BREAKING NEWS
Search

அமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது! – சொல்கிறது இலங்கை

அமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது! – இலங்கை

கொழும்பு: இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கொழும்பில் வரும் ஜூன் 3 முதல் 5 வரை நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட குழுவினர் நிச்சயம் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.

வட இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவை உலகத் தமிழர்கள் வேதனையோடு நினைத்துப் பார்க்கும் இந்த சூழலில், அந்த வேதனையை வெற்றியாகக் கொண்டாடும் இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் துணை போகக் கூடாது என தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீட்டு முன் போராட்டம் நடத்தியது.

தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த விழாவுக்குப் போக வேண்டாம் என அமிதாப்பைக் கேட்டுக் கொண்டது. ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் சூழ்நிலையை அமிதாப்புக்குப் புரிய வைத்ததாகக் கூறப்பட்டது.

எனவே, இந்த விழாவில் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அமிதாப் கூறியிருந்தார். ஐஸ்வர்யா ராயும் இந்த விழாவில் பங்கேற்பதாக இருந்தது. அதே போல ராவணன் படத்தையும் கொழும்பு விழாவில் திரையிடவிருந்தனர்.

ஆனால் திரையுலகினர் மற்றும் வைகோ, சீமான், பழ நெடுமாறன் போன்ற தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

நேற்று வன்னியில் நடக்கவிருந்த தமிழக சின்னத்திரை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும், தமிழ் உணர்வாளர்களின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதையெல்லாம் பெரும் ஆத்திரத்துடன் பார்த்து வரும் இலங்கை அரசு, வெள்ளிக்கிழமை கொழும்பு சமுத்ரா ஓட்டலில் ஒரு பிரஸ்மீட் நடத்தியது.

இதில் பங்கேற்ற இலங்கை பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனா, அமிதாப் கொழும்பு விழாவில் பங்கேற்பதை யாரும் தடுக்க முடியாது என்றார் கோபமாக.

அவர் கூறுகையில், “அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்ய சிலர் முயற்சித்தும் வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அமிதாப்பும் ஷாரூக்கானும் பங்கேறபார்கள்.

இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இந்தத் தருணத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் இலங்கையில் நடப்பது, நாட்டின் முகத்தையே மாற்றி அமைக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த தனது இறுதி முடிவை அமிதாப் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் தலை ஐஸ்…

இதற்கிடையே அமிதாப் பச்சன் மற்றும் ஷாரூக்கானுக்கு ஐஸ் வைக்கும் விதத்தில் அவர்களுக்கு சிறப்புத் தபால் தலை வெளியிடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைக் கலைஞர்களுக்கு சிறப்புத் தபால் தலை இலங்கையில் வெளியாவது இதுவே முதல்முறை என்றும் ராஜபக்சே அலுவலகம் அறிவித்துள்ளது.

பாலிவுட்காரர்கள் இதில் குளிர்ந்துபோய் கொழும்பு போவார்களா, அல்லது சக இந்திய தமிழர்களின் உணர்வுகளை மதித்து புறக்கணிப்பார்களா… இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்துவிடும்!




One thought on “அமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது! – சொல்கிறது இலங்கை

  1. கிருஷ் சிவா

    அவர்களுக்கு மனசு இருக்கா என்று தெரிந்துவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *