BREAKING NEWS
Search

அதிமுகவிலிருந்து முத்துசாமி நீக்கம்! – ஜெ அதிரடி

அதிமுகவிலிருந்து முத்துசாமி நீக்கம்! – ஜெ அதிரடி

சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் முத்துசாமியை அக்கட்சியிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முத்துசாமியை ஜெயலலிதா நீக்கியுள்ளார். மேலும் முத்துசாமிக்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி உள்ளிட்ட மூவர் நீக்கப்பட்டுள்ளனர்.

முத்துசாமி அதிமுகவிலிருந்து இருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்த பகுதியில் செல்வாக்கு உள்ள அதிமுக பிரமுகர்.தற்போது அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளராக இருந்து வருகிறார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது அமைச்சரவையில் இருந்த முக்கிய புள்ளிகளில் முத்துசாமியும் ஒருவர். எம்.ஜி.ஆரால் போக்குவரத்து துறை அமைச்சரானார் முத்துசாமி.

91-96ல் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில் கட்சி தலைமையால் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அதனால்தான் அதிமுகவில் இருந்து விலகப்போவதாகவும் முத்துசாமி பேட்டி அளித்திருந்தார். இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதிமுக இதுவரை பலரை இழந்து நின்றாலும் முத்துசாமியை இழப்பது என்பது அந்த கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு என்று பேசப்பட்டது.

இதையடுத்து நேற்று முன் தினம் 26ம் தேதி அன்று காலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ‘முத்துசாமி என்னை சந்திக்கலாம். ஒரு தொண்டரை கூட நான் இழக்க விரும்பவில்லை. என்ன மனக்குறை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது, எதுவாக இருந்தாலும் அவர் எப்போது விரும்பினாலும் என்னைச் சந்திக்கலாம். அவருக்கு என்ன பிரச்சனையோ அது பற்றி என்னிடம் பேசலாம். நிச்சயமாக அதற்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன்’ என்று இறங்கி வந்தார்.

ஆனால் முத்துசாமி ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. மாறாக 6 பக்க கடிதம் ஒன்றை ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் அதிமுக செயற்குழு கூடியது. அதில் முத்துசாமி கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதம் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் முத்துசாமி கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தாகத் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்துசாமி, “நானே உட்கார்ந்து அந்தக் கடிதத்தை எழுதி இரவு 7 மணி அளவில் கிடைக்கும்படி அனுப்பினேன். கடிதம் கிடைத்தவுடன் என்னை இன்று அழைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.

அதற்கு மாறாக நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சிக்காரர்கள் என்னை திட்டியிருக்கிறார்கள். ஜெயலலிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் என்னை திட்டி விமர்சித்தது, அதற்கு அனுமதி அளித்தது நியாயமா? அவர் கடிதம் எழுதி இருக்கிறார். சற்று பொறுத்திருங்கள் என்று ஜெயலலிதா அவர்களிடம் கூறியிருக்கலாமே?” என்றார்.

மேலும், திமுகவில் சேர்வது குறித்து நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. ஆதரவாளர்களின் விருப்பங்களையும் தெரிந்து கொண்டுதான் முடிவெடுக்கப்படும். ஏற்கனவே திமுகவுக்கு போகலாம் என்று கூறினார்கள். இந்நிலையில் அதிமுக செயற்குழுவில் என்னை திட்டியது தொடர்பாக ஆதரவாளர்கள் விவாதித்து வருகின்றனர், என்று கூறியிருந்தார்.

நீக்கம்

இதையடுத்து முத்துசாமியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்றோ அல்லது நாளையோ திமுகவில் முத்துசாமி இணைவது அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. முத்துசாமியுடன் நீக்கப்பட்ட  முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைத் தலைவருமான கரூர் சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைகிறார்கள்.




One thought on “அதிமுகவிலிருந்து முத்துசாமி நீக்கம்! – ஜெ அதிரடி

  1. M.S.Vasan

    ஜூன் 3 -ஆம் நாள், கலைஞரின் பிறந்த நாள் அன்று இநைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *