார்க்கிறார் நம் முதல்வர். இல்லைஎன்றால் நமிதாவின்_____ ____ணை இன்றும் ரசிக்கமுடியுமா?

 2. Kamesh (Botswana)

  வினோ,

  தினமணியின் தலையங்கம் அருமை.. கழக ஆட்சியில் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலை என்றுதான் நிற்குமோ தெரிவில்லை.. சரியான தருணத்தில் தான் தந்திருக்கிறீர்கள்

  தேர்தலுக்கு முன் பஸ் கட்டனகுரைப்பு, தேர்தல் ஆணையம் கண்டிப்பினால் பின்பு வாபஸ் இப்போது தேர்தல் முடிந்தவிட்டபடியல் அந்த விஷயத்தையே வசதியாக மறந்து விட்டார்கள் … இதை இன்று வரை யாருமே தட்டி கேட்கவில்லை .. இப்பொழுது புதிதாக “சாலை பாதுகாப்பு வரி” , அந்த சாலையில் போகும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனால் சாலைக்கு பாதுகாப்பு வரி வேடிக்கையாக இல்லை.

  இப்படி புது புது வரியாக யோசிப்பவர்கள் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக எதாவது செய்தல் நன்றாக இருக்கும்

  Kamesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *